அன்பின் வழியது

தொலை பேசி, இன்டர்நெட் இல்லாத அமைதியான வாழ்க்கை, தொலைக்காட்சி இல்லாத மாலை நேரம், குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த நாட்கள் என்றெல்லாம் Youtube- ல் வலம் வரும் AI வீடியோக்களை சமீப காலமாக  நாம் அனைவருமே கடந்து வந்திருப்போம் உங்களுக்கு அதே போன்ற அனுபவத்தை எழுத்தின் மூலம் தரும் புத்தகம் தான் "அன்பின் வழியது".

எளியள் என்ற புனைபெயருக்கு ஏற்றார் போல மிக எளிய நடையில் விறுவிறுப்பு சேர்க்கிறேன் என்ற பெயரில் கற்பனைகளை கலக்காமல் தன் மனதில் உள்ளவற்றை அருகில் அமர்ந்து கேட்கும் தோழிக்கு கூறும் தோரணையில் திருமதி ராதா பரசுராம் அவர்கள் எழுதிய புத்தகத்தை அண்மையில் வாசிக்கும் வாய்ப்பு அமைந்ததை நினைத்து மகிழ்கிறேன், ஏன்?! வாருங்கள் கூறுகிறேன்!


புத்தக ஆசிரியர் தான் பிறந்த வருடத்திலிருந்து புத்தகத்தை துவங்கி நம்மை சுதந்திர இந்திய தெருக்களுக்கு கையை பிடித்து அழைத்துச் செல்கிறார். மக்களின் வாழ்கை முறை, அக்காலத்து கட்டிடங்களின் அமைப்பு, வீதிகளில் பல்வேறு பொருட்களை கூவி விற்பவர்கள் எவ்வாறு சௌராஷ்ட்ர மொழியில் கூச்சமின்றி விற்றார்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டே வருகிறார் முக்கியமாக நம்மவர்கள் ரகசியமாக மாமிச உணவுகளை உட்கொள்ளத் துவங்கிய நிகழ்வுகளை படிக்க ஆச்சர்யமாக இருந்தது!

அக்காலத்தில் நெசவாளர்கள் தங்களை ராஜாக்கள் என்று கூறிக்கொண்டார்கள் என்றும்  தாங்கள் அமர்ந்து நெய்யும் பலகையை "அரச அரியணை" என்று பெருமை அடைந்தார்கள் என்பதைக் கேட்கும் பொழுது தங்களின் வாழ்வாதாரத்திற்கே இத்தொழிலை நம்பி திண்டாடும் இன்றைய கைத்தறி தொழிலாளர்களின் நிலை கண் முன்னே வருவதை தவிர்க்க முடியவில்லை. 

நாட்டுப்பற்று, கடவுள் பக்தி போன்றவற்றை எல்லாம்  எவ்வாறு வீட்டிலேயே கற்றுத் தந்தார்கள் (instill) என்பதை படிக்கும் பொழுது பெருமையாக இருந்தது ஏனென்றால் 40 வருடங்களுக்கு முன் பள்ளிகளில் மட்டுமே இதைப் பற்றி எல்லாம் பேசுவார்கள் இப்பொது அதுவும் சந்தேகமே என்று நினைக்கிறேன்.

ஆண் பெண் பேதமின்றி எவ்வாறு தங்களை வளர்த்தார் என்று தந்தையைப் பற்றியும், குடும்ப பொறுப்புகளை சுமந்தாலும் அக்காலத்து பெண்கள் எவ்வாறு தங்களால் முடிந்த சிறு தொழில்களை வீட்டிலிருந்த படியே செய்து பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்தார்கள் என்றும்  நூலாசிரியர் நமக்கு பூடகமாக கோடிட்டு காட்டி இருக்கிறார்.

நதியில் மிதந்து செல்லும் இலை எவ்வாறு அதன் நீரோட்டத்திற்கேற்ப தன்னை திருப்பிக் கொள்கிறதோ அதே போல் நூலாசிரியரும் தனது வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். தனது control-ல் அதைக் கொண்டு வரவேண்டும் என்றெல்லாம் பெரிய முயற்சிகளை அவர் செய்யவில்லை எனினும் தனது பாதையில் வரும் வாய்ப்புகளை மிகச் சரியாக அவர் பயன்படுத்தத் தவறவில்லை!

