புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரை # 2 - சிபாரிசு

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் வைகுந்தத்தில் வீற்றிருந்தார் அப்போது  பக்தன் ஒருவன்  அவரை  காண வந்தான் ஆனால் அவனின் கர்ம வினைகளை அறிந்த பரமனோ அவனைக் காண உளம் கொள்ளவில்லை ஆதலால் தலையை வலப்பக்கமாக திருப்பிக் கொண்டான்.

அப்பக்கம் அமர்ந்திருந்த ஸ்ரீதேவியோ "பக்தன் வேண்டுவதை கவனியாமல் ஏன் இப்பக்கம் திரும்புகிறீர்கள்" என்று அவரின் முகத்தை பக்தனை நோக்கித் திருப்பினார். இப்பொது விஷ்ணுவோ தனது முகத்தை இடப்பக்கமாக திருப்பிக் கொள்ள அங்கு வாசம் செய்யும் பூதேவியும் "பக்தனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்" என்று தலையை சரி செய்து விட முடிவாக ஸ்ரீ ஹரி தனது தலையை முற்றிலும் மறுபக்கம் சுழற்றி பின் புறத்திற்கு இட்டுச் செல்ல அங்கு குடி கொண்டிருக்கும் நீலா தேவி தன் பங்கிற்கு பக்தனுக்காக சிபாரிசு செய்ய வேறு வழியில்லாமல்  தனது பக்தனுக்கு செவி சாய்க்கிறார் அச்சுதன்.

தேய்ந்து வளரும் நிலவினை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வது போல ஒரு தாய் தன் குழந்தை எவ்வித தவறு செய்திருப்பினும் அதனிடம் பாரா முகம் கொள்வதில்லை என்பதையே தேவிகள் பக்தனுக்காக ஸ்ரீனிவாசனிடம் பரிந்துரை செய்வதைக் காட்டுகிறது 




பரந்தாமனின் அருள் வேண்டுமானால் தேவியின் மூலமும் லக்ஷ்மியின் அருளை பரந்தாமனின் மூலமும் பெறலாம் என்ற உண்மையையும் நமது கர்ம வினைகள் எதுவாக இருப்பினும் மனம் உருகி அவனை வேண்டுவோமாயின் அவன் அருளை எளிதில் பெறலாம் என்பதையும்  மேற் கூறிய நிகழ்வு வலியுறுத்துகிறது. இருவரையும் இணைந்து வணங்கினால் அன்றி நம் பிரார்த்தனைகள் நிறைவுறாது.

அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மஹாலக்ஷ்மியின் அவதாரம் என்று உணர்ந்த மண்டோதரி அவளை வணங்கினாள் ஆனால் ராமனை துதிக்கவில்லை ஆதலால் போரில் சுற்றத்தாரையும் உறவுகளையும் இழந்து துயருறுகிறாள்.

ஆதிசேஷனின் மகளான சுலோசனையும் இவ்வாறே தனது கணவன் இந்திரஜித்தை இழக்கிறாள்.

விஷ்ணுவை மஹாலக்ஷ்மி சகிதமாக வழிபட்ட விபீஷணனோ அரச பதவியை அடைந்து தர்மத்தை நிலை நாட்டுகிறான்.

இந்த பௌதீக வாழ்விலும் கணவனும் மனைவியும் சரிபாதியாக இணைந்து ஒருவர் மற்றவருக்காக  வாழ வேண்டும் என்ற லௌதீகக் கருத்தையும் நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டுகிறது மேல் கூறிய கதை.

ஓம் நமோ நாராயண நமஹ !!!

சொன்னவர் - துளசி 


Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..