கஜேந்திர மோக்ஷம் - மார்ச் 9, 2020

விஷ்ணுவின் பால் அதி பக்தி கொண்ட  கஜேந்திரா என்னும் யானை இமயமலைச் சாரலில் வாழ்ந்து வந்தது. அனுதினமும் அருகிலுள்ள குளத்திலிருந்து  அங்குள்ள விஷ்ணு கோவிலுக்கு தாமரை மலர்களை பூஜைக்காக  எடுத்துச்  செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அன்றும் மலர்களை பறிப்பதற்காக, இருள் செறிந்த அதிகாலையில் குளக்கரைக்கு  சென்றது. மலர்களை பறித்துக் கொண்டிருக்கையில் அதனுடைய கால்களை ஓர் முதலை கவ்வ வலி பொறுக்காமல் கதறியது கஜேந்திரா. முதலையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள பலவாறு முயன்றது. உதவிக்கு பிறரை அழைக்கும் பொருட்டு சத்தமாக பிளிறியது. பல மணி நேர முயற்சி பலனளிக்கவில்லை இறுதியில் தனது தும்பிக்கையில் இருக்கும் தாமரைப் பூவை வானை நோக்கி ஏந்தியவாறு முழு நம்பிக்கையுடன் "ஆதி மூலா", "நாராயணா ", "கோவிந்தா "என்று அழைக்கத் துவங்கியது. இனி எனக்கு நீ அன்றி வேறு எவரும் இல்லை, உன்னையே சரணடைகிறேன். இச்சூழலில் இருந்து என்னை காப்பாயாக என்று பிரார்த்தனை செய்தது. தனது பக்தனாகிய கஜேந்திராவை முதலையின் பிடியிலிருந்து காக்கும் பொருட்டு காட்சி அளித்த பரந்தாமன், சுதர்சன சக்கரத்தை முதலையின் மீது செலுத்த, கஜேந்திரன் விடுதலை அடைந்தது. உயிர் துறந்த முதலைக்கும், நாராயணனின் பாதத்தில் சரணடைந்த கஜேந்திரனுக்கும் மோக்ஷம் கிட்டியது.

முதலையும், யானையும் தங்களின் முற் பிறவியில் அரசர்களாக இருந்து முனிவர்களின் சாபத்தால் விலங்குகளாக பிறந்தவர்கள். விஷ்ணுவின் கையாலேயே அவர்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்பதால் பல ஆண்டுகளாக பரந்தாமனை பிரார்த்தித்து காத்துக்கொண்டிருக்க இறுதியில் மோக்ஷம் கிட்டியது.

ஒவ்வொரு வருடமும் மாசி மாத பௌர்ணமி நாளன்று கஜேந்திர மோக்ஷம் விழாவாக விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உற்சவர் கஜேந்திரனுக்கு மோக்ஷம் வழங்குவது அரங்கேறுகிறது.

மதுரை சீனிவாச பெருமாள் கோவில் அருகில் உள்ள (சௌராஷ்ட்ர சமுகத்தை சேர்ந்த  பஜ்ஜி கொண்டா) படித்துறையில் பெருமாள் எழுந்தருளி கஜேந்திரனுக்கு முக்தி அளிக்கிறார்.

மதுரை திருமோகூரின் காளமேகப் பெருமாள், யானைமலை நரசிங்கப் பெருமாள் சன்னதியில் முன் மண்டபத்தில் எழுந்தருளி கஜேந்திர மோக்ஷத்தை அரங்கேற்றுகிறார்.

காம, பேத, குரோதங்களின் பிடியில் சிக்கி வெளிவர இயலாமல் அல்லாடும் நாமும் இந்நாளில் பாற்கடல் வாசனை  முழுமனதுடன் சரணடைந்து முக்தி அடைய பிரார்த்திப்போமாக!!!

சுதர்சன சக்கரத்தின் பெருமை :
பகவான் விஷ்ணுவிற்கு கைலாயநாதன் சிவபெருமானால் அருளப்பட்டது சுதர்சன சக்கரம். நாராயணன் மனதில் நினைத்த அடுத்த கணமே தன்னை தயார் நிலையில் நிறுத்திக் கொள்ளும் ஸ்ரீசக்கரம் தனக்கிடப்பட்ட பணியினை முடித்த அடுத்த கணமே அவனின் கரங்களுக்கு திரும்பிவிடும் ஆற்றல் கொண்டது. சிவ பெருமானை  108 மலர்களைக் கொண்டு பூஜித்து கொண்டிருந்த விஷ்ணுவிற்கு ஓர் மலர் குறையவே  மலரினைப் போல் அழகான தனது விழியையே மலருக்கு பதிலாக வைத்து பூஜிக்க, அவரின் பக்தியில் மகிழ்ந்த சிவ பெருமானால் வழங்கப்பட்டதே சுதர்சன சக்கரம். விஷ்ணு சன்னதியில் சக்கரத்தாழ்வாராக அமர்ந்திருப்பதே இந்த சுதர்சன சக்கரம்.

சொன்னவர் : துளசி

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..