ஆத்ம லிங்கம்

சப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்தியரின் புதல்வர் விஸ்ரவமுனிக்கும் அசுர வழித்தோன்றலான கைகேசிக்கும்  பிறந்த முதல் மைந்தன் இராவணன். அவனைத் தொடர்ந்து கும்பகர்ணன், சூர்ப்பனகை என உடன்பிறந்தார் அனைவரிடமும் அசுர குணங்களே ஓங்கியிருக்க , தந்தையை ஒத்த தமையன் வேண்டும் என்ற அன்னையின் ஆசைக்கிணங்க பிறந்ததவன் விபீஷணன்.

இலங்கையை ஆண்ட இராவணன் தீவிர சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்த கூற்று. அனுதினமும் காலையும் மாலையும் கடற்கரை மணலில் சிவலிங்கம் வடித்து சந்தியாவந்தனம் செய்வது அவன் வழக்கம். அவன் செய்யும் சிவலிங்கம்  சமுத்திர ராஜனால் கடல் அலைகளைக் கொண்டு   கலைக்கப்படுவதைக் கண்ட அவனின் தாயார் கைகேசி "நீ கைலாயநாதனை நோக்கி தவம் இருந்து சக்தி வாய்ந்த  ஆத்ம லிங்கத்தை கொண்டு வந்தாயானால் அதை இலங்கையில் பிரதிஷ்டை செய்து வளம் பெறலாம்  " என்று கூற இராவணனும் அண்ணாமலையானை நோக்கிக்  கடும் தவம் செய்யலானான். அவனின் தவம் கனிந்து பார்வதி துணையோடு தம்பதி சமேதராக காட்சி அளித்தார் சிவபெருமான். கண்களைத் திறந்து அவர்களை நோக்கிய மறுகணம் தான் எதற்காக தவம் புரிந்தோம் என்பதையே மறந்தவனான் இராவணன்.

அவனுள் புகுந்து அவன் சித்தத்தை சிதறடித்த மாயா தேவி அவன் கவனத்தை உமா தேவியின் மேல் திருப்பினாள். பார்வதியின் அழகில் மயங்கிய இராவணன் தன் தவத்தின் பலனாக பார்வதியை தனக்கு அளிக்குமாறு கோரினான். பற்றற்ற பரம்பொருளும் அதற்கு இசைந்தார். சக்தியுடன் தன் அரண்மனையை  நோக்கிச் சென்று கொண்டிருந்த ராவணனை இடைமறித்த தேவ ரிஷி நாரதர் நடந்த விவரங்களை அறிந்து கொண்டார். அவர் இராவணனிடம் " மகேஸ்வரன் உன்னை நன்றாக ஏமாற்றி விட்டார்...உன்னோடு வருவது அழகு ததும்பும் பார்வதியா?! அனல் பறக்கும் காளியா?! நீயே பார் " என்று கூற ராவணனும் திரும்பி நோக்கினான். அவன் கண்களுக்கு தெரிந்தவள் காளி. நியாயம் கோர கைலாயத்தை நோக்கி விரைந்தான் பார்வதியுடன்.

பனிமலைகளின் முகடுகளில் நந்திகள் சூழ  அமர்ந்திருந்த சிவ பெருமானிடம் நடந்ததைக் கூற " ராவணா உன்னுடன் நிற்பது உமா தேவியே...நன்கு நோக்கு " என்றார். ஆனால் இராவணனின் கண்களுக்கு அன்னை  காளியாகவே தோற்றமளிக்க செய்வதறியாது குழப்பி நின்றவனிடம் நாரதர் " அன்னை பார்வதி இங்கு இல்லை...மகேஸ்வரன் அவரை பாதாள லோகத்தில் மறைத்து வைத்திருக்கிறார்" என்று கூற பாதாள உலகம் நோக்கி விரைந்தான் இராவணன்.

