உ(யு )காதிப் பண்டிகை
வாரணாவத அரக்கு மாளிகையை எரியூட்டி சுரங்கப் பாதை வழியாக விதுரரின் உதவியில் தப்பிய பாண்டவர்கள் இடும்ப வனத்தில் சில காலம் வாழ்ந்து வந்தனர் . கௌரவர்களின் சதியிலிருந்து தாங்கள் தப்பியதை யாரும் தெரிந்து கொள்ளாதிருக்கவும் தங்கள் சுய அடையாளத்தை மறைக்கும் பொருட்டும் அந்தணர்கள் போல் மாறுவேடமிட்டு ஏகசக்கராநகர் என்னும் கிராமத்திற்கு வந்தனர் பாண்டவர்களும் குந்தியும் . அங்கு ஓர் பிராமணர் அவர்களுக்கு தன்னுடைய வீட்டில் தங்க அனுமதி அளித்தார். ஒரு நாள் இரவு அந்தணரும் அவர் மனைவியும் எதோ தங்களுக்குள் பேசிப் புலம்பிக் கொண்டிருப்பதையும் அதைத் தொடர்ந்து மனைவியின் அழுகுரல் ஓசையையும் குந்தி கேட்க நேர்ந்தது . அவர்களிடம் நடப்பதென்ன என்பதை அறியும் பொருட்டு குந்தி வினவினார் . அதற்கு அந்தணர் ஏகசக்கராநகரில் சிறிது நாட்களாக பகாசுரன் என்ற அரக்கன் அட்டூழியம் செய்து வருவதாகக் கூறினார். "அவன் கிராமத்தில் புகுந்து மனிதர்களையும் கால்நடைகளையும் வேட்டையாடி எங்கள் குடிசைகளை துவம்சம் செய்து கொண்டிருந்தான் . எவராலும் அவனை வெல்ல முடியவில்லை இறுதியில் எங்கள் அரசர் அவனிடம் ஓர் உடன...