வராஹ ரூபம் தெய்வ வரிஷ்டம்
பாற்கடல் வாசனின் பத்து அவதாரங்களில் மூன்றாவது வராஹ அவதாரம். ஹிரண்யாக்ஷனிடம் இருந்து பூமாதேவியை காக்கும் பொருட்டு ஒற்றைப் பல் கொண்ட காட்டுப்பன்றி வடிவில் தோன்றினார் மஹாவிஷ்ணு.
அசுர வேந்தன் மாபலியின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு வாமனனாக அவதரித்து இரண்டடிகளில் இப்பிரபஞ்சத்தையும் விண்ணுலகையும் அளந்து தனது மூன்றாவது அடிக்கு நிலம் கோரி நின்ற திரிவிக்கிரமன் பரந்தாமனின் ஐந்தாவது அவதாரம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
வாமன அவதாரம் உருவத்தில் பெரியவரா? வராஹ அவதாரமா?
தனது உருவத்தை பன் மடங்கு பெருக்கி மூன்றாவது அடிக்கு இடமில்லாது இருந்த வாமனன் தானே என்று நமக்குத் தோன்றுவதில் விந்தை ஒன்றுமில்லை ஆனால் வராஹ அவதாரமே உருவத்தில் உயர்ந்தது..எப்படி..பார்ப்போமா!!!
பிரளய காலத்தில் ஈரேழு பதினான்கு லோகங்களையும் சமுத்திரம் மூட தனது கொடும் ஆட்சியால் பூலோக வாசிகளை வதைத்துக் கொண்டிருந்த ஹிரண்யாக்ஷன் இந்த புவியையே ஒரு பந்து போல கையில் எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் ஒளித்து வைத்தான்.
பூமாதேவியின் துயர் நீக்க காட்டுப்பன்றி உருவம் கொண்டு அவதரித்த அச்சுதன் கடலை இரண்டாக்கப் பிளந்து உள் சென்று பூமியை தனது வஜ்ரம் பாய்ந்த கூரிய ஒற்றைப் பல்லில் முத்தைப் போல ஏந்தி வெளிவந்து முன்பிருந்த இடத்திலேயே பூமாதேவியை அமரவைத்தார். பின் இரண்யாக்ஷனிடம் போர் புரிந்து மனிதனாலோ, மிருகத்தாலோ ஏன் தெய்வத்தால் கூட தனது உயிருக்கு ஆபத்து இல்லை என்று அவன் பிரம்மனிடம் வாங்கிவந்த வரத்தை முறி அடித்து அழித்தார்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது பூமியை இரண்யாஷன் பந்தைப் போல தூக்கினான் என்றும் அதே பூலோகம் எம்பெருமானின் பல்லின் முனையில் முத்தைப் போல அழகுடன் ஒளிர்ந்து அணி செய்தது என்று கூறுவதிலிருந்து இரண்யாக்ஷன் மகா உருவனே எனினும் வராஹ அவதாரத்தில் தோன்றிய ஸ்ரீனிவாசன் பேருருவன் என்பதிலும் வாமன அவதாரத்தை விட மஹா உருவன் என்பதும் தெளிவாகிறது.
கோவிந்தனின் மாதங்களில் ஒன்றான இப்புரட்டாசி மாதத்தில் அவன் கமல பாதத்தில் சரணடைந்து திருவருள் பெறுவோமாக!!!
ஓம் நமோ நாராயணாய நமஹ..
சொன்னவர் - துளசி
Comments
Post a Comment