அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த மாதங்களில் ஒன்று தை மாதம். இம்மாதத்தில் அனைத்து முருகத்தலங்களிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது இந்நன்னாளில் பலரும் நன்கறிந்த ஆறு படை வீடுகளைப் பற்றி பரவலாக அறியப்படாத தகவல்களை தெரிந்து கொள்வோமா?!
ஆறுபடை வீடுகள்
முதல் படை வீடு - திருப்பரங்குன்றம்
இரண்டாம் படை வீடு - திருச்செந்தூர்
மூன்றாம் படை வீடு - பழனி
நான்காம் படை வீடு - சுவாமி மலை
ஐந்தாம் படை வீடு - திருத்தணி
ஆறாம் படை வீடு - பழமுதிர் சோலை
முதல் படை வீடு - திருப்பரங்குன்றம்
திருமாலின் இரு கண்களில் இருந்து தோன்றிய அமிர்தவல்லி சுந்தரவல்லி என்ற இரு பெண்கள் முருகனின் அழகில் மயங்கி அவனையே மணமுடிக்க வேண்டுமென்று தவமிருந்தனர் அவர்களுள் அமிர்தவல்லி தேவேந்திரனின் மகளாக தேவசேனை என்ற பெயரில் பிறந்தாள்.
சூரபத்மனை வென்று தேவர்கள் சேனைக்கு அதிபதியான முருகன் தேவசேனைக்கும் அதிபதியாகி பங்குனி உத்திரத்தன்று மணம் கொண்ட தலம் திருப்பரங்குன்றம். அங்குள்ள கோவில் தேவதச்சனால் கட்டப்பட்டதாக கந்தபுராணம் கூறுகிறது.
குடவறைக் கோயிலான திருப்பரங்குன்றத்தில் மூலவர் மலைச்சுவரோடு பதித்திருக்கிறபடியால் அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை புனுகும் எண்ணைக்காப்பும் தான். அவன் கையிலிருக்கும் வேல் படைக்குத்தான் அனைத்து அபிஷேகங்களும்! மூலவர் பிரகாரத்தை வலம் வர வழியில்லாததால் மலையையே சுற்றி இரண்டு மைல் வலம் வர வேண்டும்.
தீர்த்தயாத்திரை மேற்கொண்ட நக்கீரர் வழியிலே திருப்பரங்குன்றத்தில் ஒரு குளக்கரையில் அமர்ந்து பூஜா அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார் அப்போது குளக்கரை அரசமரத்திலிருந்து ஓர் இலை உதிர்ந்து பாதி நீரிலும் பாதி தரையிலுமாக விழுந்தது. நீரில் விழுந்த பகுதி மீனாகவும் தரையில் விழுந்த பகுதி பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுத்துக் கொள்ள ஆரம்பித்தன.
இதைப்பார்த்த நக்கீரரின் அனுஷ்டானம் கலைந்தது உடனே கற்கிமுகி என்ற பூதம் அவரை மலைக்குகை ஒன்றில் சிறை வைத்தது. குகைக்குள்ளே இன்னும் பலபேர் அடைபட்டிருந்தனர். ஆயிரம் பேர் சேர்ந்ததும் அவர்களை ஒரு சேர விழுங்கி பசியாற காத்திருந்தாளாம் கற்கிமுகி. நக்கீரர் முருகனை மனதிலிறுத்தி திருமுருகாற்றுப்படை பாட அவனும் தன் வேலால் அக்குகையை பிளந்து அனைவரையும் விடுவித்து பூதத்தையும் அழித்தான்! நக்கீரனும் தனக்கென்று ஓர் ஆலயத்தை மலை மேல் பெற்றான்.
திருப்பரங்குன்றத்திற்கு "சத்யகிரி" என்று மற்றொரு பெயருமுண்டு. முருகபெருமான் இங்கு வந்து தவம் செய்ததாகவும் அன்னையும் அப்பனும் அவனுக்கு காட்சி அளித்து பரங்கிரி நாதர்- ஆவுடை நாயகி என்று பெயர்பெற்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது இது நிகழ்ந்த தைப்பூச தினத்தன்று சிவனையும் முருகனையும் தரிசிப்பவர்கள் அனைத்து நலன்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.
ஆயுதம் கொண்டு போர் புரியும் நேரமாயினும் சரி மனதோடு ஓய்வின்றி போராடி நலிவுறும் நேரமாயினும் சரி, செயலில் தடுமாற்றம் ஏற்படும் போதும் சரி யமதூதர்கள் வந்து அழைத்தாலும் சரி என் அச்சம் நீங்குமாறு மயில் மீது வந்து அருள் புரிய வேண்டுமென்று உரிமையோடு திருப்பரங்குன்றத்திலிருக்கும் கல்யாண முருகனை அழைக்கிறார் அருணகிரி நாதர்!
மூலம் - குருஜி ஏ. எஸ். ராகவன் எழுதிய "தலம் தோறும் தமிழ்கடவுள்"

Comments
Post a Comment