ஆயுத பூஜை சிறப்புக் கட்டுரை
கொரோனா என்னும் அரக்கனை அழிக்கும் ஆயுதம் (தடுப்பு ஊசி ) இன்னும் அறியப்படாத இந்நிலையில் அசுரர்களை அழிக்கவும் அநீதியை வெல்லவும் தெய்வங்கள் கைகளில் ஏந்திய ஆயுதங்களைப் பற்றி காண்போம்.
தேவ சிற்பி விஸ்வகர்மா ஓர் மரப்பட்டையை இரண்டாக்கப் பிளந்து உருவாக்கிய இரட்டை வில் சிவ தனுசு மற்றும் விஷ்ணு தனுசு என்று அறியப்படுகிறது. அதில் முதலில் சிவ தனுசுவைப் பற்றி காண்போம்.
சிவ தனுசு (திரிபுரம் எரித்தல்)
முன்னொரு காலத்தில் மூன்று அசுர சகோதரர்கள் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தனர் அவர்களின் தவம் கனிந்து அவர்கள் முன் தோன்றிய பிரம்மாவிடம் சாகா வரம் வேண்ட அவரோ அவர்களை சிவனை நோக்கி தவம் புரியுமாறு பணித்தார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
அவர்களின் தவத்தில் மகிழ்ந்த மகேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி வேண்டிய வரங்களை கேட்குமாறு பணிக்க சகோதரர்கள் "தங்கம், வெள்ளி மற்றும் இரும்பால் ஆன மூன்று பறக்கும் மாளிகைகளை பெற்றனர் முடிவில் இறப்பின்மை வேண்டும்" என்று வேண்ட சிவனோ "இப்புவியில் பிறந்த அனைவரும் மடிய வேண்டும் என்பது நியதி ஆதலால் தாங்கள் எப்போது, யார் கையால் எவ்வண்ணம் மடியலாம் என்பதை தெரிவு செய்யலாம்" என்று கூற "தங்களைப் போன்ற சக்தி உள்ளவரால் மட்டுமே எங்களுக்கு இறப்பு வர வேண்டும் மேலும் நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் மடிய வேண்டும் "என்று வரம் பெற்றனர்.
காலங்கள் கடந்தோடியது. அம்மூவரும் தங்கள் பறக்கும் மாளிகையில் நல்லாட்சி புரிந்தனர். அவர்களின் ராட்சியத்தின் அனைத்து பிரதிகளும் சிறந்த சிவ பக்தர்களாகத் திகழ்ந்தனர். இதைப் பார்த்த தேவர்களுக்கு முக்கியமாக இந்திரனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. எங்கே தன் ராஜ்ஜியத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து பிரம்மாவிடம் முறையிட அவர் விஷ்ணுவை சந்திக்குமாறு ஆலோசனை கூறினார் ஆனால் காக்கும் கடவுள் அவர்களை அழைத்துக் கொண்டு கைலாயம் விரைந்தார். மூவுலகும் நிலை குலையாமல் காக்கும் பொருட்டு அவ்வரக்கர்களை வதம் செய்ய வேண்டும் என்று கூற சிவனோ "அவர்கள் சிவ பக்தர்களாக இருக்கும் வரையில் அவர்களை என்னால் அளிக்க முடியாது "என்று கூறி விடுகிறார்.
அசுரர்களின் மனதை மாற்றச் செல்கிறார் தேவரிஷி நாரதர். அசுர சகோதரர்களிடம் "அனைத்து வளங்களையும் வரங்களையும் பெற்றுத் திகழும் நீங்களே உயர்ந்தவர்கள்..நீங்களே கடவுள்" என்று கூற…அவர்களும் மமதையில் நிலை குலைந்தனர். சிவ வழிபாடு நின்றது. அனைவரும் மூன்று சகோதரர்களையே வழிபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். பறக்கும் மாளிகைக்குக் கீழ் வாழும் பூலோக மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். தங்களை காக்கும் பொருட்டு இறைவனிடம் மன்றாடினர்.
இதுதான் சமயம் என்றுணர்ந்த சிவ பெருமான் தேவர்கள் புடை சூழ அசுர உலகத்தை அடைந்தார். பறக்கும் மூன்று மாளிகைகளும் ஒரே கோட்டில் வரும் சமயத்தில் தன் தனுசிலிருந்து புறப்பட்ட அம்பால் அம்மூன்று அசுரர்களையும் மாளிகையோடு எரிந்தழித்தார். இந்நிகழ்ச்சியே "திரிபுரம் எரித்தல்" என்று அறியப்படுகிறது.
