சூரசம்ஹாரம்

சப்த ரிஷிகளில் ஒருவரான காஷ்யபருக்கு திதி, அதிதி என்று இரு மனைவிகள் அவர்களுள் திதிக்கும் காஷ்யபருக்கும் பிறந்தவன் தான் சூரபத்மன். அவனுக்கு சிங்கமஹாசுரன், கஜமஹாசுரன் என்று இரு சகோதரர்களும் அசமுகி என்ற சகோதரியும் உண்டு. சூரபத்மன் சமுத்திரத்திற்கு நடுவே ஓர் நகரை உருவாக்கி  ஆட்சி புரிந்தான்.  சிங்கமஹாசுரனோ  சமுத்திரத்தைச்  சுற்றி தன் கிராமங்களை  அமைத்துக்கொள்ள... கஜமுகாசுரன் தன்னை கிரௌஞ்ச்சிய மலையாக உருமாற்றம் செய்து கொண்டு ஆட்சி புரிந்தான்.அசுர குணமுடைய இவர்கள் சடைமுடியான் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் செய்தனர்.  இவர்களுக்கு காவலாக அவர்களின் சகோதரி அசமுகி நின்றாள். இவர்களின் தவத்தில் மகிழ்ந்த அண்ணாமலையான் அவர்களுக்கு காட்சியளிக்க "உன்னைத் தவிர எங்களை அழிக்கும் சக்தி எவருக்கும் இருக்கக் கூடாது...எங்கள் மரணம் உன் அருளாலே  நிகழ வேண்டும்" என்று வரம் பெற்றனர்.

காலங்கள் உருண்டோடியது. சூரபத்மன் அக்னி தேவனின் புத்திரி பத்மகோமளையை மணந்து  பானுகோபன் என்னும் மகனைப்  பெற்றான்.  கடும் தவங்களின் மூலம் பல்வேறு சக்திகளை பெற்ற பானுகோபன் இறுதியில் பிரம்மாஸ்திரத்தையும் அடைந்து வெல்வதற்கு அறியவனானான். அவனுடைய அட்டூழியங்கள் பன் மடங்கு பெருகி மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். சூரபத்மனுக்கும் பானுகோபனுக்கும் அறிவுரை கூற வந்த தேவர்களும் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

அவனுடைய ஆட்டத்தை பொறுக்க முடியாத  தேவர்கள் பிரம்மனிடமும் பின் விஷ்ணுவிடமும்  முறையிட்டனர் ஆனால் அவனுக்கு முடிவு கட்ட அருணாச்சலனால்  மட்டுமே முடியுமாதலால் அனைவரும் கைலாயத்திற்கு விரைந்தனர். தேவர்களிடம் "என் நெற்றிக்கண் அனலில் இருந்து உருவாக உள்ள  என் அம்சமான கார்த்திகேயனே அவனை வெல்லப் போகிறவன்...விரைவில் அவன் அழிவது உறுதி " என்று அவர்களை அனுப்பி வைத்தார் உமா மகேஸ்வரன்.

சிவனின் நெற்றிக்கண் அனலை பார்வதியால் கிரகிக்க முடியாமல் போகவே அக்கினித்தேவன் அதைத்  தன் கைகளில் பெற்று கங்கையில் சேர்த்தார். இதற்கிடையில் தேவர்கள் தம்மை அழிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதை அறிந்த சூரபத்பன் கங்கையில் மிதந்து சென்ற தீக்குழம்பை தன் அம்பால் தாக்க அது ஆறு சிறு துண்டுகளாக சிதறியது. தன்னை அழிக்கப் போகும் சக்தியை தான் சிதைத்து விட்ட   இறுமாப்போடு அங்கிருந்து சென்றுவிட்டான் சூரபத்மன்.

சிதறிய ஆறு துண்டுகள் சரவணப் பொய்கையை அடைந்து  ஆறு தாமரைகளில் அழகாக அடைக்கலம் அடைந்தது. ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில்  வளரத் துவங்கின. சிறிது காலத்திற்குப் பின் உண்மையை அறிந்த பார்வதி தன் மைந்தர்களைப் பார்க்க விரைந்தாள். பாலகர்களாக இருந்த அறுவரையும் ஒரு சேர தாயன்பினால் அணைத்துக்கொள்ள ஓர் உடல், பன்னிரெண்டு கைகள், இரு கால்கள் மற்றும் ஆறு தலைகள் கொண்ட ஆறுமுகன் உருவானான். சக்தி
ஆறுமுகனோடு கைலாயத்தை அடைந்தாள்.

