அனுமார் ஜெயந்தி - ஜனவரி 11, 2024

அன்று அயோத்தி ராஜ சபையில் தனது குருக்களான வசிஷ்டர், விஷ்வாமித்ரர் உடனுறைய தனது சகோதரர்கள், அமைச்சர்கள் புடை சூழ ராஜ பரிபாலனம் செய்து கொண்டிருந்தார் அரசர் ராம சந்திரமூர்த்தி. அப்போது அவரைக்கான வந்த காசி நாட்டரசர் அனைவருக்கும் உரித்தான மரியாதைகளையும் வணக்கங்களையும்  தனித்தனியாக தெரிவித்தவன் விஷ்வாமித்ரரை மட்டும் பொதுவாக வணங்கிவிட்டு தனது இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டான். ராஜசபையும் தொடர்ந்தது.

அச்சபையில் வீற்றிருந்த தேவ ரிஷி நாரதர் அமைதியாக இருந்த  விஷ்வாமித்ரரிடம் காசி நாட்டரசன் செய்த காரியத்தை மிகப் பெரிய தவறு என்று சுட்டிக் காட்டி கலகத்தை துவக்கி வைத்தார்.

காசி நாட்டரசனின் செய்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த விஷ்வாமித்ரர் நாரதரின் விளக்கத்தைக் கேட்டு பெரும் கோபம் அடைந்தார். அரசரும் தனது மாணவனும் ஆகிய ராகவ ராமனிடம் "எனக்கு குருதட்சணையாக அந்த மரியாதை கெட்டவனின் தலையை கொண்டு வா" என்று ஆணை இட்டார்.

தனக்கு ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்த காசி அரசன் அனுமனின் தாயாகிய அஞ்சனையிடம் அடைக்கலம் அடைந்தான். அனுமனை அழைத்த தாய் நடந்த விடயங்களை கூறாமல் காசி அரசன் ஆபத்தில் உள்ளான் என்றும் அவனைக் காக்குமாறு ஆணையிட்டாள்.

நதிக்கரையில் தியானத்தில் அமர்ந்த அனுமன் கண்களை மூடிக் கொண்டு ராம நாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார். நதியில் கழுத்தளவு நீரில் முழ்கியபடி அவருக்கு பின் ஒளிந்து கொண்டான் காசி வேந்தன்.

காசி அரசனை சிறை பிடிக்க வந்த ராம சேனைகள் அனுமனிடம் வீழ்ந்தன. கடைசியில் தனது வில் அம்புடன் அங்கு வந்த ஸ்ரீராமர் அனுமனை விலகுமாறு  எச்சரிக்கை செய்தார். தனது ராஜனுக்கு எதிராக நிற்க வேண்டி வந்ததே என்ற பெரும் துயர் அனுமனை வாட்டினாலும் தனது தாயின் ஆணையை மீற முடியாதவனாக கண்களில் நீர் வழிய ராம ஜெபத்தை உச்சரித்த வண்ணம் அசையாமல் அமர்ந்திருந்தார்.

ராமனின் தனுஷிலிருந்து பறந்த அம்பு அனுமனைத் தாக்காமல் அவரை சுற்றிக் கொண்டு வந்து கீழே விழுந்தது. இதற்கிடையில் நாரதர் காசி அரசனை விஷ்வாமித்ரர் எதிர் பாராத வேளையில் அவர் காலில் விழச்செய்ய அவரும் "ஆயுஷ்மான் பவ" என்று ஆசி வழங்கி விட்டார்.

நிலைமையை பின் உணர்ந்த விஷ்வாமித்ரர் போர் நடக்கும் இடத்திற்கு விரைந்து ராமரிடம் தான் இட்ட ஆணையை திரும்பப் பெற்றார்.

ராம நாமத்தின் பெருமையை இவுலகிற்கு உணர்த்திய அனுமனை நெஞ்சோடு தழுவிக் கொண்டார் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி.

அனுமார் ஜெயந்தியான இன்று அவனைப் போல எவ்வேளையிலும் விடாது ராம நாமத்தை ஜெபிப்போம் 🙏🙏🙏 உடல் பலமும் ஆத்ம சாந்தியும் பெறுவோம்..

