பங்குனி உத்திரம்

மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு மும்மூர்த்திகளின் தலைமையில்  பாற்கடலை கடைய முடிவெடுத்தனர் தேவர்களும் அசுரர்களும். மந்தரமலை சமுத்திரத்தில் நிலையாக நிற்கும் பொருட்டு கூர்மமாக தன்னை மாற்றிக் கொண்ட பரந்தாமன் தன்னுடைய முதுகின் மேல் (ஆமை ஓட்டின்) மந்தர மலையைத் தாங்கிக் கொண்டார்.

பாற்கடலில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. பாற்கடலில் இருந்து பல்வேறு வஸ்துக்கள் வெளிப்பட்டன அத்தோடு அதிலிருந்து தோன்றினாள் மஹாலக்ஷ்மி. அவரை கரம் பிடித்து தனது நெஞ்சில் அமர்த்தினார் பரந்தாமன்.

இப்பங்குனி உத்திர நாளில் தான் மஹாலஷ்மி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டார் என்பதால் இந்நாளை "மஹாலக்ஷ்மி ஜெயந்தி" ஆகவும் அனுசரிக்கிறார்கள் அத்தோடு அனைத்து விஷ்ணு தலங்களில் பெருமாளுக்கும் லக்ஷ்மிக்கும் விஷேஷமாக மணவிழா நடைபெறுகிறது.

இதே பங்குனி உத்திர நாளிலேயே முருகப்பெருமான் தெய்வானையை கைபிடித்ததாகவும் காஞ்சியில் சிவபெருமான் கௌரியை மணந்ததாகவும், கோதை நாச்சியார் விஷ்ணுவுடன் ஒன்றறக்  கலந்ததாகவும் கூறப்படுகிறது.

சுவாமி ஐயப்பனும் இதே பங்குனி உத்திர நாளிலேயே பம்பை நதியோரம் கண்டெடுக்கப்பட்டார்.




அனைத்து சைவ வைணவ தளங்களில் பங்குனி உத்திரம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்நன்னாளில் இறைவனை உருகி பிரார்த்திக்கும் இளம் பெண்களுக்கு நல்ல மணாளன் கிடைப்பான் என்பது திண்ணம்.

லௌதீக வாழ்வில் உழலும் நாம் கிரஹஸ்த தர்மத்தில் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை உரிய நேரத்தில் சரியான விதத்தில் முடித்து விட்டு மறுபிறவி இல்லாத முக்தியை வேண்டுவோமாக!!!

இவ்வருடம் மார்ச் மாதம் 25-ம் தேதி திங்கட் கிழமை பங்குனி உத்திர திருவிழா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

சொன்னவர் - துளசி 

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..