சித்திரைத் திருவிழா
கோவில் நகரமான மதுரையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாக்ஷி திருக்கல்யாணமும் அதைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். பலரின் மனதில் பசுமை மாறா நினைவுகளை விட்டுச் செல்லும் இவ்விழாவைக் கண்டு ரசிக்க தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மதுரையில் கூடுகிறார்கள். இவ்வைபவத்தின் பின்புலம் நாம் அறிந்ததே எனினும் பரவலாக பேசப்படாத சில நிகழ்வுகளை இங்கு காண்போம்.
மீனாட்சி திருக்கல்யாணம்
முன்னொரு காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான மலையத்வஜ பாண்டியன் புத்திர பேறு அற்று வருந்தினான். சிவ பக்தனான மன்னன் அரசி காஞ்சன மாலா உடன் இணைந்து குழந்தை வேண்டி யாகம் செய்தான். மன்னனோ நாடாள சந்ததி வேண்டுமே என்ற கவலையில் ஆண்மகனை வேண்ட அரசியோ தன்னையும் அறியாமல் மனதில் பெண் குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தாள். யாக முடிவில் அக்னியில் இருந்து ஓர் அழகான பெண் குழந்தை நடந்து வந்து அரசியின் மடியில் அமர்ந்தாள். சற்று ஏமாற்றமடைந்த மன்னனும் அரசியும் அக்குழந்தையின் மார்பில் மூன்று கண்கள் இருப்பதைக் கண்டு கலங்கி நிற்க அக்னியில் இருந்து தோன்றிய அசரீரி "கலங்க வேண்டாம்....உன் மனைவி பூர்வ ஜென்மத்தில் பெற்ற வரத்தால் கைலாயத்தில் குடி கொண்டிருக்கும் பார்வதியே உனக்கு மகளாக அவதரித்திருக்கிறாள். உரிய காலம் வரும் பொழுது அவளின் மூன்றாவது கண் மார்பிலிருந்து மறையும்" என்று அறிவித்து மறைந்தது.
மன்னன் தன் மகளுக்கு மீனாட்சி என்று பெயர் சூட்டி பாசத்துடன் வளர்க்கலானார். வீரமும் தீரமும் கொண்ட இளம் பெண்ணாக வளர்ந்த மீனாட்சியை பட்டது இளவரசியாக மன்னன் அறிவிக்க சபையிடமிருந்து அதிருப்தியும் ஒரு பெண்ணால் எவ்வாறு நாட்டை காக்க முடியும் போன்ற கேள்விகளும் எழுந்தன . அவர்களின் ஐயத்தை தீர்க்கும் பொருட்டு மீனாட்சி திக் விஜயம் புறப்பட்டாள். இவுலகில் உள்ள அனைத்து ராஜ்ஜியங்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்த இளவரசி கைலாயத்தை நோக்கி தன் படைகளைக் கொண்டு சென்றாள். வழியில் இருக்கும் அனைத்து சிவ கணங்களை வென்ற மீனாட்சி முக்கண்ணனிடம் போர் புரியும் பொருட்டு ஆவேசத்துடன் சென்றாள். மகேஸ்வரனைக் கண்ட அடுத்த கணம் அவன் மேல் காதல் கொண்ட மீனாட்சியிடம் " என்னில் சரி பாதியான சக்தியே நீ...உரிய நேரத்தில் மதுரையில் வந்து உன் கரம் பிடிப்பேன் " என்று உறுதி கூறி விடை கொடுத்தார். அக்கணத்தில் அவளது மார்பில் இருந்த மூன்றாவது கண்ணும் மறைந்தது.
கைலாயனின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. முப்பது முக்கோடி தேவர்களின் துணையோடு வந்த மகேஸ்வரன் பாற்கடல் வாசன் மைத்துனனாக நின்று கன்னிகாதானம் செய்ய மீனாட்சியை மாசி மாத பௌர்ணமி அன்று கைப்பிடித்தான். இருவரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தம்பதி சமேதராக மதுரையை ஆட்சி செய்தனர்.
திருமாலிருஞ்சோலை சுந்தரேச பெருமாள் கள்ளழகர் ஆனது ஏன் ?!
முற்காலத்தில் ரிஷி முனி ஒருவர் பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்து வந்தார். அப்போது அவ்வழியே வந்த கோபத்திற்கு பெயர் போன துருவாச முனிவர் எழுந்து நின்று தன்னிடம் உரிய மரியாதையை தெரிவிக்காமல் இருந்த முனிவரைக் கண்டு கடும் கோபத்திற்குள்ளார். தனது கமண்டலத்திலிருந்த நீரைக் கொண்டு அவரை தவளையாகப் போகும் படி சபித்தார். தன் நிலையை விளக்கிய முனிவர் தன் மேல் கருணை கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார். துருவாச முனியோ "யாரை நோக்கி கடும் தவம் புரிந்தாயோ...அவரே உனக்கு காட்சி அளித்து சாப விமோசனம் அளிப்பார் " என்று கூற தவளையாக மாறிய முனிவர் கிருதுமால் நதியில் வாழ்ந்து வந்தார்.
