பூரண உள்ளொளி கண்டடைதல்
மகளிர் தினத்தன்று நம்மில் ஒருவரான திருமதி ராதா பரசுராம் அவர்கள் எழுதி பிரசுரித்த "பூரண உள்ளொளி கண்டடைதல்" என்னும் குறும்புத்தகத்தை (20 பக்கங்கள் மட்டும்) வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.
முன்னுரையில் மனதை ஒருமைப்படுத்தும் முயற்சியில் தனக்கு ஏற்பட்ட மேம்பட்ட அனுபவத்தை பகிர துவங்கும் ஆசிரியர் கீத் மில்லர், மைக்கேல் ஏ சிங்கர் போன்ற ஆசிரியர்களின் படைப்புகளை கோடிட்டு காட்டி நம் ஆர்வத்தை தூண்டுகிறார்.
பின்வரும் பக்கங்களில் "தான் எவ்வாறு தியான முயற்சியை தொடங்கினேன், அதில் ஏற்பட்ட சவால்கள், பின் எவ்விதம் வேறு வேறு முறைகளை பின்பற்றி வெற்றி அடைந்தேன்" என்பதை விளக்கமாக சொல்லிக் கொண்டே வரும் ஆசிரியர் நடுநடுவே அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல்வேறு சவால்களையும் எழுதியிருக்கிறார் முக்கியமாக " அனுதினம் சாதாரணமாக நிகழும் பல்வேறு செயல்கள் எவ்வாறு குழந்தைகளின் மனதை பாதிக்கிறது" என்று கூறியிருக்கும் உதாரணங்கள் மிக அருமை!
தியான முறைகளைப் பற்றி எவ்வித அறிமுகமும் இல்லாத எனக்கு அவர் கூறும் வாழ்வியல் தொடர்பான தகவல்கள் சுவாரசியமாகவும் சுய அனுபவங்களோடு ஒப்பீடு செய்து கொள்ளவும் முடிந்ததோடு மனதை ஒரு நிலைப்படுத்துவதால் ஏற்படும் பலன்களையும் அறிந்து கொள்ள முடிந்தது.
தியானத்தை எவ்வாறு தொடங்க வேண்டும் தொடர வேண்டும் என்றெல்லாம் அவர் எதையும் கற்பிக்க முயலவில்லை என்பது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று!
"மனம் ஒரு கள்ள மனப் பேய்க்குரங்கு " என்ற வாசகம் இன்றைய சூழலுக்கு தான் எவ்வளவு பொருந்தும்! 2-3 நிமிடங்கள் வரும் Shorts ஐ கூட நம்மால் பொறுமையாக பார்க்கமுடியவில்லை அந்த அளவிற்கு Attention Span" குறைந்து கொண்டே வருகிறது முக்கியமாக குழந்தைகளிடம். என்னைப் பொறுத்தவரை முன்பு எப்போது இருந்ததை விட மனதை ஒருமுகப்படுத்தும் வித்தையை கற்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது நாம் இருப்பதாகத் தோன்றுகிறது
"சும்மா இருத்தல்" " இடைவிடாது கவனித்தல்" என்ற இரு பெரும் கடினமான செயல்களைப் பற்றி எழுதியுள்ள ஆசிரியர் தன் கருத்துக்களோடு "காரை சித்தர்" "மணிமேகலை" "கவிப்பேரரசு வைரமுத்து" "பேரறிஞர் ஜி. கிருஷ்ணமுர்த்தி" "டாக்டர் அப்துல் கலாம்" "எட்வர்ட் பாக்" போன்றோரின் ஆக்கங்களை ஆங்காங்கே நினைவு படுத்துகிறார் முக்கியமாக திருக்குறள்களை!
இப்புத்தகத்தில் என்னைக் கவர்ந்த சில வரிகளை இங்கே முன்னிலைப் படுத்த விரும்புகிறேன்.
"நம் கையில் இல்லாத நம்மால் மாற்ற முடியாத செய்கைகளை திறந்த மனதோடு ஒத்துக் கொண்டு நம் அகங்கார பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்"
"உண்டாக்கப்படாத தானாக உள்ள மௌனம் நம்மை சமாதி நிலைக்கு இட்டுச் செல்லும்"
"திருப்தியினமை, பயம் என்பவை மனதின் உட் சிறைகள் இவை வலுக்கும் போது தோல்வியால் தாழ்வுணர்ச்சியும் வெற்றி பெறும்போது கர்வமும் உண்டாகிறது"
"யோசனை அற்ற விழிப்பு நிலையில் இருப்பவர்களின் செயல்களின் பின் விளைவுகள் பயனுள்ளவையாக இருக்கும்"
தமிழில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் எனக்கு தியானத்தைப் பற்றிய ஓர் அறிமுகத்தை தந்தது. மற்றவர்களுக்கு வேறு விதமாக இருக்கலாம். படிக்கும் வாய்ப்பு அமைந்தால் தங்கள் அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!
![]() |
| திருமதி. ராதா பரசுராம் |
பின் குறிப்பு - ஆசிரியரை தொடர்புகொள்ள - 832-533-8242.
-நிர்மலா கணேஷ்.


Comments
Post a Comment