ஏரி காத்த ராமரும் பக்த ராமதாஸும்

பக்த ராமதாஸ் 

பத்ராச்சல ராமதாஸ் என்னும் பக்த ராமதாஸ் "கோபண்ணா" என்ற பெயரில்  இன்றைய தெலுங்கானா மாவட்டத்தின்  கம்மம்  என்னும் நகரில் 1600-களில் வாழ்ந்தவர். ராம பக்தனான இவர் ராகவ ராமனை போற்றி பல்வேறு பாடல்களை எழுதி கர்நாடக இசையில்  கீர்த்தனைகளாகப் பாடியுள்ளார்.

இளமை முதலே ராம பக்தனான ராம்தாஸ் இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்ட காலத்தில் அவர்களிடம் வரிவசூல் செய்யும் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். அச்சமயத்தில் பத்ராச்சல ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக நிதி பற்றாக்குறை ஏற்பட தான் வசூல் செய்த வரிப்பணத்தை சற்றும் யோசிக்காமல் தந்து விட்டார்.

சில மாதங்களுக்குப் பின் இதை கண்டறிந்த அதிகாரிகள் ராமதாஸை சுல்தானின் முன் கொண்டு நிறுத்த அரசு நிதியை தவறாக கையாண்ட காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 12 வருடங்கள் சிறையில் இருந்த காலத்தில் ராமனை எண்ணி பல்வேறு பாடல்களை பாடியதாக நம்பப்படுகிறது.



பகவான் ராமரும் லக்ஷ்மணரும் அரசாங்கத்திற்கு தர வேண்டிய நிதியைத் தந்து சுல்தானிடமிருந்து அவரை விடுதலை செய்ததாக ஒரு கதையும் ஒளரங்கசீப்பின் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார் என்று நம்பப்பட்டாலும் பக்த ராமதாஸைப் பற்றிய மேல் கூறிய குறிப்புகள் கிழக்கிந்திய கம்பெனியின் பதிவுகளில் காணப்படுகிறது!

விடுதலை செய்யப்பட்ட பின் அவர் பத்ராச்சலத்திற்கு சென்று வாழ்ந்ததாகவும் அவரால் வழங்கப்பட்ட நிதியான தங்க நாணயங்கள் மூலவர் சன்னதியில் பதிந்திருந்ததாகவும் இன்றளவும் அதன் வடுக்கள் நிலத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏரி காத்த ராமர் 

                                 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செங்கல்பட்டு  மாவட்ட கலெக்டராக லயோனெல் ப்ளேஸ் (Lionel Blaze) என்னும் துரை பொறுப்பேற்று இருந்தார். மதுராந்தகம் ஏரியின் கரை மழை காலத்தில் உடைபட்டு ஊருக்குள் வெள்ளம் புகுவது வழக்கமான நிகழ்வாக இருந்து வந்தது. துரை இச்சம்பவத்தை தடுக்கும் பொருட்டு ஏரிக்கரையில் கூடாரம் ஒன்றை அமைத்து தங்கி இருந்தார்.

இவ்வருடமும் மழை விடாது பெய்து கொண்டிருந்தது. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட ஏரியின் கரை எப்பொழுது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிலை இருக்க அப்பகுதியில் கிரானைட் முதலிய கருங்கற்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருப்பதைக் கண்ட துரை அதைக் கொண்டு கரையை பலப்படுத்த எண்ணினார்.

ஆனால் அப்பகுதி மக்கள் அவை திலகவதி தயார் சன்னதி கட்டுமானப் பணிக்கானது என்று கூற "ராமர் சன்னதி இருக்கிறது இவ்வெள்ளப்பெருக்கிலிருந்து மக்களை காக்க அவரா வந்தார்?! அப்படியிருக்க மற்றுமொரு சன்னதி எதற்கு?" என்று கூறிவிட்டு தனது கூடாரத்திற்கு சென்று விட்டார்.

அன்று இரவு கடும் மழை கொட்டிக் கொண்டிருந்தது. கரையை தனது கூடாரத்திலிருந்து வெளிவந்து பார்வையிட்ட  துரையின் கண்களுக்கு இரு இளைஞர்கள் தோளில்  வில்லும் அம்பும் தொங்க கரையை பார்வை இட்ட படி ஏரியை சுற்றி வந்து கொண்டிருந்தனர். அவரைத் தவிர வேறு எவருக்கும் அக்காட்சி தென்படவில்லை. சிறிது நேரத்தில் மழையும் நின்றது ஏரியும் உடையாமல் காக்கப்பட்டது.

வந்தவர்கள் அயோத்தி ராமரும் அவரது தம்பி லெக்ஷ்மணனைத் தவிர வேறு அல்லர் என்பதை நம்பிய துரை கோவில் கட்டுமானப் பணிகளை தானே தலைமை ஏற்று தன்னுடைய பொருட் செலவில் முடித்து வைத்தார்.



108 அபிமான தேசங்களில் ஒன்றான மதுராந்தக ராமர் "ஏரி காத்த ராமர்" என்ற பெயரில் வழங்கப்படுகிறார். அக்கோவிலின் கல்வெட்டுகளில் துரையின் பெயரும் காணப்படுகிறது.

பக்த ராமதாஸை சிறையில் அடைத்தவர் துரை தான் எனவும் ஏரியைக் காத்தவர்கள் ராம லட்சுமணரே என்று பக்த ராமதாஸே துரைக்கு கூறினார் எனவும் இவ்விரு நிகழ்வுகளை இணைக்கும் கதைகளும் வாய்வழிக் கதைகளாகக் கூறப்படுகிறது.

ராகவ ராமனின் பிறந்த தினம் வரும் ஞாயிறு (ஏப்ரல் 6, 2025) அன்று மிக விமரிசையாக தேசம் முழுதும் கொண்டாடப்படுகிறது.

கதைகள் பல விதமாக இருந்தாலும் மனமொன்றி வழிபடும் பக்தர்களை கோதண்ட ராமன் ஒரு நாளும் கைவிடுவதில்லை என்பதே உண்மை. உலக நன்மை வேண்டி அவனை துதிப்போம்.

ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏

சொன்னவர் - துளசி 

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..