அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்
"நானே கடவுள் என்னை அன்றி யார் பெயரையும் உச்சரிக்க கூட அனுமதி இல்லை" என்று மூன்று உலகங்களையும் வென்று விட்ட மமதையில் இருந்த இரண்யகசிபுவிற்கு மகனாகப் பிறந்த பிரஹலாதன் ஹரியைத் தவிர வேறொரு நாமத்தை தனது நா கூறாது என்று உறுதியுடன் இருந்து தனது உயிரையும் துறக்க தயாராக இருந்தான்.
"எங்கே உந்தன் நாராயணன்" என்று தந்தை வினவ " எங்கும் வியாபித்திருக்கும் பரந்தாமன் இந்த தூணிலும் இருப்பான்..எந்த துரும்பிலும் இருப்பான்" என்று கூறிய மைந்தன் முன் இரண்யகசிபு தூணை சுக்கு நூறாக உடைக்க அதிலிருந்து தோன்றிய நரசிம்மன் அவ்வரக்கனின் நெஞ்சைக் கிழித்து அவனின் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த கதை.
கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த நரசிம்மரின் ஆவேசம் அங்கு சாந்தமடையவில்லை. அரண்மனையை விட்டு வெளியேறிய சிங்கமுகன் அருகிலிருந்த காட்டில் புகுந்து துவம்சம் செய்தார். அங்கு வசித்துக் கொண்டிருந்த பழங்குடி மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு பயத்தில் மறைந்து வாழத் துவங்கினர்.
காலங்கள் கடந்தது. தனது அவதாரத்தின் பலன் நிறைவடைந்த பிறகும் விஷ்ணு வைகுண்டம் திரும்பவில்லை. சிங்க முகத்துடன் மிருக குணத்துடன் காட்டிலேயே அலைந்து கொண்டிருந்தார் அம்மக்களும் அவதியுற்றுக் கொண்டிருந்தனர்.
அன்றும் நரசிம்மரை பயந்து கொண்டிருந்த தன் மக்களை அக்குலத் தலைவர் அமைதிப்படுத்த அவரின் மகள் செஞ்சு லட்சுமி "இன்று நான் இங்கு பாதுகாப்பிற்கு நிற்கிறேன்..என்னைத் தாண்டியே எவரும் செல்ல வேண்டும் " என்று காவலுக்கு நின்றாள்.
வழக்கம் போல் வழியில் இருக்கும் எதையும் பொருட் செய்யாமல் காற்றாற்று வெள்ளம் போல காட்டை அழித்தபடி அங்கு வந்த நரசிம்மர் செஞ்சு லெட்சிமியைக் கண்டதும் ஆக்ரோஷம் குறைத்து அமைதி அடைந்தார். இதைக் கண்ட அம்மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
பின் அக்குலத்தலைவர் தனது மகளை அவருக்கே மணமுடித்து வைத்தார்.
யார் இந்த செஞ்சுலட்சுமி?!
தவத்தின் மூலம் பல்வேறு வரங்களைப் பெற்ற இரணியகசிபு பூலோகம் முழுதையும் தனது கட்டிற்குள் கொண்டுவந்தான் பின் தேவலோகத்தையும் வென்ற அவன் அங்குள்ள அனைத்து செல்வத்தையும் அபகரித்துக் கொண்டு வர மகாலட்சுமியும் அவனுடன் செல்ல வேண்டி வந்தது.
இதை முன்பே அறிந்திருந்த வைகுண்டநாதன் மகாலட்சுமியிடம் இருந்த லட்சுமி கடாட்சத்தை தனியே எடுத்து ஓர் மலருக்குள் மறைத்து வைத்துவிட்டார்.
செஞ்சு குலத்தின் தலைவருக்கு பல வருடங்களாக குழந்தை இன்றி பல்வேறு பூசனைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி வந்தார். அம்மலரை அங்கு நாரதர் சேர்க்க மஹாலக்ஷ்மியே அவருக்கு மகளாகப் பிறந்தார்.
இதனாலேயே இரண்யகசிபுவிடம் இருந்த லட்சிமியால் அமைதிப்படுத்த முடியாத நரசிம்மரை செஞ்சு லட்சுமியால் யோக நரசிம்மராக மாற்ற முடிந்தது. ஹரியும் அவதார பலன் நிறைவடைந்து மஹாலக்ஷ்மியுடன் வைகுண்டம் திரும்பினார்.
ஆந்திர மாநிலத்தின் அஹோபில மடத்தில் அமைதியே உருவான யோக நரசிம்மரை லட்சுமி சமேதராகக் காணலாம்.
செஞ்சு இன பழங்குடியினர் ஆந்திர, கர்நாடக, ஒரிசா மாநிலங்களில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
சொன்னவர் - துளசி
Comments
Post a Comment