உ(யு )காதிப் பண்டிகை
வாரணாவத அரக்கு மாளிகையை எரியூட்டி சுரங்கப் பாதை வழியாக விதுரரின் உதவியில் தப்பிய பாண்டவர்கள் இடும்ப வனத்தில் சில காலம் வாழ்ந்து வந்தனர் . கௌரவர்களின் சதியிலிருந்து தாங்கள் தப்பியதை யாரும் தெரிந்து கொள்ளாதிருக்கவும் தங்கள் சுய அடையாளத்தை மறைக்கும் பொருட்டும் அந்தணர்கள் போல் மாறுவேடமிட்டு ஏகசக்கராநகர் என்னும் கிராமத்திற்கு வந்தனர் பாண்டவர்களும் குந்தியும் . அங்கு ஓர் பிராமணர் அவர்களுக்கு தன்னுடைய வீட்டில் தங்க அனுமதி அளித்தார்.
ஒரு நாள் இரவு அந்தணரும் அவர் மனைவியும் எதோ தங்களுக்குள் பேசிப் புலம்பிக் கொண்டிருப்பதையும் அதைத் தொடர்ந்து மனைவியின் அழுகுரல் ஓசையையும் குந்தி கேட்க நேர்ந்தது . அவர்களிடம் நடப்பதென்ன என்பதை அறியும் பொருட்டு குந்தி வினவினார் . அதற்கு அந்தணர் ஏகசக்கராநகரில் சிறிது நாட்களாக பகாசுரன் என்ற அரக்கன் அட்டூழியம் செய்து வருவதாகக் கூறினார். "அவன் கிராமத்தில் புகுந்து மனிதர்களையும் கால்நடைகளையும் வேட்டையாடி எங்கள் குடிசைகளை துவம்சம் செய்து கொண்டிருந்தான் . எவராலும் அவனை வெல்ல முடியவில்லை இறுதியில் எங்கள் அரசர் அவனிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார் . அதன் படி ஒவ்வொரு நாளும் பகாசுரனுக்கு வேண்டிய உணவுகளை ஓர் வண்டியில் எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமுள்ள குகைக்கு ஒருவன் செல்ல வேண்டும் . உணவு கொண்டுசெல்பவனும் அன்றைய தினத்திற்கு பகாசுரனின் இரையாக ஆகக் கடவான் . அவ்வாறு செல்லத் தவறும் பட்சத்தில் பகாசுரன் ஊருக்குள் புகுந்து அனைவரையும் கொன்று குவித்துவிடுவான் " என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
"நாளை பகாசுரனுக்கு உணவு கொண்டு செல்ல வேண்டிய முறை எங்களுடையது . எங்கள் குடுப்பதிலோ இவரைத் தவிர ஆண்மகன் இல்லை. என் மகனோ பாலகன் அவனை அனுப்ப மனம் ஒப்பவில்லை . இவர் இறக்கும் பட்சத்தில் எங்களைக் காக்க யாரும் இல்லை . நாங்கள் அனைவரும் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை " என்று அந்தணரின் மனைவி அழுது புலம்பினாள் . குந்தி "அம்மா ...புரந்து திரிந்த எங்களுக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் அளித்தீர் ஆதலால் நாங்களும் உங்கள் குடும்பத்தில் ஒருவரே...உங்களுக்கு ஏற்பட்ட இடர் எங்களுக்கும் ஏற்புடையதே . என் மகன் நாளை பகாசுரனுக்கு உணவு எடுத்துச் செல்வான்" என்று வாக்களித்தார் .
மறுதினம் மாலையில் வண்டி நிறைய உணவோடு பீமன் புறப்பட்டான் . குகையை அடைந்த பீமன் எடுத்துச் சென்ற அனைத்து பண்டங்களையும் ஒன்று விடாமல் தின்று தீர்த்து ஏப்பம் விட்டான் . பகாசுரனுக்காக வண்டியில் அமர்ந்து காத்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குகையிலிருந்து வெளிப்பட்ட பகாசுரன் தன்னுடைய உணவை உண்டு அமர்ந்திருந்த பீமனைக் கண்டு கோபத்தில் கொப்பளித்தான் . இருவருக்கும் இடையே கடும் மோதல் எழுந்தது . கிருஷ்ணனின் அருள் மறைமுகமாக பீமனைக் காக்க பாகாசுரனை கொன்று வெற்றி மாலை சூடினான் பீமன் .
பகாசுரன் குகையிலிருந்து உயிருடன் தப்பியதோடு மட்டுமல்லாமல் அரக்கனையும் பீமன் கொன்ற செய்தி ஏக சக்கராநகர் முழுதும் பரவியது . கிராமமே விழாக்கோலம் பூண்டது . அனைவரும் அதீத மகிழ்ச்சியில் கூத்தாடினார். பாண்டவர்களோ தாங்கள் யார் என்ற உண்மை வெளிப்படும் முன்னரே அக்கிராமத்தை விட்டு அகன்றனர்.
பகாசுரன் இறந்த அந்த தினமே "யுகாதிப் பண்டிகை " என்னும் பெயரில் தெலுங்கு வருடப்பிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது .
Comments
Post a Comment