தாமோதரனும் நீலகண்டனும்

தேவர்கள் விண்ணிலும் மண்ணிலும் சஞ்சரிக்கும் திறன் பெற்றவர்கள். குபேர குமாரர்களான நலகுவேரனும் மணிகிரீவனும்  அன்று பூலோக இன்பத்தில் திளைத்து தங்களை மறந்த நிலையில் இருந்தனர் அப்போது அவ்வழியே வந்த அஷ்ட வக்கிரன் (சிலர் நாரதர் என்று குறிப்பிடுவதும் உண்டு) என்ற மாமுனியை கண்டனர். தன் உடலில் உள்ள அஷட கோணல்களாலே அப்பெயர் பெற்ற அவரின் உடற் குறையைக் கண்டு எள்ளி நகையாடினர் தேவ குமாரர்கள். அவர்களின் கீழ்ச்செயலால் கோபமுற்ற முனிவர் உடலில் இருந்து ஆடை நழுவுவதைக் கூட அறியாமல் நாணமின்றி நின்ற அவர்களை மருத மரங்களாக மாற தீச்சொல்லிட்டார். 

தங்கள் தவற்றை உணர்ந்து  சாபத்திற்கு விமோசனம் வேண்டி நின்ற அவர்களிடம் "விஷ்ணு பகவான்  மானுடனாக அவதரித்து மண்ணிறங்கும் வேளையில்  நீங்கள் உங்களின்  சுய உருவைப் பெற்று தேவலோகம் செல்வீர்கள்" என்று சொல்லிச் சென்றார். அங்கேயே மரங்களாக நின்ற அவர்கள் எவ்வாறு சாபம் நீங்கப் பெற்றனர் என்று பார்ப்போமா?

துவாபர யுகத்தில் கார் மேக வண்ணன் கிருஷ்னனாக அவதரித்த பரந்தாமன் குழந்தைப் பருவத்திலிருந்தே பல்வேறு லீலைகளை புரிந்தார் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.

அன்றும் வழக்கம் போல் கண்ணனின் குறும்புகளால் கோபமடைந்த யசோதா வேறு வழியின்றி குழந்தையை உரலில் கட்டி வைத்து பாடம் புகுத்த எண்ணினார். கையில் தாம்புக் கயிற்றுடன் வந்த அன்னை கிருஷ்ணனின் வயிற்றை கட்ட கயிறு பத்தாமல் போனது..மேலும் சில அடி நீளமுள்ள கயிற்றை இணைத்தார் எனினும் நீளம் பத்தவில்லை. ஒன்றும் புரியாமல் தவித்த தன் அன்னையின் முகத்தைப் பார்த்து சிரித்தான் பீலிக் கண்ணன். மீண்டும் நீளமான கயிற்றுடன் வந்த யசோதையிடம் தன்னை அளித்த கண்ணன் பின் கட்டில் இருந்த உரலோடு கட்டப்பட்டார். இனி தன் மகன் எங்கும் செல்ல மாட்டான், வம்பையும் வாங்கி வரமாட்டான் என்று நிம்மதி அடைந்த அன்னை குவிந்து கிடந்த பணிகளை தொடரச் சென்றாள்.

சிறிது நேரத்திற்குப் பின் தோட்டத்திலிருந்து வந்த இடி போன்ற முழக்கத்தைக் கேட்டு அலறி அடித்து  அங்கு சென்ற யசோதையும் நந்தகோபரும்  அங்கு உரல் இரு மரங்களுக்கு இடையே சிக்குண்டு கிடக்க எச்சில் வழிந்த படி தவழ்ந்து கொண்டிருந்த கண்ணனைக் கண்டு அள்ளி அணைத்து முத்தமிட்டனர். இரு மருத மரங்களும் முறிந்து கிடந்தன. குழந்தைக்கு எந்த இடரும் நேராததை நினைத்து  கோகுலத்து  பெண்களும் யசோதைக்கு இணையான ஆனந்தத்தில் திளைத்தனர். பல பேரின் கைகளுக்கு இடம் பெயர்ந்த கண்ணன் ஊர்வலமாக ஊருக்குள் அழைத்துச் செல்லப்பட்டான். மரங்களாக நின்ற நலகுவேரனும் மணிகிரீவனும் சாப விமோசனம் பெற்று தேவலோகம் சென்றனர்.




