நவராத்திரி
வருடந்தோறும் புரட்டாசி அமாவாசையை அடுத்த ஒன்பது தினங்களில் இப்புடவிற்கே அன்னையரான முப்பெரும் தேவியரை வணங்கி வழிபடும் , கொண்டாடப்படும் விழவையே நவராத்திரி என்றழைக்கிறோம். அன்னை துர்கா தேவி மகிஷாசுரனை ஒன்பது நாட்கள் போரிட்டு வதம் செய்த தினம் என்றும் நிம்பன் குசும்பன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்த நாள் என்றும் ரகுகுல ராமன் சக்தியை இந்நாட்களில் வழிபட்டு அவள் அளித்த சக்தியால் இராவணனை வதம் செய்தான் ஆதலால் விஜயதசமி என்றும் பல்வேறு காரணங்களாலும் பெயர்களாலும் நவராத்திரி அறியப்பட்டாலும் "அதர்மத்தை தர்மம் வென்று நீதியை நிலைநாட்டும் நாள் நவராத்திரி " என்பதே மூலக்கருத்து.
நவராத்திரி கொண்டாடப்படுவதன் நோக்கம் பலரும் அறிந்ததே எனினும் பரவலாக அறியப்படாத காரணம் ஒன்று உண்டு. அவையாவது :
புரட்டாசி மாதம் பித்ருக்களின் மாதம் என்றழைக்கப்படுகிறது ஆகவே இம்மாத அமாவாசை மஹாளய அமாவாசையாக அனுசரிக்கப்பட்டு பித்ரு தமர்பனம் செய்யப்படுகிறது . இக்காலகட்டத்தில் ஆன்மாக்கள் தங்கள் வாழ்ந்த மண்ணுலகை நோக்கி வருவார்கள் என்றும் நம்பப்படுகிறது. அவ்வாறு வரும் துர் ஆத்மாக்கள் உள பலவீனமான மானுடர்களை தாக்கும் ஆற்றல் உள்ளவையாக இருப்பதால் நவராத்திரி தொடக்கத்தில் கலசத்தில் நீர் வைத்து ஒன்பது நாட்களுக்கு பூஜிக்கப்படுகிறது. பல்வேறு சுலோகங்களும் மந்திரங்களும் உச்சாடனம் செய்யப்படுகிறது. இத்தகைய தீய சக்திகளின் இருந்து தங்கள் தேக ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளவும் தீமையிலிருந்து நன்மையை பிரித்தறியும் புலனறிவைப் பெறவும் நல்வாழ்க்கையை நடத்த உதவும் தொழில் செழிக்கவும் சக்தி , சரஸ்வதி , லக்ஷ்மியை இவ்வொன்பது தினங்களில் வழிபடுகிறோம்.
நவராத்திரி முடிவில் கலசத்து நீரினால் வீடுகளும் சுற்றுப்புறங்களும் சுத்தீகரிக்கப்படுகிறது . முற்காலத்தில் கிணறு , ஆறு குளம் போன்ற நீர் நிலைகளிலும் இந்நீர் கலக்கப்பட்டு துர் ஆத்மாக்களிடம் இருந்து கிராமங்கள் பாதுகாக்கப்பட்டன.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் மழை பரவலாகப் பெய்வதால் தோற்று நோய்கள் அதிகம் பரவுகின்றன அதிலிருந்து காத்துக்கொள்ள (மழையினால் பயிர்கள் பாதிப்பு அடைந்து காய்கறிகள் மற்றும் பழங்களின் வரத்து குறைவதால்) பலவகையான தானியங்களையும் பயறுகளையும் நவராத்திரி தினங்களில் நெய்வேத்தியமாக படையல் செய்கிறோம்.
நவராத்திரி தினத்தில் மட்டும் அல்லாது என்றென்றும் தர்மமும் நீதியும் தழைத்தோங்க... அனைத்து ஞானங்களைப் பெற்று வாழ்கை செழிக்க முப்பெரும் தேவியரை வழிபடுவோம்.
சொன்னவர் : துளசி
சொன்னவர் : துளசி
Comments
Post a Comment