புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரை # 4 - மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

முன்னொரு காலத்தில் வித்யாதரன் என்பவன் வாழ்ந்து வந்தான். சம்சாரியான அவன் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடையவன். பக்திமான். அவன் ஓர் ஆஸ்ரமத்தையும் நிர்மாணித்து நடத்தி வந்தான். வறுமை அவனை வாட்டியது. பல்வேறு பொறுப்புக்களால் லௌதீக வாழ்க்கையை விட்டு விலக முடியாமல் தவித்த வித்யாதரன் மனமொன்றி மஹாலக்ஷ்மியை பிரார்த்தித்து அவளை துதித்து ஸ்தோத்திரம் ஒன்றைப் பாடினான்.

அவனுடைய பக்தியில் மகிழ்ந்த மஹாலக்ஷ்மி அவனுக்கு காட்சி அளித்தாள். தன்னுடைய வறுமையை போக்க செல்வம் வேண்டி நின்ற அவனிடம் "உன்னுடைய கர்ம வினையின் படி வறுமை உனக்கு விதிக்கப்பட்டுள்ளது அதை மாற்ற இயலாது" என்று கூறிய மஹாலக்ஷ்மி "உன்னுடைய அடுத்த பிறவியில் வேண்டும் செல்வம் அனைத்தும் பெற்று மகிழ்ந்து வாழ்வாய்" என்று வரமளித்து மறைந்தாள்.

செய்வதறியாது திகைத்த வித்யாதரனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அக்கணமே குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் பூண்டான். எவனொருவன் அனைத்து பந்தங்களையும் விடுத்து துறவி ஆகிறானோ அவன் இப்பிறப்பிலேயே மறு பிறப்பு அடைந்தவன் ஆகிறான்.

தன்னை நோக்கி தூய பக்தியுடன் தொழும் வித்யாதரனுக்கு காட்சி அளித்த மஹாலக்ஷ்மி தாயார் இம்முறை அவன் வேண்டிய வரத்தை அளித்தாள். தன் முன்னே கொட்டிக் கிடக்கும் செல்வங்களை கண்டு மகிழ்ந்த வித்யாதரனுக்கு  அப்பொழுது தான் ஓர் உண்மை புலப்பட்டது. துறவியவனான் எதையும் தனக்கு என்று எடுத்து வைக்க இயலாது முக்கியமாக மண், பொன், பெண் இவற்றின் மீது அவனுக்கேது உரிமை?

இதை உணர்ந்த வித்யாதரன் தன் முன்னே கொட்டிக் கிடக்கும் செல்வன்களைக் கொண்டு பல்வேறு ஆன்மீக காரியங்களை செய்யலானான். ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற இடங்களின் மக்கள் நீராடுவதற்கு வசதியாக நதிக்கரையில் படித்துறைகளை அமைத்தவன் கங்கா அன்னைக்கு ஆலயம் ஒன்றையும் எழுப்பினான்.

தன்னிடம் எஞ்சி இருந்த செல்வங்களை குறுங்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இரு இளைஞர்களிடம் கொடுத்து விட்டு தனது ஆன்மீக பயணத்தைத் தொடர்ந்தான். அவன் மஹாலக்ஷ்மியை நோக்கி பாடிய பாடல்களே "மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரம்" என்ற பெயரில் அறியப்படுகிறது.

வித்யாதரனிடம் இருந்து செல்வங்களைப் பெற்ற அவ்விரு இளைஞர்கள் தங்களுக்கென்று சாம்ராஜ்யம் ஒன்றைக் கட்டமைத்தனர். ஹரிஹரன், புக்கர்(Bukkar) என்ற பெயர் கொண்ட அவர்கள் அமைத்த பேரரசு தான் நாம் அறிந்த "விஜயநகர பேரரசு". நாடெங்கும் பல்வேறு கோவில்களை நிர்மாணித்த இச்சகோதரர்கள் கவனிப்பாரற்று  கிடந்த ஆலயங்களை புணரமைத்து  குடமுழுக்கு  செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் ஒவ்வொரு வருடமும் பட்டாபிஷேகத்தின் போது அணியும் கிரீடமும், கைகளில் கம்பீரமாக வைத்திருக்கும் செங்கோலும் விஜயநகர பேரரசால் அளிக்கப்பட்டதுதான்.

சொன்னவர் - துளசி 

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..