யார் இந்த வித்யாவலி? - ஓணம் சிறப்புக் கட்டுரை

கேரள மக்களின் ப்ரத்யேகப் பண்டிகையான "ஓணம் விழா" இன்று உலகெங்கும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் உடுத்தி, மலர்க்கோலம் இட்டு, அறுசுவை உணவுகள் சமைத்து வருடத்திற்கு ஒரு முறை பாதாள லோகத்தில் இருந்து பூலோகம் வரும் மகாபலியை வரவேற்கிறார்கள்.




பிரகலாதனின் பேரனும் இரண்யகசிபுவின் வழித்தோன்றலுமாகிய மகாபலி ஏன் பாதாள உலகத்திற்கு அரசன் ஆனான் என்பது நாம் அறிந்த ஒன்று.

சப்த ரிஷிகளில் ஒருவரான காஸ்யபருக்கும் அதிதி அன்னைக்கும் மகனாக அவதரிக்கிறார் மஹா விஷ்ணு. அவரின் உயரம் காரணமாக வாமணன் என்று அழைக்கப்படும் அவருக்கு ஓர் மங்களமான நாளில் உபநயனம் செய்யப்படுகிறது. முப்பது முக்கோடி தேவர்களும் இந்நிகழ்வினைக் காண பூலோகம் வருவதோடு தங்களது அஸ்திரங்கள் அனைத்தையும் அவருக்கு அர்ப்பணமாக்கி வணங்குகிறார்கள்.

அசுரர் குல அரசன் மஹாபலி யாகம் ஒன்றை நடத்துகிறான். அதன் முடிவில் பிராமணர்களுக்கு அவர்கள்  வேண்டியதை தானமாக வழங்குகிறான் என்பதை அறிந்த வாமணன் பனைக்குடை, கமண்டலம் மற்றும் தண்டம் ஏந்தி மான்தோல் ஆடை அணிந்து அங்கு செல்கிறான்.

செல்லும் வழியில் பகவான் விஷ்ணுவின் இட பாகத்தில் அமைந்த லக்ஷ்மி தேவியோ அவரது மான் தோல் ஆடையிலிருந்து நெஞ்சில் வெளிப்பட்டு "தாங்கள் பிரம்மச்சாரியா? " என்று சீண்டுகிறாள். அவளை சமாதானம் கூறி அனுப்பி வைத்தபின் யாகம் நடந்த இடத்தை அடைகிறான் வாமணன்.

மஹாபலிச் சக்ரவர்த்தியின் மகளான வித்யாவலி இந்த பிராமண சிறுவனைக் தொலைவில் இருந்து  காண்கிறாள். அவனின் கள்ளம் கபடமற்ற அழகில் லயித்து நின்ற அவள் மனதில் இக்குழந்தையை நெஞ்சோடு அணைத்து பாலூட்ட வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. அவன் மேல் பாசம் பொங்குகிறது.

அதன் பின் வாமணன் அரசனிடம் மூன்றடி மண் கேட்டதும் வானளாவிய உருவம் கொண்டு மூவுலகை அளந்ததும் நாம் அறிந்த கதை தான். தன் தந்தையை பாதாள லோகத்திற்குத் தள்ளிய வாமனனின் மேல் தீராத வெறுப்பு தோன்ற பாசம் பொங்க நின்ற வித்யாவலியின் மனதில் அவனை அக்கணமே கொல்ல வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது.

வித்யாவலியின் இவ்விரு விருப்பங்களையும் பரந்தாமன் தன்னுடைய கிருஷ்ணாவதாரத்தில் நிறைவேற்றுகிறார். பூதகியாக வந்து குழந்தை கிருஷ்ணருக்கு விஷப் பால் கொடுக்கும் வித்யாவலிக்கு மோட்சத்தை அருளுகிறார் வைகுந்தன்.

இறந்து கிடந்த பூதகியின் உடலை நகர்ந்த முடியாத கோகுலத்து மக்கள் வேரோடு  மண் சாய்ந்த மரத்தை வெட்டி எரிப்பது போல அவளின் உடலை தீயிலிடுகிறார்கள் அப்போது அவள் பரலோகம் அடைந்ததை உறுதி செய்யும் விதமாக சந்தன வாசம் அவ்விடத்தை நிறைத்தது.

லௌதீக வாழ்க்கையில் கட்டுண்டு கிடக்கும் நாம் ஒரே க்ஷணம் கோவிந்தனை மனதார நினைத்தாலும் அவன் கிருபை நமக்குக் கிடைப்பது அறுதி என்பதை மேற்கண்ட நிகழ்வு விளக்குகிறது. 

ஓணம் பண்டிகையின் கதையை படிக்க -  https://nirmalasg.blogspot.com/2019/05/blog-post_21.html

சொன்னவர் - துளசி 

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..