கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

பூலோகத்தில் பெயரளவிலேயே அரசர்களாக விளங்கும்  அசுரர்களின் எண்ணிக்கை அதிகமானதால்  பாரம் தாள முடியாமல் பிரம்மனிடம் சென்று முறையிட்டாள் பூமாதேவி. அவளை அழைத்துக்கொண்டு தேவர்கள் புடைசூழ முக்கண்ணன் உடன் வர பாற்கடல் வாசனை காணச் சென்றார் பிரஜாபதி.

அங்கோர் அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட நான்முகன் தேவர்களை நோக்கி "பூமாதேவியின் மனக்கவலையை  ஸ்ரீனிவாசன் ஏற்கனவே அறிந்திருக்கிறார் ஆகவே அவர் பூலோகத்தில் யது குலத்தில் மானிடராக அவதரிக்க இருக்கிறார் ஆகவே தேவர்களும் தேவ ஸ்த்ரீகளும் பூலோகத்தில் பிறவியை அடைந்து, எவ்வளவு காலம் பகவான் பூபாரத்தை குறைக்க பூவுலகில் சஞ்சரிப்பாரோ அத்துனை காலம் நீங்களும் பூமியிலிருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.

யது குல தலைவனாகிய  சூரசேனர் மதுராவிலிருந்து அத்தேசத்தை ஆண்டு வந்தார். அவரின் புதல்வர் வசுதேவர் தாம் மணமுடித்த தேவகியுடன் தேரிலேறி புறப்பட்டான். உக்கிரசேனனின் புத்திரனும் தேவகியிடத்தில் அதீத அன்பு கொண்ட தமையனுமாகிய கம்சன் தேரோட்டியாக கடிவாளத்தை பிடிக்க "அறிவுகெட்டவனே எவளை வாகனத்தில் கொண்டு செல்கிறாயோ அவளுடைய எட்டாவது கர்ப்பம் உன்னைக் கொல்லப்போகிறது" என்று அசரீரி ஒலித்தது.

அதைக்கேட்ட கம்சன் கொந்தளித்து தேவகியை கொல்ல வாளைக் கையிலெடுத்தான். அவனை பல்வேறு நல் வார்த்தைகளால் சமாதானப் படுத்திய வசுதேவர் தங்களுக்கு பிறக்கும் புத்திரர்களை அவனிடத்தில் கொடுத்து விடுவதாக வாக்களித்தான்.

பிள்ளைகளை கம்சனிடம் கொடுக்க சம்மதிக்கலாமா என்றால் "ஒருவேளை இவர்களுக்கு குழந்தை பிறக்காமல் போகலாம், கம்சன் இறந்து போகலாம் அல்லது தெய்வ வாக்கு பலிக்கலாம் எதுவானாலும் அவ்வேளையில் தேவகியின் உயிரைக் காப்பதே வசுதேவரின் எண்ணமாக இருந்தது.

ஆனால் மறுவருடமே தேவகி கீர்த்தி வர்மன் என்ற மகனை ஈன்றாள். தனது வாக்கின்படி புத்திரனுடன் வந்த வாசுதேவனைக் கண்ட கம்சன் மகிழ்ந்து இந்த குழந்தை போகலாம் உங்களின் எட்டாவது கர்ப்பத்தில் அல்லவா எனக்கு சாவு கூறப்பட்டது என்று அனுப்பி வைத்தான்.

ஆனால் நாரதர் கம்சனின் அவைக்கு வந்து "விஷ்ணு பூமியில் அவதரிக்க இருப்பதாகவும் வாசுதேவரை சார்ந்த அனைவரும் தேவர்கள் என்றும் கம்சனின் பரிவாரங்கள் அசுரர்கள்" என்றும் கூறிவிட்டுச் சென்றார். தோன்றுவதெல்லாம் தன்னை கொல்லவரும் விஷ்ணுவே என்று நம்பிய கம்சன் அனைத்து சிசுவையும் கொன்றான். தேசத்தையும் ஆளத் துவங்கினான். யாதவர்களுக்கு துன்பம் விளைவித்தான்.

தேவகியின் ஆறு குழந்தைகளும் கொல்லப்பட்ட பின் ஆதிசேஷனே ஏழாவது கர்ப்பமாக வந்தார். 

அப்போது அனைவரையும் காக்கும் பரம்பொருள் விஷ்ணு யோகமாயையிடம் "நீ ஆயர்பாடிக்கு சென்று அங்கு கம்சனிடத்தில் இருந்து மறைந்து வாழும் வசுதேவரின் மனைவியாகிய ரோகிணியின் வயிற்றில் என்னுடைய அம்சமான சேஷனை தேவகியிடமிருந்து எடுத்துக்கொண்டு போய் வைக்க வேண்டும்" என்று கட்டளை இட்டார்.