தமிழ் மற்றும் இலக்கியப்பற்றால் நாடு போற்றும் கவிஞரின் நட்பை அவர் ஈன்ற விதம் நமக்கும் நம் மனதில்  தோன்றும் எண்ணங்களை தயங்கமின்றி  நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்ற தைரியத்தை கொடுக்கிறது  

அவரின் திருமணத்திற்குப் பிந்தைய அனுபங்களான அமெரிக்க வாழ்க்கையை படிக்கும் பொழுது இக்கால வெளிநாட்டு வாசிகளான நாமெல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்று எண்ணத் தோன்றும் அதே சமயம் நாம் எவ்வளவு சுயநலக்காரர்களாக மாறிவிட்டோம் என்பது "தனது தாய் மட்டுமல்லாது உடன் பிறந்தோரையும் இந்த அந்நிய மண்ணிற்கு விருந்தாளிகளாக அவர் அழைத்து வந்த விதத்தைப் பற்றி படிக்கும் பொழுது தெரிகிறது". நாம் சுற்றுலா விசாவில் பெற்றோரர்களை அழைத்து வருவதெல்லாம் நம் தேவைக்காக மட்டும் தானே.

பொதுவாகவே அயல்நாட்டில் வசிக்கும் நாமெல்லாம் உணர்ச்சிகளை (Emotions) சந்தோஷமோ, துக்கமோ வெளிக்காட்ட வாய்ப்பில்லாமல் எவ்வாறு பூட்டி வைக்கிறோம் என்பதை தனது சகோதரரின் மரணத்திற்கு சென்ற நிகழ்ச்சியை விவரித்ததன் மூலம் உணர்த்துகிறார்.

 சில மாதங்கள் தாய் நாட்டிற்கு சென்று விட்டு திரும்பும் மனைவியை வரவேற்க கணவர் செய்த சிறிய செய்கைகள் (Subtle but romantic) என் மனதை மிகவும் கவர்ந்தன சொல்லப்போனால் இந்த புத்தகத்திலேயே எனது favorite part அதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! 

ஆன்மீகத் தேடல், தியானம் என்று தனது ஆர்வம் பல தளங்களில் சென்றதையும் அதை எவ்வாறு குடும்ப நபர்களின் துணையோடும் ஒத்துழைப்போடும் ஆராய்ந்து தனக்கு வேண்டியவற்றை அவற்றிலிருந்து அறிந்து தெளிந்து கொண்டதோடு மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்க தன்னால் முடிந்த அளவு எவ்விதம் முயல்கிறார் என்ற தன் நிகழ்காலத்தோடு புத்தகத்தை முடிக்கிறார் திருமதி ராதா பரசுராம் அவர்கள்.

ஆசிரியரின் சமகாலத்தவர்கள் இப்புத்தகத்தை படித்தால் தங்களின் இனிய மலரும் நினைவுகளுக்குள் பயணித்து விட்டு வரலாம். என்னைப் போன்று  90-களில் மதுரையை அறிந்தவர்களுக்கு கண்ணெதிரே பார்த்திராத  ஆனால் பெரியவர்கள் பேச கேட்ட பல விவரங்களை மறுமுறை விரிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கலாம். Gen Z குழந்தைகளுக்கோ இது ஒரு வாழ்வியல் ஆவணம்.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஆசிரியர் அவர் விவரிக்கும் இடங்களையும் மனிதர்களையும் புகைப்படங்களாக இங்கு இணைத்தால் இளம் தலைமுறையினருக்கு நல் அனுபவமாக இருக்கும் என வேண்டிக் கொள்கிறேன்.

பின் குறிப்பு - தனிப்பெரும் பெண் ஆளுமையாக மட்டுமே நான் அறிந்த நூலாசிரியரை இவ் வாசிப்புக்குப் பின் குடும்பத்தில் ஒருவராக எண்ணுகிறேன், அடுத்த முறை நேரில் சந்திக்கும் பொழுது அவரின் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள பல்வேறு வினாக்களுடன் காத்திருக்கிறேன்! 

திருமதி ராதா பரசுராமின் "பூரண உள்ளொளி கண்டடைதல்" புத்தக விமர்சனத்தை தவற விட்டிருந்தால்  கீழுள்ள இணைப்பை தொடவும் 👇

https://nirmalasg.blogspot.com/2026/03/blog-post.html

ஆசிரியரை தொடர்புகொள்ள - 832-533-8242.

-நிர்மலா கணேஷ்.


Comments

  1. My mom used to say this too “ஆண் பெண் பேதமின்றி எவ்வாறு தங்களை வளர்த்தார் என்று தந்தையைப் பற்றி”. Apparently my grand dad used to quote Bharathiyar and used to encourage my Mom and Mousis to be bold, courageous and face issues head on.

    “நாம் சுற்றுலா விசாவில் பெற்றோரர்களை அழைத்து வருவதெல்லாம் நம் தேவைக்காக மட்டும் தானே.” I don’t quite agree with the author (you, if it is your thoughts 😀) on this. We have brought our parents here just to show them around and share the love and I’m pretty sure lot of you have done the same. Not everyone brings their parents just to help during childbirth.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

சூரசம்ஹாரம்