அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..
கடந்த ஜனவரி மாதம் உத்திர பிரதேச மாநிலத்தில் ராமரின் ஜன்ம பூமியான அயோத்தியில் பாரதப் பிரமர் மோடியால் ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட்டு பால ராமர் கோவில் திறக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.!!
தமிழகத்தின் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் பாற்கடல் வண்ணனாக வீற்றிருக்கும் ரங்கநாதர் அயோத்தியில் இருந்து வந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?!
தசரதனின் மைந்தன் ராகவ ராமன் இலங்கை வேந்தன் ராவணனை யுத்தத்தில் வென்று சீதையுடன் அயோத்திற்கு வருகிறான். அங்கு அவரின் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நிகழ்கிறது. அவ்விழாவிற்கு பல்வேறு அரசர்கள் வருகை புரிந்தனர் அவர்களுள் புதிதாக இலங்கை மன்னனாக முடி சூடியுள்ள விபீஷணனும் இருந்தான்.
அயோத்திக்கு அரசனான ராமர் அனைவருக்கும் அவரவர் விரும்பிய பரிசுகளை வழங்க தன்னை விட்டு பிரிய வேண்டியதை நினைத்து கலங்கிய விபீஷணனுக்கு விஷ்ணு பாற்கடலில் சஞ்சரித்த நிலையில் இருக்கும் சிலையை இலங்கைக்கு கொண்டு செல்ல வழங்கி இனி இவர் உன்னை வழி நடத்துவார் என்று கூறினார்.
விபீஷணனும் அக மகிழ்ந்து அச்சிலையை சுமந்த வண்ணம் ஆகாய மார்கமாக இலங்கைக்குச் சென்றார். செல்லும் வழியில் சற்று ஓய்வெடுக்க விரும்பி ஸ்ரீ ரங்கத்தில் காவேரிக் கரையோரம் சிலையை கீழே வைத்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவரால் அதை அசைக்கக் கூட முடியவில்லை.
கலங்கி நின்ற விபீஷணனின் முன் தோன்றிய வைகுண்ட நாதன் தான் கங்கையின் மடியில் இவ்விடத்திலேயே கோவில் கொள்ளப்போவதாகவும் தன்னுடைய அருள் பார்வை தெற்கு நோக்கி இலங்கையை நோக்கிய வண்ணம் அருள் புரியும் என்று கூறி மறைந்தார். அவ்வாறு ஸ்தாபிதம் செய்யப்பட்ட கோவில் தான் இன்றளவும் நாம் வணக்கும் ஸ்ரீ ரெங்கநாதர் ஆலயம்.
ஏன் வைகுண்டநாதன் இலங்கை செல்லவில்லை?!
கைலாயநாதன் ஈசனின் சடை முடியில் கோவில் கொண்டிருக்கும் கங்கையை பார்த்த காவேரிக்கு தனக்கு அவ்வாறான சிறப்பு எதுவும் அமையவில்லை என்று வருந்தி அச்சுதனை நோக்கி தவமிருந்தாள். தவம் கனிந்து அவள் முன் தோன்றிய ஸ்ரீ ஹரி நேரம் வருகையில் தான் அவள் மடியில் அமர்ந்த வண்ணம் பக்தர்களுக்கு அருள் பாலிக்க போவதாகக் கூறி மறைந்தார். அவ்வாக்கை நிறைவேற்றவே விபீஷணனின் கையிலிருந்து திருவரங்கம் என்னும் நிலத்திட்டில் அமர்ந்தார் வைகுண்டநாதன். பொங்கி வரும் காவேரி ஸ்ரீரெங்கத்தில் ரெங்கநாதனை மடியில் தாங்கிய பின் இரண்டாகப் பிரிந்து செல்வதை நில வரைபடத்தில் (Map) தெளிவாகக் காணலாம்.
ஸ்ரீ ரங்கநாதர் அயோத்திக்கு எவ்வாறு வந்தார்?
தசரதனின் தந்தையான அஜன் தீவிர விஷ்ணு பக்தன். அயோத்தியை ஸ்தாபிதம் செய்தவனும் அவனே. அவரின் பக்தியில் மகிழ்ந்து அவர் முன் தோன்றிய கேசவனிடம் அவரையே அயோத்திக்கு வந்து இருந்து வழி நடத்துமாறு அழைத்த அஜனிடம் தான் பாற்கடலில் வாசம் செய்யும் அதே கோலத்தில் ஓர் சிலையை கொடுத்து பூஜை அறையில் வைத்து வழிபடுமாறும் தான் அங்கிருந்து அயோத்தியை வழி நடத்துவதாகவும் கூறி மறைந்தார். அவ்வாறு தான் ரெங்கநாதர் அயோத்திற்கு வந்தடைந்தார்.
சொன்னவர் - துளசி
Comments
Post a Comment