மங்கலஸ்வரூபியே.. அதன் பின் நான் தேவகியின் புத்திரனாக அவதரிப்பேன் நீயும் யசோதையிடம் தோன்றுவாயாக என்று கூறினார்.

மனிதர்கள் உனக்கு  துர்க்கை, காளி, விஜயா, வைஷ்ணவி, ஈஷா, சாரதா முதலிய பெயர்களையும் இடங்களையும் ஏற்படுத்தி பூஜிக்கப் போகிறார்கள். 

உன்னிடமிருந்து ஆகர்ஷணம் செய்யப்பட்ட ஆதிசேஷன் இப்பூலகில் ஸங்கர்ஷணன் என்றும் இனியவனாகையால் ராமன் என்றும் பலம் மிகுந்தவனாதலால் பலபத்திரன்/ பலராமன் என்றும் அழைக்கப்படுவான் என்று கூறினார்.

மாயாதேவியும் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்ற, நித்திரை கலைந்த தேவகியின் கர்ப்பம் கலைந்ததாக அறியப்பட்டது.

தன்னுடைய அடுத்த கர்ப்பகாலத்தில் தேவகி முகம் மலந்தவளாக பொலிவு பெற்று ஒளிர்ந்தாள். தன்னைக் கொல்லப்போகும் விஷ்ணு இவள் கருவில் வந்திருப்பது உறுதி என்று கம்சன் நம்பினான் ஏனென்றால் இதற்கு முன் இவன் இப்படி இருந்ததில்லையே!

பகவானின் அவதார சமயம் நெருங்கியதும் ஜன்ம நக்ஷத்திரமான ரோகிணி உதயமாயிற்று. இருள் சூழ்ந்த நடுநிசிப்பொழுதில் ஜனார்த்தனன் அவதாரிகையில் தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்.




தாமரையை ஒத்த கண்களையும் நான்கு புஜங்களையும் சங்கு சக்கரம் முதலிய ஆயுதங்களை ஏந்தி ஸ்ரீவஸ்தம் என்னும் அடையாளமுள்ள மார்பும் கௌஸ்தூப மணி விளங்கும் கழுத்தும் உடையவனாய் மஞ்சள் பட்டாடை அணிந்து பிரகாசித்த அந்த அற்புதக்குழந்தையை வசுதேவர் கண்டார் பின் கைகூப்பி துதிக்கலானார்.

ஒளிபொருந்திய அப்பிரசவ அறையில் மகாலெக்ஷணம் பொருந்திய தனது புத்திரனை நோக்கி தேவகி "கம்சனிடத்தில் பயமடைந்திருக்கும் எங்களைக் காத்தருளும். உங்களின் இம்மகாரூபத்தை ஊனக்கண் படைத்தவரிடம் காட்டவேண்டாம், மறைத்தருளும் என்று வேண்டிக் கொண்டாள்.  பிரளய காலத்தில் அனைத்து உயிர்களையும் காத்த இவ்வுருவில் மானிட உலகில் என் கருவில் தோன்றியது ஆச்சர்யம் என்று கூறினாள்.

பகவான் "அன்னையே முற்பிறவியில் பிருஷ்ணி- ஸுதபஸ் என்னும் பெயரில் தம்பதிகளாக தாங்கள் புத்திரப்பேரன்றி  வாழ்ந்த போது உங்கள் முன் தோன்றிய என்னிடம் மோக்ஷத்தை வேண்டாமல்  நானே தங்களுக்கு மகனாக அவதரிக்க வேண்டும் என்று வேண்டினீர்கள். என்னைப் போல் இம்மூன்று உலகிலும் எவரும் இல்லை ஆகையால் நானே பிருஷ்ணிகர்ப்பன் என்ற பெயரில் உன் கருவில் உதித்தேன்.

பின் அதிதி - காஷ்யபராக பிறந்த உங்களுக்கு உபேந்திரனாக அவதரித்தேன், குட்டையான உருவத்தால் வாமனன் என்று அழைக்கப்பட்டேன்.

இதோ இப்போது மூன்றாவது முறையாகவும் உங்களுக்கு பிறந்து எனது சொல்லை சத்தியமாக்கிவிட்டேன். உங்களுக்கு இந்த திவ்ய ரூபத்தை காட்டியது பூர்வ ஜென்மத்தை ஞாபகப்படுத்துவதற்காகவே அன்றி வேறில்லை என்று கூறிவிட்டு என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள் அங்கு யசோதையிடம் பெண்ணாக  பிறந்திருக்கும் யோகமாயையை இங்கு கொண்டு வாருங்கள். யமுனை வழி விடும் என்று கூறினார்.