தேவ சிற்பியருள் ஒருவரான  மயனின் மாளிகையை அடைந்த அவன் அங்கு தேவ கன்னிகை ஹேமாவில் மயனுக்கு பிறந்த , அழகே உருவான மண்டோதரியைக் கண்டான் ஆனால் அவன் கண்களுக்கு அவள் பார்வதியாகவே காட்சி அளிக்க அவளை மயனின் ஒப்புதலோடு மணம் புரிந்து கொண்டு இலங்கையை அடைந்தான். தான் கைலாயநாதனின் மனைவியையே கைபிடித்தவன் என்று மார்தட்டிய  மகனை வியந்த கைகேசியிடம் மண்டோதரி தான் யார் என்பதை விளக்கினாள். அவனின் செய்கைகளுக்கு விளக்கம் கேட்ட அன்னையின் முன் கலங்கி நின்ற இராவணன் இம்முறை ஆத்ம லிங்கம் இன்றி தான் திரும்புவதில்லை என்று உறுதி கூறி சிவ பெருமானை நோக்கி தவம் புரிய கிளம்பிச்சென்றான்.

இராவணனின் கடும் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவன் விரும்பிய ஆத்ம லிங்கத்தை அவனுக்கு அருளி...அதை அவன் எங்கு நிலத்தில் வைக்கிறானோ  அங்ஙனமே அவ்விடத்திலேயே லிங்கம் பிரதிஷ்டை ஆகிவிடும் என்றும்  எச்சரித்தார்  ஆதலால் அதை  புஷ்பக விமானத்தில் கொண்டு செல்ல இயலாது கைகளில் சுமந்தபடி செல்ல நேர்ந்தது . சக்தி வாய்ந்த ஆத்ம லிங்கம் அசுர உலகிற்குள் கொண்டு செல்லப்படுவதை விரும்பாத நாரதர் வேத முதல்வனாகிய விநாயகரின்  உதவியை நாடினார்.

அந்தி சாயும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தான் சந்தியாவந்தனம் செய்ய வேண்டுமே என்ற எண்ணத்துடன் அங்கும் இங்கும் பார்த்த இராவணன்  அங்கு நின்று கொண்டிருந்த மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனிடம் ஆத்ம லிங்கத்தை பாதுகாக்குமாறு கூறினான். "இதை என்னால தூக்கவே முடியலை..இதை எப்பிடி கீழ வைக்காம இருக்கிறது?! மூணு தடவை கூப்பிடுவேன்...வரலேன்னா கீழ வைச்சிருவேன் " என்று கூறிய சிறுவனிடம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்தவாறு தாங்கிக் கொள்ளுமாறு சந்தியாவந்தனம் செய்யும் பொருட்டு நீர் நிலையை நோக்கி நடந்தான். லிங்கத்தின் எடையை  தாள முடியாமல் தத்தளித்த சிறுவன் முதல் முறை இராவணன் நீரில் கைவைக்கும் முன்னே அவன் பெயரை மூன்று முறை கூப்பிட்டவாறே லிங்கத்தை கீழே வைத்து விட்டான். பதறிய படி விரைந்து வந்த இராவணன் சிறுவன் உருவில் இருந்தவர்  முழு முதற் கடவுள்  விநாயகரே என்ற உண்மையை அறிந்து தாழ் பணிந்தான். 

இவ்வாறு சிவ பெருமானிடம் இருந்து இராவணனால் பெறப்பட்டு, கணபதியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆத்ம லிங்கம் இருக்கும் இடம் தற்போதைய குஜராத் மாநிலம்  ஆகும். இந்தியாவின் பல்வேறு இடங்களில் பனிரெண்டு ஜோதி லிங்கத்திற்கு ஆலயங்கள்  இருப்பது அனைவரும் அறிந்ததே!!!

மஹா சிவராத்திரி தினமான இன்று பற்றற்ற பரம்பொருளான சிவபெருமானின் காலடியைத்  தொழுது அவனைச் சரணடைந்து  அவனருள் பெறுவோமாக!!!


சொன்னவர் - துளசி 


Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..