புரட்டாசி மாதச் சிறப்புக் கட்டுரை 1 - வேதாந்த தேசிகர்

நாராயணனை மனதால் நினைப்பதற்கும் அவனின் நாமங்களைக் கூறுவதற்கும் நாள், கிழமை, மாதம் பார்க்கத் தேவையில்லை எனினும் வைகுந்தன் இம்மண்ணில் அவதரித்த மாதமாக புரட்டாசி கருதப்படுவதால் இம்மாதத்தில் பல்வேறு விரதங்களை நாம் கடைபிடிக்கிறோம் அத்தோடு  நின்று விடாமல் அவனை நினைவில் நிறைத்தும் அவனின் நாமங்களைக் கூறியும் பிரார்த்தனை செய்வோம். நமக்குத் தெரிந்த நாராயணன் கதைகளையும் லீலைகளையும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவோம். நானும் அவ்வகையில் புரட்டாசி மாதச் சிறப்புக் கட்டுரைகள்  (வாய் வழிக் கதைகள்) சிலவற்றை எழுதலாம் என்றிருக்கிறேன். வாசித்து உங்களுடைய வட்டங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான  வேதாந்த தேசிகர் 13-14-ம்  நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். ஆன்மீகத்தில் மட்டுமல்லாது இலக்கியம், அறிவியல், கணிதம், வேதாந்தம்  என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.  

வேதாந்த தேசிகரின் தந்தை ஒரு ஞானி. தாயை இழந்த மகனை காக்கும் பொறுப்பினால் லௌதீக வாழ்க்கையில் கட்டுண்டு கிடந்தார். தன்னுடைய நிலையை எண்ணியவாறு அமர்ந்திருந்த அவர் எதிரே ஓர் பல்லி முட்டை கீழே விழுந்து உடைந்தது. அதிலிருந்து வெளி வந்த குஞ்சு செய்வதறியாது திகைத்து நின்றது. சிறிது நேரத்தில் அதன் அருகே ஒரு கொசு வந்து அமர அதை புசித்து பசியாறிய  பல்லி அங்கிருந்து நகர்ந்து அகன்றது. அதைக் கண்ட  வேதாந்த தேசிகரின் தந்தை "இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவராசியையும் காக்கும் பொறுப்பு பரம்பொருளினுடையது" என்று எண்ணியவாறு வீட்டை விட்டு வெளியேறி மறைந்தார்.

அன்றிலிருந்து  வேதாந்த தேசிகர் பிக்ஷை பெற்று வாழும் முறையை கடைபிடிக்கலானார். அவர் அன்றாடம் பிக்ஷை வாங்கும் வீடுகளில் ஒரு கர்ப்பஸ்திரீ வாழ்ந்து வந்தார். அவரின் வயிறு பெரிதாகிக் கொண்டே சென்றதையும் சில மாதங்களில் அவர் சகஜ நிலைக்குத் திரும்பியதையும் கவனித்தார். சிலநாட்கள் கழித்து பிக்ஷை இட வந்த அஸ்திரீயிடம் அவரின் உடலில் உண்டான மாற்றங்கள் குறித்து அவர் வினவ அக்கர்ப்பஸ்திரீயின் தாயார் அவருக்கு குழந்தை பேறு உண்டாகியிருப்பதையும் அக்குழந்தைக்கு பாலூட்டி வருவதால் அவரின் உடலுருவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் விளக்கினார்.

அவ்விளக்கத்தை கேட்டு அறிந்த  வேதாந்த தேசிகர் "குழந்தை பிறந்தவுடன் அதனின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இறைவன் ஆவண செய்கிறான் அப்படி இருக்கும் பொழுது நான் ஏன் வீடுவீடாக சென்று பிக்ஷை பெற வேண்டும்..எனக்கு வேண்டியவற்றை அவனே வழங்குவான்" என்று எண்ணியவாறு அன்றிலிருந்து பிக்ஷை கேட்பதை நிறுத்தி விட்டு ஒரே இடத்தில அமர்ந்து இருக்கலானார். அவர் கேட்காமலேயே மக்கள் அவர் குடிலுக்கு சென்று பிக்ஷை வழங்கலாயினர். தன்னுடைய வாழ் நாள் முழுவதும் இதே வாழ்கை முறையையே கடைபிடித்து வாழ்ந்தார் வேதாந்த தேசிகர்.