ஜெய் ஸ்ரீராம் ...ஜெய் ஆஞ்சநேயாய நமஹ 🙏




அனுமனின் மைந்தன் 

ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே கடும் யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. ராவணனின் படைகள் ராமனின் வானர சேனைகளிடம் தோற்றுக் கொண்டிருந்தனர். யுத்தத்தில் தனது மகன்களையும் தமயன்களையும் இழந்த இராவணன் சோர்ந்து காணப்பட்டான். 

அப்போது அவனது அமைச்சன் பாதாள லோகத்தை ஆண்டு கொண்டிருந்த இராவணனின் உறவினனான மயில் ராவணனை நினைவு படுத்தினான், காளியின் பூரண ஆசி பெற்ற பக்தனான அவன் மாய மந்திர வித்தைகளில் தேர்ந்தவன். இவ்வானர சேனையை ஜெயிக்க அவனால் முடியும் என்று வலியுறுத்தினான் அமைச்சன்.

அவ்வாலோசனையின் படி மயில்ராவணின் உதவியை நாடினான் இலங்கை வேந்தன். தனது தமையனின் துயரைப் போக்க உறுதி அளித்த அவன் யுத்த களத்தில் இருந்து ராமனையும் லெக்ஷ்மணனையும் சுய நினைவை இழக்கச் செய்து மயக்க நிலையில் தனது பாதாள மாளிகையில் ஒளித்து வைத்தான். தக்க வேளையில் அவர்களை காளிக்கு பலி இட முடிவு செய்தான்.

உண்மையை விபீஷணனின் மூலம் அறிந்த அனுமன் பாதாள லோகத்திற்கு விரைந்தான். தனது சக்தியின் மூலம் மயில் ராவணனின் சேனையை சிதைத்த அனுமன் அவனை ஒழித்து அயோத்தி புத்திரர்களை காக்க விரைந்தான். அங்கு வாயில் காப்பாளனாக தன்னை போன்ற உருவ ஒற்றுமை உடைய ஒருவனைக் கண்டான். ஏதோ மாய வித்தையால் மயில் இராவணன் தன்னிடம் விளையாடுகிறான் என்று நினைத்தான். இருவருக்கும் இடையே கடும் போர் நடந்தது.

தனக்கு இணையாக யுத்தம் செய்த வாயில் காப்பாளனிடம் அவன் யார் என்று வினவினான் அனுமன். அதற்கு தன் பெயர் மச்சவல்லபன் என்றும் தன்னுடைய தந்தை சுக்ரீவனின் சேனையில் இருக்கும் ராம பக்தன் என்றும் பதிலுரைத்தான்.

"பிரம்மச்சாரியான தனக்கு மகனா" என்று வியந்த அனுமனிடம் " தீ வைக்கப்பட்ட தனது வாலினால் இலங்கையை துவம்சம் செய்த ஹனுமான் கடைசியாக சமுத்திரத்தில் வாலை நனைத்து தீயை அனைத்தார். இலங்கை முழுமையையும் தீக்கிரை ஆக்கியத்தில் ஏற்பட்ட உஷ்ணத்தால் அனுமனின் உடலில் வியர்வை பெருகி இருந்தது. அதிலிருந்து சில துளிகள் சமுத்திரத்தில் கலக்க மச்சக்கன்னியாக அங்கு வாழ்ந்து கொண்டிருந்த எனது தாய் அருந்திய நீரில் அது கலந்தது..நானும் பிறந்தேன்" என்று விளக்கினான் மச்சவல்லபன்.

நான் தான் உன் தந்தை என்று அவனுக்கு கூறினான் அனுமன் இருப்பினும் மயில் ராவணனிடம் உண்மை உள்ளவனாக இருப்பதே தனது கடமை என்று உரைத்த அவனைத்  தாக்கி மூர்ச்சை அடையச்  செய்து விட்டு முன்னேறினான் அனுமன்.

மயில் ராவணனை கொன்று ராம லக்ஷ்மணனை மீட்ட பின் மச்ச வல்லபனை பாதாள லோகத்திற்கு அரசனாக முடி சூட்டிவிட்டு அங்கிருந்து அகன்றனர்.

பின் குறிப்பு - மச்ச வல்லபனைப் பற்றிய குறிப்புகள்  வாய்வழியே சொல்லப்படும் கதைகளின் மூலமே பெரும்பாலும் அறியப்படுகிறது 


சொன்னவர் -  துளசி 

To read more on this topic click below 👇👇👇

https://nirmalasg.blogspot.com/2019/03/5-p.html

https://nirmalasg.blogspot.com/2018/05/published_34.html

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..