அக்கால கட்டத்தில் அடர்ந்த காடாக இருந்த திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோவில்) கள்ளர்கள் மறைந்து வசித்து வந்தனர். திருமாலின் மேல் அதீத பக்தி கொண்ட அவர்களால் சன்னதிக்கு சென்று அழகு ததும்பும் சுந்தரேச பெருமாளை தரிசிக்க இயலவில்லை. அவ்வருடத்தில் விளைந்த 'சுவை மிக்க மாங்கனிகளை அவருக்கு படைத்தது வழிபட முடியாமையை எண்ணி வருந்தினர். அவர்களின் அன்பினால் கவரப்பட்ட அச்சுதன் அவர்களில் ஒருவராக வேடமிட்டு அவர்களின் எல்லைக்கு குதிரையில் வந்தவர் அவர்கள் அளித்த மாங்கனிகளை உண்டார். அவரின் வருகையை உணர்ந்த தவளை வடிவில் இருந்த முனிவர் வைகை நதியில் காத்துக்கொண்டிருக்க, சித்திரை பௌர்ணமி நாளில் அங்கு சென்ற கள்ளழகர் அவரின் வேண்டுதலுக்கிணங்க தனது தசாவதாரங்களை அவருக்குக் காட்டிய பின் சாபவிமோசனம் வழங்கினார் அன்றிலிருந்து அம்முனிவர் மண்டூக மகரிஷி என்று அழைக்கப்படலானார்.
இருவேறு நிகழ்வுகளாக மதுரையில் நடை பெற்று கொண்டிருந்த இந்நிகழ்வுகள் மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இணைக்கும் பொருட்டு ஒரே நிகழ்வாக மாற்றி அமைத்தார். தங்கை மீனாட்சியின் திருமணத்திற்கு வரும் பெருமாள் கள்வர்களுக்கு தரிசனம் அளித்து விட்டு வருவதால் திருமணத்தை தவறவிடுகிறார் ஆதலால் கோபம் கொண்டு நகரின் உள்ளே நுழையாமல் சென்றுவிடுகிறார் என்று வழங்கப்படலானது. மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து "நாச்சியாருக்கு காட்சி அளித்தல்" போன்ற பல்வேறு நிகழ்வுகள் பலதரப்பட்ட மக்களுக்காக காலப்போக்கில் இணைக்கப்பட்டன.
அரிதாக அறியப்படும் தகவல்கள்
எதிர் சேவை - விளக்கம்
அழகர் கோவிலில் இருந்து வரும் சுந்தரேச பெருமானை எதிர் கொண்டு அழைக்கச் சென்ற
பாண்டிய மன்னன் பெருமாளின் பின் புறம் சாமரம் வீசுவதற்காக நின்று கொண்டான். "மன்னனாகிய நீ முன் சென்று ஊர்வலத்தை வழி நடத்தாமல் ஏன் இவ்வாறு நிற்கிறாய்?" என்று பெருமான் கேட்க "அழகு ததும்பும் உன் திருமுகத்தை காண வரும் மக்கள் திரள் கூன் விழுந்த என்னையா முதலில் காண்பது? " என்று கூற சுந்தரராஜ பெருமான் தன் முகத்திற்கு நேர் எதிரில் ஓர் கண்ணாடியை வைக்குமாறு பணித்தார். பாண்டியனும் தான் நின்ற இடத்தில இருந்த வண்ணம் பெருமாளிற்கு சேவை செய்தவாறு அவரின் அழகை கண்டு ரசித்தார்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் குதிரை வாகனமும் தங்கப் பல்லக்கும் மலையத்வஜ பாண்டியனால் முதன் முதலில் வழங்கப்பட்டு இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.
சூடிக்கொடுத்த கொடுத்த சுடர் கொடி
அழகர் கோவிலிருந்து வந்த பெருமாளை எதிர் கொண்டு அழைத்த பக்தர்கள் அவரை தல்லாகுளம் மண்டபத்தில் அமர வைக்கின்றனர். அங்குள்ள மைசூர் மண்டபத்தில் இரவைக் கழிக்கும் சுந்தரபெருமான் மறுதினம் பச்சைப் பட்டுடுத்தி வைகை நதியில் இறங்கும் முன் சூடிக்கொடுத்த சுடர் கொடி கோதை நாச்சியார் அளித்த மாலையை அணிந்த பின்னே ஆற்றில் இறங்குகிறார். வருடாவருடம் ஸ்ரீவில்லிபுத்தூர் சன்னதியில் இருந்து இந்நிகழ்விற்காக மாலைகள் கொண்டு வரப்படுகின்றன.
பின்புலம் எதுவாயினும் மதுரையில் நடக்கும் வரலாற்று சிறப்பு மிக்க சித்திரை திருவிழாவைக் காணக் கண் கோடி வேண்டுமே!!!
இச்சித்திரை நன்னாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கள்ளழகரின் அருள் நம்மேல் பொழியட்டும்!!!
Comments
Post a Comment