கேதாரிநாத் ஆலயம்
இந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது கேதாரிநாத் ஆலயம். இங்கு எவ்வாறு செல்வது? எங்கு தங்குவது? சீதோஷண நிலை எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் இன்றைய "Travel Vloggers" சமூக வலைத்தளங்களில் மிக விரிவாக பதிவு செய்து வருவதால் அதைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு தேவை இல்லை.
கடும் பனிப்பொழிவு காரணமாக வருடத்தில் ஆறு (ஏப்ரல் - நவம்பர்) மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும் இச்சிவாலயத்தின் உற்சவர் பனிக்காலத்தில் மலை அடிவாரத்தில் Ukhimath என்ற இடத்தில் இருக்கும் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறார்.
கேதாரிநாத் ஆலயத்தில் சிவ பெருமான் "திமில்" வடிவ லிங்கமாக காட்சி அளிக்கிறார். பரவலாக அதற்கு கூறப்படும் கதை என்னவெனில் குருஷேத்ர போர் முடிந்ததும் பாண்டவர்கள் தங்களின் தோஷங்களையும் பாவங்களையும் களையும் பொருட்டு காசி விஸ்வநாதரை தரிசிக்க சென்றதாகவும் இவர்களுக்கு காட்சி அளிக்க விரும்பாத சிவபெருமான் அவ்வாலயத்தை விட்டு சென்று விட பாண்டவர்கள் பல இடங்களில் அவரைத் தேடி அலைந்ததாகவும் அப்போது பீமன் இமயமலைச்சாரலில் காட்டெருது வடிவில் (YAK) சிவபெருமான் இருப்பதை கண்டறிந்து அதை பலமாக பற்றிக் கொண்டதாகவும் அங்கிருந்து மறைந்த சிவபெருமான் பின் எருதின் ஐந்து உடல் பாகமாக பல்வேறு இடங்களில் பாண்டவர்களால் கண்டறிப்பப்படுகிறார்.
அப்போது காட்டெருதின் திமில் விழுந்த இடம் தான் இன்றைய கேதாரிநாத் ஆலயம். பாண்டவர்கள் இன்றிருக்கும் ஆலயத்தை எழுப்பி தவமியற்றி தங்களின் பாவங்களை தொலைத்ததாகவும் அவர்கள் தங்கிய இல்லங்கள் இன்றளவும் அங்கு காணப்படுவதாகவும் நம்பப்படுகிறது.
இதேபோல் காட்டெருதின் முகம் (ருத்ரநாத), கால்கள் (துங்கநாத்) , முடி(கல்பேஷ்வர்), நாபிக்கமலம் (மத்ய மஹேஸ்வர்) என்று மற்ற பாகங்கள் விழுந்த இடங்களிலும் கோவில்கள் அமைந்துள்ளது.
கேதாரிநாத் ஆலயம் குறித்த அரிதாக கூறப்படும் கதை என்னவெனில் ஆதிசங்கரர் சிவபெருமானை வழிபடுவதற்காக இங்கு வந்ததாகவும் ஆனால் கற்பகிரஹத்தில் மூலவர் இல்லை என்பதை அறிந்து அவரை தேடியபோது அம்மலைசாரலில் வாழும் காட்டெருதின் திமிலில் எம்பெருமானைக் கண்டு அவரை திரும்ப அழைத்ததாகவும் அதற்கு சிவபெருமான் அங்குள்ள பிராமணர்களில் செய்கைகள் தனக்கு பிடிக்காததால்தான் அவ்விடத்தை விட்டு வந்து விட்டதாக கூற அவர்களின் பாவங்களை பொருத்தருளி மீண்டும் கேதாரிநாத்திற்கு வந்து மக்களுக்கு அருள் பாலிக்குமாறு அதி சங்கரர் வேண்டிக்கொள்ள சிவபெருமானும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக நம்பப்படுகிறது.
அப்போது அக்காட்டெருது சிவபெருமான் தன்னை விட்டு நீங்குவதால் கவலை கொள்ள அதற்கு சிவபெருமான் "கேதாரிநாத் ஆலயத்தில் தான் திமில் வடிவில் காட்சி அளிக்கப்போவதாகவும் அங்கு தனக்குச் செய்யப்படும் சோடாட்சி உபச்சாரத்தில் வீசப்படும் வெண்சாமரம் அந்த எருதின் ரோமங்களால் (Fur) செய்யப்பட்டதாக இருக்கும் என்று உறுதியளித்தார். இன்றளவும் அவை பின்பற்றப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.
ஆலயத்தின் பின் புலம் எதுவாக இருப்பினும் நம் பாவங்களை களைய இம்மஹா சிவராத்திரி தினத்தில் (பிப்ரவரி 18, 2023) மகேஸ்வரனை மனமார வேண்டுவோமாக.
ஹர ஹர மஹாதேவா!!!
சொன்னவர் - துளசி
Comments
Post a Comment