நாட்கள் நகர்ந்தோடின. இளைஞனாக இருக்கும் சரவணனை அழைத்த  சிவபெருமான் சூரபத்மனின் பிடியிலிருந்து மக்களையும் தேவர்களையும் காக்கும் காலம் வந்து விட்டதை உணர்த்தினார். அசுரர்களை அழிக்க உருவான படையின் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான் கார்த்திகேயன். சிவபெருமானின் சடைமுடியில் இருந்து அவதரித்த வீரபத்ரனை இடப்பக்கமும் தன் தாய் அளித்த சக்தி வேலை வலக்கையிலும் ஏந்தி போருக்குக் கிளம்பினான் முருகப்பெருமான். கிரௌஞ்சிய மலையாக நின்ற கஜமாகசுரனையும் (கந்த சஷ்டி) பெருங்கிராமத்தில்  இருந்த சிங்கமஹாசுரனையும் வென்று சூரபத்மன் இருக்கும் பெருங்கடலை நோக்கிச் சென்ற செந்திலை பானுகோபன் எதிர் கொண்டான்.

போர்க்களத்தில் கார்த்திகேயனை தாக்குப்பிடிக்க முடியாமல் குற்றுயிரும் கொலையுயிருமாக தன் தந்தை சூரபத்மனிடம்  ஓடிய பானுகோபன் "தந்தையே வந்திருப்பவன் சாதாரணமானவன் அல்ல ...அச்சிவபெருமானின் மறு வடிவமே ஆகையால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் அவனை எதிர் கொள்ள வேண்டாம் என்றும் " அறிவுறுத்தினான். பெரு வீரனான சூரபத்மனோ "என்னை அழிக்க அச்சிவபெருமானால் மட்டுமே இயலும் " என்று பெருமாப்போடு சரவணனை போர்க்களத்தில் நேருக்கு நேர் எதிர்கொள்ள தயார் ஆனான்.

முதல் நாள் போரின் முடிவில் தோல்வியை சந்தித்த சூரபத்மனை "இன்று போய் நாளை வா" என்று அனுப்பிவைத்தார் செந்திலாண்டவர். அடுத்த வந்த நாளிலும் நிராயுதபாணியாக நின்ற சூரபத்மனுக்கு மறு சந்தர்ப்பத்தை அளித்தான். இவ்வாறாக ஐந்து  நாட்கள் கடந்தது. ஆறாவது நாளில் சூரபத்மனோ "வெல்வதற்கு அறியவனான நீ சிவபெருமானின் மறு உருவமே ஆதலால் உன் கையில் மடிவதை பாக்கியமாகக் கருதுகிறேன்" என்று கூறி தனக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை  மறுத்து கடும் போர் புரிந்தான். போரில் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதாள உலகை நோக்கி ஓடி...முடிவில்  மரமாக தன்னை உருமாற்றிக்கொண்ட சூரபத்மனை தன் வேலால் இரு பாகமாகப் பிளந்தான் சரவணன். ஒரு பாகத்தை சேவலாக மாற்றி தன் கொடியிலும் மறு பாகத்தை மயிலாக மாற்றி அதில் ஏறி அமர்ந்து கொண்டான்.

இவ்வாறாக சிவ பக்தனான சூரபத்மன் இறப்பை வென்று  கார்த்திகேயனின் அருகில் என்றும் நிலைத்து நிற்கும் பேறு பெற்றவனானான். சூரபத்மனை குமரன்  தோற்கடித்த  இத்தினம் சூரசம்ஹாரம் எனப்படுகிறது.

ஒவ்வொருவருடமும் ஐப்பசி மாத அமாவாசையில் தொடங்கி ஆறு நாட்களுக்கு ஷஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு  ஆறாவது நாள் சூரசம்ஹாரமாக அனைத்து  முருகத்தலங்களிலும் - முக்கியமாக திருச்செந்தூரில்  வெகு விமரிசையாகக்  கொண்டாடப்படுகிறது.

சொன்னவர் : துளசி


Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..