அவதாரங்களின் முடிவு - வராஹ அவதாரம்
உலகில் அதர்மம் தன் எல்லயைக் கடக்கும் சமயங்களில் எல்லாம் பகவான் விஷ்ணு அவதாரம் செய்து இப்பூவுலகை காப்பதும் அரக்கர்களை அழிப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு எடுக்கும் அவதாரங்கள் மனித அவதாரமாக இருக்கும் பட்சத்தில் தன்னுடைய கர்ம வினைகளுக்கு விதிக்கப்பட்ட வாழ்வை முழுவதுமாக வாழ்ந்து விட்டே பரந்தாமன் வைகுண்டம் திரும்புகிறார் என்பது ராம, கிருஷ்ண அவதாரங்களின் மூலம் நாம் அறிகிறோம் ஆனால் மிருக முகமும் மனித உடலும் இணைத்த அவதாரங்களான மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம அவதாரங்களில் என்ன நடந்தது?! அறிந்து கொள்வோமா!!!
வராஹமாக அவதரித்து இரண்யாக்ஷனை வதம் செய்து பூமாதேவியை மீட்ட விஷ்ணு காட்டிற்குள் நுழைந்து அங்கு ஓர் பெண் பன்றியுடன் இணைந்து பல்வேறு பன்றிக் குட்டிகளை ஈன்று வாழ்ந்து கொண்டிருந்தார். ஜீவாத்மாவான இறைவனுடன் ஒன்றற கலந்த பெண் பன்றி சிறிது காலத்தில் தனது உயிரை விட்டது.
தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிய பின்பும் ஹரி வைகுண்டம் திரும்பாமை கண்டு வருத்தமுற்ற தேவர்கள் அவரை அழைத்து வருவதற்காக பூலோகம் சென்றனர். அங்கு தனது குட்டிகளுடன் சேற்றிலும் புழுதியிலும் பிரண்டு கொண்டு மலத்தை ருசித்து உண்டு களித்துக் கொண்டிருக்கும் பன்றியைப் பார்த்து அருவெறுப்புற்ற தேவர்கள் "அச்சுதா தங்களின் இருப்பிடமான மணம் கமழும் வைகுண்டத்திற்கு திரும்பாமல் என்ன இது" என்று அதிர்ச்சியுடன் கேட்டனர்.
எனது குழந்தைகளுடன் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்விடமல்லவோ எனக்கு சொர்க்கம்..இதற்கு ஈடாக வருமா வைகுண்டம்? அறுசுவை உணவு யாருக்கு வேண்டும்? என்று அவர்களுடன் திருப்ப மறுத்த வைகுண்ட நாதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற தேவர்கள் வேறு வழியின்றி தேவலோகம் திரும்பினர்.
பின் கைலாயநாதனைக் கண்டு நடந்ததைக் கூறிய தேவர்கள் தங்களுக்கு உதவுமாறு வேண்டி நின்றனர்.
பூலோகத்திற்கு சென்ற ஈஸ்வரன் அங்கு சிற்றின்பத்தில் லயித்து தான் யார் என்ற உணர்வின்றி தனது பிறப்பிற்குண்டான கர்மத்தில் உழன்று கொண்டிருந்த வராஹத்தின் வயிற்றை தன் சூலாயுதத்தால் கிழிக்க ரத்தம் விழிய உயிரை விட்டது பன்றி. பூத உடலிலிருந்து விடுபட்ட ஆத்மா தனது இடமான வைகுண்டத்தை அடைந்தது. அவதாரமும் முடிவுக்கு வந்தது.
நாமும் எது இன்பம் என்ற புரிதல் இன்றி இவ்வுலக வாழ்வில் கட்டுண்டு மீண்டும் மீண்டும் பிறந்து இப்பிறவிப் பெருங்கடலை கடக்க இயலாமல் தத்தளிக்கிறோம். பரந்தாமனின் நாமத்தை தெப்பமாக நினைத்து உறுதியுடன் பற்றினோமேயானால் இக்கடலைக் கடப்பது உறுதி!!!
தொடரும்...
சொன்னவர் - துளசி
Comments
Post a Comment