விநாயகர் சதுர்த்தி சிறப்புக் கதை/ஆடிப்பெருக்கு

ரிக் வேதத்தில் பல்வேறு சுலோகங்களை நமக்கு அளித்தவர்கள் அகத்திய மாமுனியும் அவரது மனைவியும். சப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்தியரின் மகனான அகத்திய முனிவர் தான் காவேரியை கரை புரண்டு ஓடச் செய்தவர் என்பது நம்மில் பலரும் அறிந்ததே எனினும் அது எவ்வாறு சாத்தியமானது என்பதற்கு பல வகையான கதைகளும் விளக்கங்களும் கூறப்படுகின்றன. அவற்றில் ஒரு கதையை இப்பொது தெரிந்து கொள்வோமா?

அகத்திய முனி வடக்கே வாசம் செய்து கொண்டிருந்த வேளையில் தனது மகளை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்திருந்த அரசரை சென்று சந்தித்தார். தவ முனிக்கு தனது மகளை தாரை வார்த்துக் கொடுக்க மன்னன் தயங்க அவரின் மகளோ மனமுவந்து அகத்திய முனியை மணந்து கொள்கிறாள். அவளின் பெயர் தான் லோபாமுத்ரா. 

சிறிது காலத்திற்குப் பிறகு தெற்கு நோக்கிய  தனது பயணத்தை தொடங்கினார் அகத்தியர். கால் நடையாகவே பயணம் செய்யும் வழக்கம் கொண்ட முனிவர் தனது மனைவியால் எவ்வாறு இத்தொலைவைக் கடக்க முடியும் என்றெண்ணி ஓர் உபாயத்தை கண்டறிந்தார் அதன் படி லோபாமுத்ரையை நீராக மாற்றி தனது கமண்டலத்தில் வைத்துக் கொண்டார்.

இவ்வாறு தனது யாத்திரையை தொடங்கிய அவர் தென்னகத்தை அடையும் தொலைவு வந்ததும் அவ்விடம் எல்லாம் வறட்சியாக இருப்பதைக் கண்டார். தனது கமண்டலத்தை ஓர் பாறையின் மேல் வைத்துவிட்டு சந்தியா வந்தனம் செய்யத் துவங்கினர் அப்போது எங்கிருந்தோ வந்த காகம் அக்கமண்டலத்தை தட்டி விட அதிலிருந்த நீர் முழுவதும் வழிந்து கரை புரண்டு நதி போல்  ஒடத் துவங்கியது.

கோபத்தினால் அக்காகத்தை விரட்டிக் கொண்டு ஓடிய அகத்தியர் சிறிது நேரத்தில் காகம் மறைந்து விநாயகர் காட்சி தர அவரை பக்தியுடன் வணங்கினார். " நீர் என்று தெரியாமல் சு..சு என்று விரட்டிவிட்டேன்..என்னை மன்னியுங்கள்" என்று விநாயகரின் முன் தோப்புக்கரணம் போட்டார்..பின் தன் தலையில் கொட்டிக் கொண்டு வணங்கினார்.

விநாயகரோ, "முனிவரே..சூரபத்மன் என்ற அரக்கன் தனது தீவிர பக்தியால் எய்திய வரத்தால் வருணனை தனது பாதாள சிறையில் அடைத்து விட்டான் ஆதலால் மழையின்றி இப்பகுதி முழுவதும் மிகவும் வறண்டு மக்கள் அவதிப் படுகின்றனர். அவர்கள் சிவ பெருமானை நோக்கி பிரார்த்தித்தும் வந்தனர். தாங்கள் இப்பகுதிக்கு வந்ததை அறிந்த என் தந்தை தான் என்னை இக்காரியத்தைச் செய்யப் பணித்தார்" என்று கூறினார். 

இவ்வாறு கர்நாடக மாநிலத்தில் உருவான காவேரி  கரை புரண்டு ஓடி தென்னகத்தை பசுமை ஆக்கியது. தலைக் காவேரி உருவான இத்தினத்தையே நாம் ஆடிப்பெருக்காக கொண்டாடுகிறோம்   லோபாமுத்திரையும் சிவ பெருமானின் அருளால்  தனது கணவருடன் ஒன்று சேர்ந்தார்.

இப்பொழுது தெரிகிறதா நாம் ஏன் விநாயகர் சந்நிதியில் தோப்புக்கரணம் போட்டும், தலையில் கொட்டிக் கொண்டும் நமது வேண்டுதலை முன் வைக்கிறோம் என்று!!!

 செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாள்  அன்று முழுமுதற் கடவுள் விநாயகனை முழுமனதுடன் பூஜித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

சொன்னவர் - துளசி 

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..