திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை என்றாலே நம் நினைவிற்கு வருவது சுவாமி அண்ணாமலை குடிகொண்டிருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவிலும் அங்கு நடைபெறும் முக்கிய உற்சவங்களான கார்த்திகை பெருந் தீபமும் கிரி வலமும் தான் ஆனால் ஒவ்வொரு வருடமும் தை மாத பிறப்பான பொங்கல் விழாவை அடுத்த மாட்டுப் பொங்கல் தினத்தன்று கணவன் மனைவியின் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் "திருவூடல் திருவிழா" நடைபெற்று வருகிறது.

இந்நாளில் அண்ணாமலையாரும்  உண்ணாமலை அம்மனும் தம்பதி சமேதராக நந்தி தேவருக்கு காட்சி அளித்துவிட்டு சித்தி வாசல் வழியாக வெளி வந்து சூரிய பகவானுக்கு தரிசனம் அளிப்பார்கள். சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவைக்  குறிக்கும் விதமாக இருவரும் மாட வீதியை மூன்று முறை சுற்றி வருவார்கள். அன்று மாலை சிவனும் பார்வதியும் திருவூடல் வீதியில் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும். 

அம்மை அப்பனுக்குள் அப்படி என்ன ஊடல் என்கிறீர்களா? வாருங்கள் அதன் பின்புலத்தை அறிந்து கொள்வோம்.

சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் ஏன் பார்வதி தேவியைக் கூட வழிபட மறுப்பவர் பிருங்கி முனிவர் .ஓர் முறை முனிவர்களும் ரிஷிகளும் பார்வதி பரமேஸ்வரனை சுற்றி வழிபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் அங்கு வந்த பிருங்கி முனி வண்டாக உருமாறி  கைலாயநாதனை மட்டும் மூன்று முறை வலம் வந்து வணங்க, கடும் கோபம் கொண்ட பார்வதி "என்னை வழிபடாது அவமதித்ததால் உன்னுடைய சக்தி உன் உடலை விட்டு இக்கணமே நீங்குவதாக என்று சபித்தார்" நம் அனைவர் உடலிலும் அசையாத வடிவமாக  சிவன் எலும்பாகவும் தோலாகவும் இருக்கிறார். அசையும் சக்தியான பார்வதி தேவி ரத்தமாகவும் தசையாகவும் இருக்கிறார். சாபத்தின் காரணமாக பிருங்கி முனி தன் அசையும்  சக்தியை இழந்து எலும்புக் கூடாகி மண்ணில் சரிய அவரைத் தாங்கிப் பிடித்த சிவபெருமான் அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க மோட்சத்தை வேண்டுகிறார் பிருங்கி முனி. பார்வதி தேவி இதற்கு உடன் படவில்லை இருந்தும் சிவ பெருமான் இதில் உறுதியாக இருந்ததால் உமாவிற்கும் மகேஸ்வரனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டது.




இந்நிகழ்வை நினைவுறுத்தும் விதமாகத்  திருவண்ணாமலையில்  கொண்டாடப்படும் திருவூடல் திருநாளன்று அம்மை அப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். பிருங்கி முனிவருக்கு சிவ பெருமான் மோட்சம் அளிப்பதில் பிடிவாதமாக இருப்பது போலவும்  அதனால் பார்வதி தேவி ஊடல் கொள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஊடல் அதிகமானதும் பார்வதி தேவி புறப்பட்டுச்  சென்று  தன்னுடைய சன்னதியில் கதவைச் சாத்திக் கொள்வாள். அம்பாளை சமாதானம் செய்யும் விதமாக பறவை நாச்சியாரிடம் சுந்தரருக்காக தூது சென்ற சிவ பெருமானே இப்பொது சுந்தரரை பார்வதியிடம் தூதிற்கு அனுப்புவார் ஆனால் பிருங்கி முனிவரிடம் ஏற்பட்ட அவமானம் காரணமாக தூது வெற்றி பெறவில்லை எனவே சிவன் அன்று இரவு தனியாகப் புறப்பட்டுச் சென்று குமரன் கோவிலில் அமர்ந்து விடுவார். அடுத்த நாள் கிரிவலம் புறப்படுவார். ஆண்டுக்கு இரு முறை அண்ணாமலையார் கிரிவலம் செய்வதில் இதுவும் ஒன்று. வழியில் பார்வதியின் மாயையால் தோற்றுவிக்கப்பட்ட திருடர்கள் சிவ பெருமானின் ஆடை ஆபரணங்களை பிடுங்கிக்  கொள்வர் எனினும் அருளிய படி பிருங்கி முனிவருக்கு மோட்சம் வழங்கி மாலை ஆலயம் திரும்புவார்.

அங்கு அம்பிகையின் கதவைத் தட்டும் சிவ பெருமானிடம் "என்னை சமாதானம் செய்ய முயற்சித்த பின்னும் இப்படித்  தனியாகச் சென்று அனைத்தையும் இழந்து நிற்கிறீர்கள்..இது சரியா? எனக்கு வாக்களித்த படி உத்தராயணத் தினத்தன்று ஒற்றைக் காலில் நின்று நடனம் ஆட வேண்டும் " என்று பார்வதி  கூற சிவ பெருமான் அற்புத நடனம் ஆடுகிறார்..அதனால் மனம் குளிந்த பார்வதி தேவி ஊடல் தீர்ந்து கதவைத் திறக்கிறாள். இருவரும் இணைத்து குதூகலமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். இந்நிகழ்வை தம்பதி சமேதராகக் கண்டு வணங்கினால் கணவன் மனைவியர் இடையேயான ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். "திருவூடல் கண்டால் மறு ஊடல் இல்லை" என்ற பழமொழி கூட  உண்டு.

சாடலுக்கு'பதில் வெறுப்போ ஆத்திரமோ அற்ற ஊடலைக் கையாண்டால்  இல்லற வாழ்வின் இன்பம் பன் மடங்கு பெருகுவது நிச்சயம் அதற்கு கைலைநாதனே சாட்சி!!!

மூலம் : ராமகிருஷ்ண விஜயம், ஜனவரி 2021

சொன்னவர் : துளசி 

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..