தன்னுடைய உதரத்தில் கட்டப்பட்ட தாம்புக் கயிறுடன் உரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்ததால் பகவானின்  வயிற்றில் கயிற்றின் தடம் நிரந்தரமாக பதிந்துள்ளது என்றும் தாமோதரன் என்ற பெயரும் வந்தமைந்தது என்றும் நம்பப்படுகிறது.

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தினமும்  இரு வேளையும்  நெய்விளக்கை  ஏற்றி வைத்து தாமோதரஷ்டகம் கூறி மனமாற ஆழிவண்ணனை துதிப்போர் தங்கள் பாவங்கள் களையப்பெற்று முக்தி அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்நிகழ்வு "தாமோதர் ஆரத்தி" என்று அழைக்கப்படுகிறது.

கயிற்றுத் தடத்துடன் தாமோதரன் என்று அழைக்கப்படும் கேசவனின் வலது ஆட்காட்டி விரலிலும் ஓர் தடம் பதிந்துள்ளது அது வேறொன்றுமில்லை தனது பக்தர்களுக்கு துன்பம் தரும் அரக்கர்களையும் அசுரர்களையும் அழிப்பதற்கு அவர் ஏந்தியுள்ள ஸ்ரீ சக்கரத்தின் சுவடு தான் அது!!



அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்து அமுதை பெற முற்பட்டபோது அக்கடலில் இருந்து பல்வேறு பொருட்கள் வெளிவந்தன அப்போது வெளிவந்த ஆலகால விஷத்தால் அண்ட சராசரமும் அழியும் நிலை ஏற்பட்ட போது முக்கண்ணன் அவ்விஷத்தை விழுங்க அவரின் குரல் வலையை இறுக்கப் பற்றி (விஷத்தால் மகேஸ்வரனுக்கு எந்த தீங்கும் வரப்போவதில்லை ஆனால் அவரில் உறையும் ஜீவ ராசிகளான நம்மைக் காக்கவே உமாதேவி அவ்வண்ணம் செய்தார்) அவ்விஷம் அவரின் வயிற்றை அடையாமல் காத்தார் அம்மை என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் துறவிகளும் யோகிகளும் அம்மை அப்பனை காத்த விதத்தை வேறு விதமாக விளக்குகின்றனர்.

விஷத்தை விழுங்கிய சிவ பெருமானை தன் நெஞ்சோடு உமையம்மை அணைத்துக் கொண்டதாகவும் அமுதைப் போன்ற பாலினைச் சுரக்கும் முலைகளினால் தீண்டப் பெற்ற விஷம் அவ்விடத்தேலேயே வீரியமற்றுப் போனது என்றும் கூறுகின்றனர்.

ஆலகால விஷத்தை தன் தொண்டையில் தாங்கிய சிவ பெருமானார் அன்றிலிருந்து  நீல கண்டன் என்று அழைக்கப்பட்டார். அதன் சுவடு காலத்திற்கும் அழியாமல் அங்கு நிலைத்தது.

இம்மார்கழி மாதத்தில் நாமும் சிவ ஹரியின் நாமங்களை  நம் மனதில் அழியாத சுவடாகப் பதித்துக் கொண்டு திருப்பாவை, திருவெம்பாவையை மனமுருகப் பாடி  இந்த லௌதீக வாழ்விலிருந்து விடுபட பிரார்த்திப்போமாக.


சொன்னவர்  - துளசி 

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..