பிரதோஷ விரதம் ஏன் அனுஷ்டிக்கப்படுகிறது ?!


தேவர்களும் அசுரர்களும் இணைந்து, வாசுகி என்ற பாம்பைக் கொண்டு விஷ்ணுவின் தலைமையில்   பாற்கடலைக்  கடைந்தனர். அமிர்தத்தை அடையும் நோக்கில் தொடங்கப்பட்ட  இச்செயலில், பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட பல்வேறு பொருட்களை இரு தரப்பினரும்  தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். எதிர்பாரா விதமாக வாசுகியிடம் இருந்து வெளிவந்த ஆலகால விஷம், பாற்கடலின் பல்வேறு அசுத்தங்களோடு இணைந்து பெருந்தீயாக உருமாறி தாண்டவமாடியது. விஷ்ணுவும் பிரம்மாவும் தீயை அணைக்க முயன்று தோற்ற பின் ருத்ரதாரியான  சிவபெருமானின் உதவியை நாடினர். பெருந்தீயோடு ஆலகால விஷத்தையும் ஒரே மடக்கில் விழுங்கிய சிவபெருமானைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் கைகூப்பித் தொழுதனர். பார்வதியோ விஷம் சிவபெருமானின்  வயிற்றை அடையாதவாறு  தொண்டையை அழுந்தப் பிடித்து நிறுத்தினார். அதனால் அண்ட சராசரத்தில் வாழும் அனைத்து உயிர்களும் காக்கப்பட்டன.

விஷத்தின் வீரியத்தால் சிவபெருமான் தன் நினைவை இழந்து மயக்க நிலையை அடைந்தார். அச்சமயம் சிவபெருமானை நோக்கி வைக்கப்பட்ட பிரார்த்தனைகளையும் வேண்டுகோள்களையும் சிவனின் வாகனமான நந்தி தன் காதுகளில்  சிரத்தையோடு வாங்கிக்கொண்டது. சரியாக ஓன்றரை மணி நேரத்திற்கு பின் தன்னிலை அறிந்த சிவபெருமானிடம், நந்தி அவரை நோக்கித் தொடுக்கப்பட்ட கோரிக்கைகளை பட்டியலிட்டது. அண்டத்தை ஆளும் எனக்கே ஆலகால விஷத்தால் தன்னிலை இழக்கும் நிலை ஏற்படுமானால்...சம்சாரக்கடலில் காம,பேத குரோத  விஷத்தால் அலைக்கழிக்கப்படும் ... அல்லாடும் சாமானியனின் நிலை மிகக் கொடுமையானது எனவே  இன்று முதல், நான் தன்னிலை மறக்கும் இந்த ஒன்றரை மணி (4-5.30 P.M )நேரமும் என்னை மனமார நினைத்து பக்தி சிரத்தையுடன் வைக்கப்படும் ஒவ்வொரு வேண்டுதல்களும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். மகிழ்ச்சியில் நந்தியின் தலையில் இரு கொம்புகளுக்கு நடுவே ஆனந்தத்  தாண்டவமாடினர். சிவ பெருமானிற்குப் பதிலாக மக்களின் கோரிக்கைகளுக்கு தான் செவி மடுப்பதால் தானே சிவன் என்ற அகந்தை  நந்தியின் மனதில் குடியேறக்கூடாது என்பதற்காகவே நந்தியின் தலையில் தாண்டவமாடினார் என்றும் நம்பப்படுகிறது .

அனுதினமும் மாலை நான்கு மணி முதல்  ஐந்தரை மணிவரையான நேரத்தை  பிரதோஷ நேரமாக கணக்கிட்டாலும் , பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தூவாதேசிக்கு அடுத்து  வரும் தினமே பிரதோஷமாக அனுஷ்டிக்கப் படுகிறது. சிவனிடத்தில் சேர்க்க விரும்பும் கோரிக்கைகளை நாமும் நந்தியின் காதுகளில் சொல்லிவிடுவது வாடிக்கையானது.

பின்குறிப்பு : இரணியனை கொல்வதற்காகவும் பக்தப் பிரஹலாதனுக்கு காட்சி அளிப்பதற்காகவும் பகவான் விஷ்ணு நரசிம்ம அவதாரம் தரித்து தூணிலிருந்து வெளிப்பட்ட நேரமும் இதே மாலை வேளை (4-5.30) என்பதால் பெருமாள் கோவில்களிலும் பிரதோஷ விரதம் பின்பற்றப்படுகிறது.

சொன்னவர் : துளசி

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..