இரண்டாம் படை வீடு - திருச்செந்தூர்

சூரபத்மனை முருகன் வென்ற இடமாதலால் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் "ஜெயந்திபுரம்" "வீரவாகு பட்டினம்" என்றும் அலைகள் சீராக கரையை வந்து மோதுவதால் "சீரலைவாய்" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

தென்னாட்டு முருகன் கோயில்களிலேயே மிகப்பெரியதான செந்திலம்பதி கடலை அடுத்த சந்தனமலையில் உருவாக்கப்பட்டது. "கந்தமாதன பர்வதம்" என்றும் இதைச் சொல்வார்கள்.

சிவனை நோக்கி தவமிருக்கும் கோலம் என்பதால் செந்தூரனுக்கு கையில் வேல் இல்லை எனினும் சில நாட்களில் வேல் சாத்துவதுண்டு. இந்த முருகனின் பாதத்திலிருந்து பெறும் பத்ர விபூதி விஷேஷம் வாய்ந்தது இதை உட்கொண்ட விஷ்வாமித்ரரின் வியாதி குணமடைந்த விவரம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

முகத்தில் குறுஞ்சிரிப்பு தவழ நிற்கும் இந்த பாலசுப்ரமணியன் தான் இதே தலத்தில் ஒரு மாபெரும் சேனையை திரட்டி யுத்தமும் செய்திருக்கிறான். சூரபத்மனை அழிப்பதற்காக புறப்பட்ட முருகனை வழிமறித்த தாரகாசுரனையும் அவனுக்கு துணை நின்ற கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டு முருகன் தன் படையோடு தேவசேனாதிபதியாக திருச்செந்தூர் வந்து தங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.

இங்கிருந்துதான் விரவாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பினான் முருகன் அத்தூதை ஏற்காமல் கடல் நடுவே மரமாக நின்ற சூரபத்மனை இரு கூறாக பிளந்து அவனது அகங்கார மகங்காரங்களை சேவலாகவும் மயிலாகவும் ஏற்றுக்கொண்டான் முருகன். 

திருச்செந்தூரில் அவன் தங்கியிருந்த போது கடற்கரையில் விஸ்வகர்மா ஓர் ஆலயம் கடுவித்ததாக புராணம் சொல்கிறது.




சகலகலாவல்லிமாலை, மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் என்று தெய்வீக இலக்கியங்கள் படைத்த குமரகுருபரர் ஐந்து வயது வரை ஊமையாக இருந்தவர். அவரின் பெற்றோர் திருச்செந்தூர் வந்து விரதமிருந்தனர். குழந்தை முன் தோன்றிய முருகன் ஒரு பூவைக் காட்ட குழந்தையும் "பூ" என்று முதல் சொல்லை பேசி பின் "பூ மேவு செங்கமல" என்ற கந்தர் கவி வெண்பாவை பாடி முடித்தது!

வயிற்று நோயால் தவித்த பகழிக்கூத்தர் இங்கு தான் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடி நோய் நீங்கப்பெற்றார் இன்றும் கோவிலில் இப்பிள்ளைத்தமிழை ஓதுகின்றனர்.

இந்நூலாசிரியர்  ராகவனும் ஆறு வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் வலுவிழந்த நிலையில் திருச்செந்தூருக்கு அழைத்துவரப்பட்டு செந்திலாண்டவருக்கே  அர்பணிக்கப்பட்டார். அங்கிருந்த வைத்தியர்  முருக பக்தர் சிவலிங்க நாடாரால் வைத்தியம் செய்யப்பட்ட அவர்  கால்கள் வலுப்பெற்று மணல் மேட்டில் ஓடிவரும் அளவிற்கு  சக்தியைப் பெற்று குணமடைந்ததை முருகனின் அருளே என்று திடமாக நம்புகிறார்.

மூலம் - குருஜி ஏ. எஸ். ராகவன் எழுதிய "தலம் தோறும் தமிழ்கடவுள்"




Comments

Popular posts from this blog

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

சூரசம்ஹாரம்

ஏரி காத்த ராமரும் பக்த ராமதாஸும்