திருப்பரங்குன்றம் சிறப்பு

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றென்ற பெருமையைப் பெற்றது, இத் தலத்திற்கென்று பல சிறப்புக்களும் பெருமைகளும் உண்டு அவற்றில் பலருக்கும்  தெரியாத, பரவலாக அறியப்படாத  தகவல்களைக் காண்போமா?

1. தாரகாசுரனை வெல்வதற்கு சென்ற தேவர்களின் படைக்கு சேனாதிபதியாக தலைமை தாங்கி வெற்றியை தேடித் தந்தவர் முருகப் பெருமான். இதில் அகமகிழ்ந்த தேவர்களின் அரசன் இந்திரன் தனது மகள் தேவசேனையை சரவணனுக்கு மணமுடிக்க விருப்பம் தெரிவிக்க அவர்களின் திருமணம் நடந்தது மதுரை திருப்பரங்குன்றத்தில் தான். மும் மூர்த்திகளும்  முப்பது முக்கோடி தேவர்களும் கலந்து கொண்ட இத்திருமணவிழாவில் அனைவருக்கும் கல்யாண விருந்தை வழங்கும் வண்ணம் இத்தலத்திற்கு வந்தார் அன்னபூரணி. கற்பகிரகத்திற்கு செல்லும் வழியில் அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது. தென்னகத்திலேயே மிகவும் பழைமை வாய்ந்த அன்னப்பூரணி ஆலயங்களில் திருப்பரங்குன்றமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஞானத்தை வேண்டி நாம் தியானிக்கும் கடவுள் தட்சிணாமூர்த்தி. அனைத்து ஆலயங்களிலும் அவரின் சிற்பத்தை கல்லால் வடித்த மரத்தின் கீழ் அமர்ந்திருப்பதாகக்   காணலாம். அம் மரத்தின் பெயரே கல்லால் மரம் ஆகும். திருப்பரங்குன்றம் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்திருக்கும் லஷ்மி தீர்த்திற்கு அருகாமையில் அமைந்துள்ள  பிள்ளையார் சன்னதிக்கு போகும் வழியில் கல்லால் மரத்தைப் பார்க்கலாம். அதனுடைய பெயருக்கு நேர் மாறாக இதன் இலைகள் பஞ்சு போன்று மெதுவாக, கொய்யா மர இலைகளை ஒத்திருக்கும். மூலவரை தரிசிக்க சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் நீண்ட பாதையாக போடப்பட்டிருக்கும் பாலங்களின் மேல் நடந்தீர்கள் என்றால் இவ்விலைகளை தொட்டும் ரசிக்கலாம்.

3. "நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே" என்று கைலாயநாதனின் பாடலிலேயே குற்றம் கண்டுபிடித்தவர்  நக்கீரர். அதனால் கோபமடைந்த  சிவ பெருமான் அவரை  தன்னுடைய நெற்றிக்கண்ணை திறந்து பார்க்க அதிலிருந்து வெளிப்பட்ட அனலை தாங்கிக் கொள்ள முடியாத நக்கீரர் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி உயிர் தப்பினார் ஆனால் தன்னுடைய உடற்காயங்கள் ஆறும் வரை அவர் தங்கியிருந்தது திருப்பரங்குன்றம் மலைகளில் தான். இங்கிருந்த குகை ஒன்றில் இருந்த வண்ணமே அவர் முருகாற்றுப்படையை இயற்றினார் என்று கூறுகிறது புராணம்.

4. மகாபாரதத்தை இயற்றியவர் வியாசர். வியாசரின் தந்தை மகரிஷி பராசரர். திருப்பரங்குன்றத்தின் கொடி மரத்தின் அருகில் இருக்கும் மயில் மற்றும் நந்தி சிலையை நாம் அனைவரும் கண்டிருப்போம் அச்சிலைகளுக்கு நேர் எதிரே இருக்கும் சன்னதிக்கு இருபுறமும் வியாசர், பராசரர் சிலைகளைக் காணலாம். தென்னகத்திலேயே இவர்கள் இருவரும் ஒரே சன்னதியில் அமர்ந்திருப்பது இங்கு மட்டும் தான்!!

மேற்கூறிய இத்தல சிறப்புகளை அடுத்த முறை இக்கோவிலுக்கு செல்லும் போது மறக்காமல் கவனிக்கவும். தெரியாதவர்களுக்கும் சுட்டிக் காட்டவும்.

சொன்னவர் : துளசி 


Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..