மாரியம்மா.. மாரியம்மா
தை மாதம் என்றாலே சக்தி வழிபாடும் சக்தியிலிருந்து தோன்றிய சண்முகன் வழிபாடும் கோவில்களில் கலை கட்டும். பாத யாத்திரை, பால் குடம் என்று பக்தர்கள் கூட்டம் சரவணனின் கோவில்களில் அலை மோதும் என்றாலும் தை வெள்ளிக்கிழமைகளில் "தாயே..நீயே கதி" என்று தாய்மார்கள் கூடுவது அம்மன் சன்னதிகளில் தான் குறிப்பாக மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் தை மாதம், தை பூச நாளில் (ஜனவரி 28, 2021) நடைபெறும் தெப்பத்திருவிழா மிகப் பிரசித்தி பெற்ற கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.
மாரியம்மா பெயர் காரணம் என்ன? அறிந்து கொள்வோமா?
சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கு ரேணுகா என்ற மனைவியும் ஐந்து புத்திரர்களும் இருந்தனர் அவர்களில் கடைசிப் புதல்வன்தான் வீரத்திற்கும் கோபத்திற்கும் பெயர் போன மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்.
அனு தினமும் ஆற்றங்கரைக்குச் செல்லும் ரேணுகாதேவி அங்குள்ள ஈர களிமண்ணில் குடம் வடித்து அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு திரும்புவது வழக்கம். பதி விரதத்தால் அவள் பெற்ற சக்தியே இதை சாத்தியமாகியது.
ஓர் நாள் அவ்வாறு குடம் செய்து கொண்டிருக்கையில் வானத்தில் பறந்த கந்தர்வன் ஒருவனின் நிழலை ஆற்று நீரில் கண்ட ரேணுகா ஒரு கணம் அவனின் அழகை தன்னையறியாமலேயே ரசித்து விட்டாள். அடுத்த நிமிடம் அவள் வடித்த குடத்தில் நீர் நிற்கவில்லை. குடம் கரைந்தழிந்தது. மீண்டும் மீண்டும் குடம் வடிக்க முயன்றவளுக்கு தோல்வியே கிடைக்க செய்வதறியாது திகைத்து நின்றவள் அழுது கொண்டே பயத்துடன் ஆசிரமத்தை அடைந்தாள்.
தன்னுடைய தவ வலிமையால் நடந்ததை அறிந்து கொண்ட ஜமதக்னி முனிவர் கடும் கோபம் கொண்டு ஆசிரமத்தை விட்டு வெளியேறுமாறு ஆணையிட்டார். தனது தவறுக்கு மன்னிப்பு வேண்டி நின்ற மனைவியைப் பார்த்தவருக்கு ஆத்திரம் தலைக்கு ஏற தனது புத்திரர்களிடமே தாயைக் கொன்று விடுமாறு ஆணையிட்டார். தந்தையின் ஆணையை நான்கு புத்திரர்களும் மறுத்து விட இளையவனான பரசுராமர் தந்தையின் சொல்லை நிறைவேற்ற தனது கோடாரியுடம் கிளம்பினார்.
உயிருக்கு பயந்து ஆற்றங்கரைக்குத் தப்பி ஓடிய ரேணுகா தேவிக்கு அங்கு வாழ்ந்து வந்த வண்ணான் குடும்பம் அடைக்கலம் கொடுத்தது. கோபத்துடன் அங்கு வந்த பரசுராமர் தனது கோடரியால் வண்ணான் மற்றும் அவன் மனைவியின் தலையை வெட்டிச்சாய்த்து விட்டு கடைசியாக தனது தாயின் தலையையும் கொய்து விட்டு ஆசிரமம் திரும்பினார்.
தன் சொல்லை நிறைவேற்றி விட்டு வந்திருக்கும் தன் புதல்வனை பெருமிதத்தோடு கண்ட தந்தை "உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள்" என்று கூற தனது தாயை மறுபடியும் உயிர்பிக்க வேண்டும் என்று வேண்டினார் பரசுராமர். அதற்குச் சம்மதித்த ஜமதக்னி அதற்குரிய மந்திரத்தை பரசுராமருக்கு அளித்தார்.
ஆற்றங்கரைக்குச் சென்ற பரசுராமர் துண்டாகிக் கிடந்த மூன்று உடல்களையும் அதனதன் தலையோடு இணைத்து மந்திரத்தை உச்சரித்து உயிரளித்தார். உயிருடன் எழுந்து நின்ற மூவரையும் பார்த்து அதிர்ந்து போனார் ஏனெனில் அவசரத்தில் தனது தாயின் உடலோடு வண்ணாத்தியின் தலையை இணைத்திருந்தார். தனது தந்தையிடம் நடந்ததைக் கூற அவரோ பரசுராமர் உயிர்ப்பித்த வண்ணமே தனது மனைவியை ஏற்றுக் கொண்டார்.
பரசுராமரின் தாயான ரேணுகா தேவியையே நாம் சக்தியின் வடிவமான அம்மனாக பல்வேறு பெயர்களில் வணங்குகிறோம். தலை மாறி நின்றிருப்பதால் அவள் பெயர் "மாரியம்மா" என்றானது ஆதலால் தான் மாரியம்மனை வழிபடும் போது அவளின் முகத்தைப் பார்க்காமல் பாதத்தைப் பார்த்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. ரேணுகாதேவிக்கு அடைக்கலம் வழங்கிய வண்ணாத்தியும் "பேச்சியம்மா " என்ற பெயரின் வெளிப்பிரகாரத்தில் காவல் தெய்வமாக ஆலயம் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள். வண்ணான் பரம்பரையில் இருந்து வரும் ஆண்களே இன்றளவும் மதுரை மாரியம்மன் கோவிலில் பூசகர்களாக கைங்கர்யம் செய்து வருகிறார்கள்.
எல்லையில் நின்று நாம் அனைவரையும் தாயெனக் காக்கும் அன்னையை வணங்கி அவள் அருள் பெறுவோம் !!!
பின் குறிப்பு : மதுரை சௌராஷ்ட்ரா சமூக மக்கள் ரேணுகா தேவியை தங்கள் குல தெய்வமாகக் கருதியே தங்கள் வீட்டில் "அம்மா பெட்டி" என்ற பெயரில் ஒரு ஓலைப் பெட்டியை வைத்து வழிபட்டு ஒவ்வொரு வருடம் தை மாத வெள்ளியன்று பொங்கலிட்டு பூசை செய்து புதிய பெட்டியை வைக்கும் சடங்கை நிகழ்த்துகிறார்கள்.
சொன்னவர் : துளசி
Pictures Taken From Google.
Comments
Post a Comment