விஷ்ணு தனுசு
பூலோகத்தில் இராவணனை அழிக்க ராமனாக அவதரித்த மகா விஷ்ணு விஸ்வாமித்ரருடன் சீதையின் சுயம்வரத்திற்கு மிதிலைக்குச் செல்கிறார். புதையலைப் போல் தனக்குக் கிடைத்த தன் புத்திரியை மணப்பவன் சாதாரணமானவனாக இருக்கக் கூடாது என்பதால் தங்கள் வம்சத்தில் காலம் காலமாக காக்கப்படும் பரசுராமரால் அளிக்கப்பட்ட சிவதனுசில் எவன் நாண் பூட்டுகிறானோ அவனே சீதையின் மணாளனாகத் தேர்வு செய்யப்படுவான் என்று அறிவிக்கிறார்.
சுயம்வரத்தில் பங்கு கொண்ட எவராலும் சிவ தனுசை அசைக்கக் கூட முடியாத சூழலில் "என் மகளை மணக்கும் வீரன் எவரும் இல்லையா?" என்று வருந்தும் ஜனகரிடம் "இது எங்கள் சூரிய குலத்திற்கே இழுக்கு "என்று பொங்கியெழும் லக்ஷ்மணனை அமைதிப் படுத்தி விஸ்வாமித்ரரின் அனுமதியின் பேரில் ராமர் சிவதனுசை மிக அலட்சியமாக எடுத்து அதில் நாண் பூட்ட அது உடைந்து விடுகிறது. ராமனின் பராக்கிரமத்தில் அனைவரும் வாயடைத்து அமர்ந்திருக்க கடும் கோபத்தில் அரசவை புகுகிறார் பரசுராமர்.
சிவதனுஸை உடைத்த சத்ரியன் யார் என்று அறைகூவ "ராமர் விஷ்ணுவின் அவதாரம்" என்று உணருகிறார் இருப்பினும் தன்னிடத்தில் இருக்கும் விஷ்ணு தனுசுவை அவரிடம் அளித்து நாண் ஏற்றக் கோருகிறார். அம்பில் வில்லைத் தொடுத்த ராமர் "இதை எங்கு யார் மீது ஏவலாம்" என்று வினவ தன்னுடைய ஆணவம் அழியும் வண்ணம் வட திசையில் அம்பை விடுமாறு கூறிவிட்டு அத்தனுஸை ராமரிடமே அளித்து விட்டுச் செல்கிறார்.
கோதண்டம்
தசரத மைந்தனாக மஹாவிஷ்ணு அவதரித்த ராம அவதாரத்தில் அவர் கையில் வைத்திருந்த வில்லின் பெயர் கோதண்டம். உடையாத நாணை தன்னகத்தே கொண்டிருக்கும் கோதண்டம் என்னும் வில்லை தரையில் தாழ்த்தி வைக்க இயலாது. அதிலிருந்து புறப்படும் அம்பானது பிச்சிப்பூவை ஒத்திருக்கும். பகைவர்களை குறி தவறாது தாக்கும் மகிமை கொண்டது. இதை ராம பாணம் என்றும் கூறுவார்கள்.
காண்டீபம்
வாரணாவதம் அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய பாண்டவர்கள் திரௌபதியை மணந்த பின் துருபதன் துணையுடன் அஸ்தினாபுரம் திரும்புகிறார்கள் பின் அவர்களுக்கு உரிய நிலம் அளிக்கப்படும் என்று கூறி காண்டவப்பிரஸ்தத்தை அளிக்கிறார்கள். பாம்புகள் வாழும் காடான அந்நிலத்தை அர்ஜுனன் தன் அம்பினால் தீக்கிரை ஆக்குகிறான். இச்செயலால் மகிழ்வுற்ற அக்னி தேவன் "காண்டீபம் "என்னும் வில்லை அர்ஜுனனுக்கு அளிக்கிறான். இதில் இரு கைகளாலும் ஒரே சமயத்தில் அம்பு தொடுக்கலாம்.
காம பாணம்
மன்மதன் கையில் இருக்கும் வில்லானது கரும்பினால் ஆனது அதிலிருந்து புறப்படும் அம்பானது ஐந்து வகை மலர்களால் ஆனது.