காலங்கள் கடந்தன. வேதாந்த தேசிகரிடம் வாதம் செய்து வெல்ல முடியாத பிற பண்டிதர்கள் அவரின் ஞானத்தை எண்ணி பொறாமை கொண்டனர். அவரின் பெருமையை குலைக்க திட்டம் தீட்டினர்.  வேதாந்த தேசிகரின் ஆஸ்ரமத்தில் அவருக்கு பணிவிடை செய்யும் ஒருவன் இருந்தான். அவன் ஒரு ஏழை , அஞ்ஞானி, வெகுளி. அவனை அழைத்த பண்டிதர்கள் " நீ பணிவிடை செய்யும் சாமி தான் அனைத்தும் அறிந்தவராயிற்றே அவ்வாறிருக்க நீ ஏன் வறுமையில் உழல வேண்டும்?  வேதாந்த தேசிகரிடம் சென்று உனக்கு செல்வம் வேண்டும் என்று கேள்" என்று தூண்டினர்.

தன்னிடம் செல்வம் வேண்டி நின்ற பாமரனைக்  கண்ட  வேதாந்த தேசிகர் தனது ஞானத்தால் நடந்தவற்றை அறிந்து கொண்டார் எனினும் அவனின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு மகாலட்சுமியை துதித்து மனமுருகி பாடத் துவங்கினார். அவரின் பக்தியில் மகிழ்ந்த லெட்சுமி தங்க நாணயங்களை அவர் குடிலில் மழையாக பெய்வித்தார். அதை அப்பாமாரனுக்கு கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்ட அவனின் வறுமை மட்டுமல்ல அஞ்ஞானமும் அவனை விட்டு விலகியது. 

இந்நிகழ்வினைக் கண்ட பண்டிதர்கள் தங்களின் தவறினை உணர்ந்து  வேதாந்த தேசிகரிடம் மன்னிப்பு கோரியதோடு அவரின் சிஷ்யர்களாக தங்களை சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டி நின்றனர்.

அந்நிகழ்வில் மகாலெக்ஷ்மியைத் துதித்து  வேதாந்த தேசிகர் பாடிய பாடல்கள் தான் "ஸ்ரீ ஸ்துதி" என்ற பெயரில் வழங்கப்படுகின்றது.

ராமானுஜரின் காலத்திற்குப் பிறகு வைஷ்ணவத்தின் பெருமைகளைச் சொல்லும் பொருட்டு தோன்றிய  வேதாந்த தேசிகர் ஸ்ரீனிவாசப் பெருமானின் திருமணியாகிய காண்டா (Ganta) வின் அவதாரம் என்று சிலரும், பரந்தாமன் வீற்றிருக்கும்  ஆதிசேஷனின் அவதாரம் என்று சிலரும் நம்புகின்றனர். திருமாலின் அவதாரப் பெருமைகளை இவுலகிற்கு உணர்த்தும் பொருட்டே அவர் அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது.

அவரின் 750-வது ஜனன  வருடத்தை முன்னிட்டு இந்திய அரசாங்கம்  2019-ம் ஆண்டு அவரின் உருவம் அச்சிடப்பட்ட தபால்தலையை வெளியிட்டு கொண்டாடியுள்ளது.

மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு அருகே ஸ்ரீ வேதாந்த தேசிகர் சன்னதி அமைந்துள்ளது. 


வேதாந்த தேசிகர் அருளிய "ஸ்ரீ ஸ்துதி" யை பாடி மகாலெஷ்மியை தொழுது  இல்லௌதீக வாழ்விற்கு தேவையான பொருட்செல்வத்தை பெறுவதோடு இச்சம்சாரச் சூழலிலிருந்து விடுபடும் ஞானத்தையும் வேண்டுவோமாக!!! 

சொன்னவர் : துளசி.

அடுத்த கட்டுரை சனி அன்று பிரசுரமாகும் 😀

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..