லக்ஷ்மணனின் பெருமை
இலங்கை வேந்தன் இராவணனின் முதல் புதல்வன் மேகநாதன். அனைத்து அசுரர்களைப் போலவே தேவர்களை எதிர்த்து போர் புரிந்தான். இவனிடம் தாக்குப் பிடிக்க முடியாத தேவேந்திரன் இந்திரன் , ஆதிசேஷனின் உதவியுடன் பாதாள லோகத்தில் ஒளிந்து கொண்டான். அங்கு ஆதிசேஷனின் மகள் சுலோச்சனையின் அழகில் மயங்கி தனது விருப்பத்திற்கு இணங்குமாறு அவளை வற்புறுத்தினான். இந்திரனின் மறைவிடத்தை கண்டறிந்த மேகநாதனோ அவனைத் தனது தேரில் கட்டி இழுத்துக் கொண்டு இலங்கை நோக்கி விரைந்தான்.
இராவணனும் மேகநாதனும் இந்திரனை கொல்ல முடிவெடுத்தனர். விரைந்து வந்து அவர்களைத் தடுத்த பிரம்ம தேவன் அவ்வாறு செய்வது அறிவீனம் என்றும் அதற்கு பதிலாக அவனுக்கு வேண்டிய வரத்தை தான் வழங்குவதாகவும் கூறினார். மரணமின்மை வேண்டிய மேகநாதனிடம் அது இயற்ககைக்கு விரோதமானது என்று பிரம்மா கூற மேகநாதனோ " சாதாரண மனிதன் எவனொருவன் பதினான்கு ஆண்டுகள் ஊன், உறக்கம் இன்றி வாழ்கிறானோ, எவனொருவன் திருமணம் புரிந்தும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்கிறானோ அவன் மூலமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்" என்ற வரத்தைப் பெற்றான். அவ்வரத்தை வழங்கிய பிரம்ம தேவன் இந்திரனை வென்றமையால் மேகநாதனுக்கு "இந்திரஜித்" என்ற பெயரையும் சூட்டினான்.
மேகநாதனின் வீரத்தை கண்டு பிரமித்த சுலோச்சனை அவனிடம் காதல் கொண்டாள். தனது தந்தை ஆதி சேஷனின் எதிர்ப்பையும் மீறி அவனை மணந்தாள். மேகநாதன் மேல் கடும் கோபம் கொண்ட ஆதிசேஷன் அவனுடைய மரணம் தனது கையாலே நேரும் என்று
சூளுரைத்தான்.
காலங்கள் கடந்தன. தனது மனைவியை அபகரித்துச் சென்ற ராவணனை எதிர்த்து வானரப்படைகளுடன் இலங்காபுரி சென்றான் ராகவ ராமன். கடும் யுத்தம் நிகழ்ந்தது. பதிவிரதை சுலோச்சனையின் பிரார்த்தனையும், யுத்த தந்திரங்களும் கைகொடுக்க வெல்லவே இயலாதவானக இருந்த மேகநாதனை இறுதியில் பிரம்மாஸ்திரம் எய்து கொன்றான் லக்ஷ்மண்.
அன்றிரவு யுத்தத்திற்குப் பின் தங்கள் பாசறைக்குத் திரும்பிய லஷ்மணன் ராமனிடம்
" மேகநாதனை கொன்ற பொழுது கடும் துயர் என்னைச் சூழ்ந்து கொண்டது. எதிரியான அவனின் மரணத்திற்கு என் மனம் இவ்வாறு வெதும்பக் காரணம் என்ன?!" என்று கேட்டான்.
அதற்கு ராமன் " ஆதிசேஷனின் அவதாரமே நீ...உன் மருமகனாக அவன் இருந்தபடியாலேயே உன் கண்கள் கலங்குகிறது" என்பதை உணர்த்தினார்.
இவ்வாறாக வெல்லற்கறிய இந்திரஜித்தின் வாழ்வு முற்றுப்பெற்றதோடல்லாமல் இராவணனின் தோல்விக்கும் அழிவிற்கும் வித்தானது அவனது மரணம்.
தனது மூத்த சகோதரனான இராமனுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த லக்ஷ்மணன் வனவாசம் செய்த 14 வருடங்கள் தனது ஊன், உறக்கத்தைத் தியாகம் செய்தான். ராமனுக்கும் சீதா தேவிக்கும் பணிவிடை செய்வதையே தனது தலையாய பணியாகக் கருதினான். ஆதலால் தன் அடுத்த அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில் பகவான் பரந்தாமன் ஆதிசேஷனை, பலராமனாக அவதரிக்கச் செய்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தார்.
ஓர் சராசரி மனிதனால் எவ்வாறு 14 ஆண்டுகள் உணவின்றி வாழ இயலும்?! இதோ விடை.
பிரம்மரிஷி விஷவாமித்ரர் முறையிட்டதற்கிணங்க அயோத்தி மன்னன் தசரதன் தனது புதல்வர்களான ராமனையும் லக்ஷ்மணனையும் அரக்கி தாடகையை வதம் செய்ய அனுப்பி வைத்தான். முனிவர்களின் தவக்குடில் அமர்ந்திருந்த வனத்தில் இருந்து தாடகியை ராமன் தாக்க, அவர்களை தடுமாறச் செய்யும் பொருட்டு தாடகை அடர்ந்த வனத்தில் சென்று மறைந்தாள். அவளைத் தொடர்ந்து செல்ல எத்தனித்த சகோதரர்களிடம் விஷுவாமித்ரர் " பலம், அதிபலம் " என்ற மந்திரத்தை கற்றுக்கொடுத்தார். கடும் வனாந்திரத்தில் செல்லும் அவர்கள் எப்போது திரும்புவார்கள் என்று உறுதியாக கூறமுடியாததால் அவர்கள் உணவில்லாமல் உயிர் வாழ்வதற்காக இம்மந்திரத்தை போதித்தார். இம்மந்திரத்தை கூறினால் காற்றில் உள்ள சக்தியை உணவாக உட்கிரகிக்க முடியும்....தாவரங்களைப் போல்.
இதே மந்திரத்தின் உதவியாலேயே லக்ஷ்மணன் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின் போது உணவின்றி இருந்தான். மேகநாதனையும் வெல்ல முடிந்தது.
மூலம் : தர்மச்சக்கரம், செப்டம்பர் பதிவு.
சொன்னவர் : துளசி
Comments
Post a Comment