பக்தர்களின் பயத்தை போக்கும் பரம்பொருள் வசுதேவரின் மனதில் அசாத்திய தைரியத்தை  வரவழைத்தார். யோகமாயையின் மாயையால் அனைவரும் இந்திரிய சக்திகளை இழந்து உறங்கத் துவங்கினர். அனைத்து வாயில்களும் திறந்து கொண்டன. ஆதிசேஷன் குடை பிடிக்க குழந்தை மழையில் நனையாமல் கோகுலத்தை அடைந்தது. யசோதை தனக்கு பிறந்தது ஆணா/ பெண்ணா என்று உணர்ந்திருக்கவில்லை.

நந்தகோபர் - யசோதையின் பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு திரும்பிய வசுதேவர் முன்போல் கைதியாக மாறினார். கதவுகள் மூடிக்கொண்டன. குழந்தையின் அழுகுரல் கேட்டு காவலர்கள் விழித்தெழுந்து கம்சனிடம் செய்தியைத் தெரிவித்தனர்.

பிரசவ அறையில் தேவகி இப்பெண்குழந்தையையாவது தனக்காக விட்டு விடும்படி கெஞ்சினாள் ஆனால் அசுர குணம் படைத்த கம்சனோ அக்குழந்தையின் காலை பிடித்து தூக்கி கல்தரையில் அடித்தான் உடனே அக்குழந்தை விஷ்ணுவின் தங்கையான அம்பிகையாக எட்டு கைகளுடன் ஆயுதமேந்தி அவன் முன் தோன்றி " மூடா உன்னைக் கொல்லக்கூடியவன் எங்கோ பிறந்துவிட்டான்.. ஏழைகளை துன்புறுத்தாதே" என்று கூறி மறைந்தாள்.

இதைக் கேட்ட கம்சன் "அசரீரியின் வாக்கை கேட்டல்லவோ உங்களை இம்சித்து பிரம்மஹத்தி தோஷம் செய்தவனானேன்" என்று அழுது புலம்பி அவர்களை விடுவித்தான்.

மந்திரிகளுடன் ஆலோசித்த கம்சன் "எங்கெங்கு பிறந்து பத்து நாட்களுக்குட்பட்ட அல்லது  மேற்பட்ட  குழந்தைகையெல்லாம் உள்ளதோ அவற்றை கொன்று விடுமாறு ஆணையிட்டான்".

அளவற்ற மகிமை வாய்ந்த உலக நாயகனாகிய கிருஷ்ணர் நந்த கோகுலத்தில் உதித்த நேரத்தில் கோபர்கள் பலவகை வாத்தியங்களை முழக்கி மகிழ்ந்தனர்.

கம்சனுக்கு கப்பம் கட்டுவதற்கு மதுராவிற்கு வந்த நந்தகோபர் வாசுதேவரை சந்தித்து கோகுலத்தின் நிகழ்வுகளை விவரித்தார் அப்போது வசுதேவர் கோகுலத்தில் ஆபத்துக்குறிகள் தோன்றுகின்றன என்று எச்சரித்து உடனடியாக அங்கு திரும்புமாறு பணித்தார்.

கம்சனால் ஏவப்பட்ட பூதனை மனித உருக்கொண்டு கிருஷ்ணனை கொல்லும் பொருட்டு அக்குழந்தைக்கு தனது ஸ்தனத்தை கொடுக்க பகவான் அவளுடைய உயிரையும் பாலோடு உறிஞ்சி அவளின் வாழ்க்கையை முடித்து வைத்தார்.

கேடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த பூதகி பகவானுக்கு பாலூட்டியதால் ஒரு தாயைப் போல நற்கதி அடைந்தாள் அவளுடைய பூத உடல் அகில் வாசனையுடன் புகை கிளப்பிற்று.

அதன் பின் கிருஷ்ணன் கம்சனால் பணிக்கப்பட்ட பல அசுரர்களை கொன்றான். பாலகனாக அவன் நடத்திய  பல்வேறு லீலைகளை கோகுலத்தில் வசிப்பவர்கள்  கண்டு ரசித்தனர்.

மேற்கூறிய நிகழ்வுகள் நாம் அனைவரும் அறிந்ததே அதை ஏன் மீணடும் வாசிக்க வேண்டும்?!

பகவானுடைய பாதத்தில் இருந்து பெருகிய கங்கையை பார்ப்பவர்கள், பருகுபவர்கள், ஸ்னானம் செய்பவர்கள் எவ்வாறு புனிதமடைகின்றனரோ அவ்வாறே வாசுதேவ கிருஷ்ணனுடைய கதையை கேட்பதும். சொல்லுகிறவர், சொல்லதூண்டுபவர், கேட்பவர் என இந்த மூன்று புருஷர்களையும் நற்கதி அடையவைக்கிறது.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

மூலம் - ஸ்ரீமத் பாகவத சாரம்.






Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..