ஸ்ரீ சக்கரம்
விஷ்ணுவின் கைகளில் சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தையே நாம் விஷ்ணு ஆலயங்களில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் காண்கிறோம். ஓர் சமயம் மலர்களைக் கொண்டு மகேஸ்வரனை பூஜித்துக் கொண்டிருந்தான் பரந்தாமன். 108 மலர்களில் ஓர் மலர் குறையவே தனது கண்களையே பூக்களுக்கு பதிலாக சமர்பிக்கிறார் அப்போது சிவனால் அளிக்கப்பட்டதே ஸ்ரீ சக்கரம். பாற்கடல் வண்ணன் ஸ்ரீனிவாசன் நினைத்த நிமிடத்தில் தயாராக நிற்கும் சக்கரம் பகைவர்களை அளித்தபின் அவன் விரல்களுக்கே வந்து சேரும் சக்தி வாய்ந்தது.
தந்தம்
வேதமே உருவானவரான முழு முதற் கடவுள் விநாயகரின் ஆயுதம் தந்தம். அசுரனான மூஷிகன் தன்னுடைய அழிவு எந்த ஆயுதத்தின் வழியிலும் வரக்கூடாது என்று பார்வதியிடம் வரம் பெற்றிருந்தான் அதனால் கணபதி தனது தந்ததினால் அவனை தாக்கினான். விநாயகனின் பக்தையான மூஷிகனின் மனைவி தனது கணவர் இறக்கலாகாது என்று மன்றாட அவனை மூஷிகமாக (எலி) மாற்றி தனது வாகனமாக வைத்துக் கொண்டார்.
வேல்
உமா மகேஸ்வரனின் இரண்டாவது புத்திரனும் தந்தைக்கே பாடம் சொல்லித் தந்து தகப்பன் சாமி என்று பெயர்பெற்ற முருகனின் கைகளில் இருப்பது "வேல்". தாய் பார்வதி தந்ததால் சக்தி வேல் என்றும் அழைக்கப்படுகிறது. பகைவர்களை அழிப்பது மட்டுமல்லாமல் அஞ்ஞானம், அறியாமை போன்றவற்றையும் போக்கும் இவ்வேலின் கூர்மையான நுனி மாயையைக் குறிக்கிறது.
பாசக்கயிறு
எமனின் கைகளில் வைத்திருப்பது "பாசக்கயிறு ". எவ்வித பாகுபாடும் இன்றி அவரவர் நேரம் வருகையில் அழைத்துச் செல்ல வரும் எமனின் ஆயுதம் இது. பாசக்கயிற்றின் பிடியிலிருந்து தப்பிய ஒரே மனிதன் "மார்கண்டேயன்". சிவ பக்தனான மார்கண்டேயனை எம தூதர்களால் அழைத்துச் செல்ல இயலாததால் எமனே நேரில் வந்தான். எமன் வருவதைப் பார்த்து தான் பூஜை செய்து கொண்டிருந்த சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டான் மார்கண்டேயன். எமனின் பாசக்கயிறு சிவ லிங்கத்தின் மேல் விழ அதிலிருந்து வெளிப்பட்ட முக்கண்ணன் மார்க்கண்டேயனை எமனின் பிடியிலிருந்து காத்து அவனுக்கு அழியா இளமையை வரமளித்தார்.
வஜ்ராயுதம்
தேவேந்திரன் இந்திரனின் கைகளில் இருக்கும் வஜ்ராயுதமானது மின்னலைப் போன்று வேகமானது. வேள்வியில் இருந்து தோன்றிய அசுரன் விருத்திராசுரன். தனது தவ வலிமையாலும் பலத்தாலும் தேவலோகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தான் விருத்திராசுரன். தேவலோகத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட இந்திரன் மும்மூர்த்திகளின் உதவியை நாடினான். உலோகத்தாலோ, மரத்தாலோ செய்யப்பட்ட ஆயுதத்தால் தனக்கு மரணம் நிகழக்கூடாது என விருத்திராசுரன் வரம் பெற்றிருந்தமையால் பிரம்மா இந்திரனை ததீசி என்ற முனிவரை சந்திக்கும் படி அறிவுரை கூறினார். அம்முனிவர் தனது விலா எலும்பையே இந்திரனுக்கு ஆயுதமாகக் கொடுத்தார். அவ்வஜ்ராயுதத்தைக் கொண்டு விருத்திராசுரனை அழித்து மீண்டும் தேவேந்திரன் ஆனான் இந்திரன், சூரபத்மனை அழிக்கவும் முருகன் இந்திரனின் வஜ்ராயுதத்தையே உபயோகித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சொன்னவர் : துளசி
Comments
Post a Comment