பிட்டுக்கு மண் சுமந்த படலம் 19-08-2021
முன்னொரு காலத்தில் மதுரையை பாண்டியன் ஆண்ட சமயத்தில் எதிர்பாரா விதமாக வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நிலைமையை சீர்செய்யவும் கரை புரண்ட வெள்ளம் நகருக்குள் புகாமல் இருக்கவும், கரையை பலப்படுத்தும் பணிகள் துவங்க இருப்பதாக அரசாங்க ஆணை வெளியானது. பறை அறிவித்தபடி வந்த காவலன் " அனைவர் வீட்டிலிருந்து குறைந்தபட்சம் ஒருவராவது கரை அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்...இல்லையேல் கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்...இதற்கு யாரும் விதிவிலக்கல்ல " என்று வீதி வீதியாகச் சொல்லிக் கொண்டே சென்றான்.
அந்நகரில் பிட்டு விற்று பிழைப்பு நடத்தும் வந்தி என்ற கிழவி சாமிக்கு பிட்டை நெய்வேத்தியமாக வைத்தவாறு "சொக்கநாதா...இது என்ன சோதனை...என் வீட்டில் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை...என்னால் இக்காரியங்களை செய்ய இயலாதே...என்ன செய்வது, நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று அழுது புலம்பினாள். அடுத்த நொடி வாசலில் யாரோ அவளை அழைக்கும் குரல் கேட்டது. வாட்ட சாட்டமான இளைஞன் ஒருவன் "பாட்டி...நான் வெளிஊர்ல இருந்து வர்றேன்..இன்னைக்கு ராத்திரி மட்டும் உன் திண்ணையில படுத்துக்குறேன்" என்று கூறினான்.
மறுநாள் புலரியில் கண் விழித்த இளைஞனுக்கு தான் சமைத்த பிட்டைக் கொடுத்த கிழவியிடம் " ஏன் பாட்டி, ராஜா கரை கட்ட வீட்டுக்கு ஒருத்தர் வரணும்னு ஆணையிட்டிருக்காராமே?!"....உன் வீட்ல யாருமில்ல போல?! நான் போறேன்" என்று கூறினான். "அப்பிடியா...ஆனா உனக்கு குடுக்க எங்கிட்ட பணம் காசு இல்லையேப்பா" என்று கூறிய வந்தியிடம் " அதெல்லாம் வேணாம்....பிட்டு மட்டும் குடுத்தா போதும்....அதுவும் உடைந்த குழாப்புட்டு மட்டும் போதும் " என்று கூற கிழவியும் ஒத்துக்கொண்டாள்.
ஆற்றங்கரைக்குச் சென்ற இளைஞன் மரநிழலில் படுத்து உறங்கினான். பின் இரவில் வந்திக் கிழவியிடம் பிட்டு கேட்க " இன்னைக்கு எல்லாமே உடைஞ்சு தான் வந்துச்சு...ஏன்னு தெரியல"?! என்று ஓர் கூடை நிறைய பிட்டைக் கொடுத்தாள். அதை சிரித்துக் கொண்டே உண்டு, உறங்கினான். மறு நாளும் ஒரு வேலையும் செய்யாமல் இருந்த அவனைக் காவலர்கள் எச்சரிக்கை செய்தனர். "வந்திக்கிழவிக்கு பதிலா வந்தவனா ?! என்ன திமிரு இருந்தா இப்பிடி செய்வான்...இதோ தளபதியிடம் கூறுகிறேன்" என்று ஓடி தளபதியை அழைத்து வந்தான் காவலன். கடும் கோபத்தில் கொந்தளித்த தளபதி தனது சாட்டையால் படுத்திருந்தவனின் முதுகில் பளீர் என்று இழுக்க....மறு நொடி தளபதியின் முதுகிலே பலத்த அடி விழுந்தது ...அலறி அடித்துக் கொண்டு ஓடிய தளபதியை அனைவரும் குழப்பத்துடன் நோக்கினர்.
சிறிது நேரத்தில் இச்செய்தி ஊரெல்லாம் பரவ, அரசன் ஆற்றங்கரைக்கு விரைந்தான். வந்திக்கிழவியும் செய்வதறியாது தவித்தாள். பயந்து நடுங்கியபடி கூட்டத்தில் ஒளிந்து நின்றாள். மர நிழலில் படுத்திருந்த இளைஞனை அரசன் நெருங்குவதற்குள் அவன் மாயமாய் மறைந்தான். அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து நிற்கையில் வானத்தில் ஓர் அசரீரி ஒலித்தது. "பாண்டியா...என் பக்தையாகிய வந்தியை இக்கட்டிலிருந்து
மீட்கவும், சிவ பக்தனாகிய மாணிக்கவாசகரை தண்டனையிலிருந்து
காக்கவுமே வெள்ளத்தை வரவழைத்து இத்திருவிளையாடலை நிகழ்த்தினோம். நரியை பரியாக மாற்றி அனுப்பியதும் நானே!!!" என்று முழங்கிய குரலைக் கேட்டு மன்னன் கை கூப்பி கண்ணீர் வடித்தான். அன்றிலிருந்து சிவ பக்தனாக மாறிய பாண்டிய மன்னன் சைவ மார்கத்தை பரப்பும் பொருட்டு பல்வேறு ஆன்மீகப் பணிகளை ஆற்றினான் என்றும் மாணிக்கவாசகர் ஆரம்பித்த கோயில் கட்டுமானத்தை சிறப்பாக முடித்து வைத்தான் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
மதுரையில் நடந்ததாகக் கூறப்படுகின்ற 64 திருவிளையாடல்களில் பிட்டுக்கு மண் சுமந்த படலமும் ஒன்று. மதுரை தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் வந்தி இளைஞனுக்கு பிட்டு கொடுப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் காணலாம்.
பின் குறிப்பு : ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் சொக்கநாதர் அம்மை மற்றும் மாணிக்கவாசகரோடு தன் பக்தர்களுக்கு மதுரை சிம்மக்கல் பகுதியில் அருள் பாலிக்கிறார். மதுரை ஆவணி மூல வீதியில் வருடம் தோறும் இத்திருவிளையாடல்கள் நாடகங்களாக அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.
மூலம் - திருவிளையாடல் புராணம்
சொன்னவர் - துளசி.
மூலம் - திருவிளையாடல் புராணம்
சொன்னவர் - துளசி.
Comments
Post a Comment