அஷ்டமி சப்பரம் 01 - 06 - 2021
ஓர் சமயம் பூலோகத்தில் வாழும் சகல ஜீவ ராசிகளுக்கும் படி அளக்கும் நோக்குடன் பூமிக்கு செல்லவிருந்த கைலாயநாதரிடம் அன்னை பார்வதி "இன்று படி அளக்கும் நாளல்லவா?!" என்று வினவினாள். ஆம் என்று பதிலளித்த சிவ பெருமானிடம் "அனைவருக்கும் படி அளந்து விடுவீர்களா?! ஒருவரையும் விட்டுவிடாமல்?!" என்று கேள்வி எழுப்ப "இதிலென்ன சந்தேகம்...இன்றைய நாளின் சிறப்பே அதுதானே" என்று கூறிவிட்டு சென்ற மஹேஸ்வரனுக்குத் தெரியாமல் அன்னை உமா தேவி ஓர் எறும்பை பிடித்து சிறு சிமிழில் வைத்து அடைத்து விட்டாள்.
பூலோகத்தில் இருந்து திரும்பிய அய்யனிடம் " அனைவருக்கும் வேண்டிய வரங்களை அளித்து படி அளந்து விட்டீர்களா?!" என்று கேட்டாள் அன்னை. " ஆம்" என்று கூறிய சிவ பெருமானிடம் " இல்லை நீங்கள் ஓர் உயிருக்கு மட்டும் படி அளிக்கவில்லை" என்று கூறி சிமிழைத் திறக்க... அச்சிறு எறும்பின் வாயிலும் ஓர் அரிசி மணி இருக்கக் கண்டு அதிசயித்து போனாள் சக்தி. அண்ணாமலையானின் மகிமையை எண்ணி மெய்சிலிர்த்தாள்.
இந்நிகழ்வை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி அன்று ரிஷப வாகனத்தில் மதுரை சொக்கநாதர் பிரியாவிடையுடனும் மீனாட்சி அன்னை தனியாகவும் சப்பரத்தில் ஏறி மாட, மாசி வீதிகளில் உலாவி தம் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கின்றனர். பக்தர்கள் சாலையின் இரு மருங்கிலும் அரிசி தூவி வழிபடுகின்றனர். அஷ்டமி சப்பர நன்னாளான இந்நாளில் நாம் வேண்டும் நல் வரங்கள் எதுவாக இருப்பினும் சிவபெருமான் நமக்கு படி அளிப்பார் என்பது நம்பிக்கை.
சொன்னவர் : துளசி
சொன்னவர் : துளசி
Comments
Post a Comment