குருவாயூரப்பா...குருவாயூரப்பா !!!

பரந்தாமர் விஷ்ணு பூலோகத்தில் கிருஷ்ணராக அவதரித்தார் . கோகுலத்தில் வளர்ந்து வந்த  அவரை தரிசிக்கவும் பூஜிக்கவும் அனுதினம் தேவர்கள் தேவலோகத்தில் இருந்து வருவது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு ஓர் நாள் குருவும் வாயுவும் வருகை தந்திருந்தனர். செல்லக் கண்ணனின் குறும்புக கண்களையும் தேனொழுகும் புன்னகையையும் கண்ட அவர்கள் தங்கள் முன் குழந்தை வடிவில் இருப்பவர் பரம் பொருள் என்பதையும்  மறந்து அக்குழந்தையை கையில் அள்ளிக்  கொஞ்சினர். பல்வேறு விளையாட்டுகள் செய்து அவனழகில் தங்களையே மறந்தனர் . குருவோ கிருஷ்ணனை தோளில் தூக்கிக் கொள்ள வாயுவோ தன் பலத்தால் அவர்களை பறக்கச் செய்து கண்ணாமூச்சி காட்டினான் . இருவரும் இணைந்து கிருஷ்ணருக்கு அமுது ஊட்டினர் . அவ்வாறு பகவான் வாயுவோடும் குருவோடும்  க்ஷண நேரத்தில் பறந்து சென்று அமர்ந்த இடம் தான் குருவாயூர்.

பல ஆண்டுகளுக்கு முன் குருவாயூரில் பூசகராக இருந்த பிராமணர் ஒருவர் வெண் குஷ்ட நோயால் அவதியுற்று வந்தார். பல்வேறு சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல் அக்கிராமத்தில் வாழ்ந்த மருத்துவரிடம் அழைத்து வந்தனர். அவரை சோதித்த மருத்துவரோ மிகுந்த தயக்கத்திற்கு பின் " உங்கள் நோயை மிக எளிதில் என்னால் குணமடையச் செய்ய இயலும் ...ஆனால் " என்று நிறுத்தினார். அர்ச்சகரோ " கூறுங்கள் வைத்தியரே ...நான் என்ன செய்ய வேண்டும் " என்று வினவினார் . மருத்துவர் தொடர்ந்தார் " வெண் குஷ்டத்திற்கு ஒரே ஒரு மருந்து தான் உள்ளது அதில்  மலைப் பாம்பின் கொழுப்பு கலந்திருக்கிறது அதை உட்கொண்டால் ஒழிய இதிலிருந்து குணமடைய இயலாது " என்று கூறக்கேட்டு பூசகர் கோபம் கொண்டார் . "உண்மை பிராமணனான என்னால் அதை உட்கொள்ள முடியாது. நான் தினம் தினம் பூஜிக்கும் என்  பரம் பொருள் என்னை இதிலிருந்து குணமடையச் செய்வார்" என்று கூறிவிட்டு யார் சொல்லையும் கேளாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

நாட்கள் நகர்ந்தது . ஓர் நாள் மருத்துவர் எதிர்பாரா விதமாக பூசகரை சந்திக்க நேர்ந்தது . வெண்குஷ்டத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்திருக்கும் அர்ச்சகரைக் கண்ட வைத்தியரோ ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார். பூசகர்  "நான் எதுவும் செய்யாமலேயே ... நான் வணங்கும் எம்பெருமான் என்னைத்  தீரா நோயிலிருந்து காப்பாற்றி விட்டார் " என்று மகிழ்ந்தார். அவரிடம் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்த வைத்தியர் ஏதும் கூறாமல் அவ்விடத்தை விட்டு தன் குடிலுக்கு விரைந்தார். பல்வேறு முயற்சிக்குப் பின் தான் கண்டறிந்த  (தன்னிடமிருக்கும்) மருந்துதான் வெண் குஷ்டத்தைத் தீர்க்கும் ஒரே வழி. அதை உட்கொள்ளாமல் அர்ச்சகர் எவ்வாறு குணமடைய இயலும் என்ற சிந்தனையில் பசி உறக்கத்தை இழந்தவரானார் வைத்தியர். சில நாட்களுக்குப் பின் அர்ச்சகரை பின் தொடர்ந்து அவ்வுண்மையை அறிந்து கொள்ள முடிவு செய்தார்.  

அதிகாலையில் எழும் அர்ச்சகர் தன் குடிலிலிருந்து சிறிது தூரத்தில் ஓடும் ஓடையில் குளித்து தன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார் . அங்கு தன் பணிகளை முடித்து விட்டு வீடு திரும்பினார் . சிறிது ஓய்விற்குப் பின் மாலையில் கோவில் பூசனைகளை கவனிக்கக் கிளம்பினார் . அவரை கவனித்துக் கொண்டிருக்கும் வைத்தியருக்கோ குழப்பம் அதிகரித்தது. சில நாட்களுக்குப் பின் பூசகரை தொடந்து கொண்டிருந்த வைத்தியர் ஏதோ சிந்தனையில் ஓடையின் நீர் எங்கிருந்து வருகிறது என்று அறிய ஆவல் கொண்டார். ஓடை வரும் பாதையில் ஓர் சில மைல்கள்  நடந்த அவர் ஓர் அருவியைக் கண்டார். அருவியின் மூலத்தை அறிந்து கொள்ள மலை மேல் ஏறினார். அங்கு வாழும் மலை மக்களின் துணையோடு மலை உச்சியை அடைந்த வைத்தியர் அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்தார் மறு கணமே மகிழ்ச்சியில் துள்ளினார் .

அருவி கொப்பளித்து இறங்கும் பாறையின் இடுக்கில் சிக்கி உயிர் துறந்திருந்தது ஓர் மலைப்பாம்பு. அதன் வயிற்றுப்பகுதி நசுங்கி குடல் தெரிய திறந்து கிடந்தது. அதன் மேல் விழுந்து வரும்  அருவி நீர் தான் ஓடையில் கலப்பது . தன் அனுஷ்டானங்களை கடைபிடிக்கும் பிராமணர் தினம் மூன்று முறை அருந்துவதும் இதே நீரைத்தான் . அர்ச்சகரின் வெண் குஷ்டத்தை தீர்த்தது மலைப்பாம்பின் கொழுப்பைக் கொண்டிருக்கும் அருவி நீர்தான் என்பதை அறிந்த மருத்துவரின் குழப்பம் தீர்ந்தது. ஆனால் அர்ச்சகரை காப்பாற்றியது அவர் முழு நம்பிக்கையுடன் வணங்கும் குருவாயூரப்பனே என்பதையும் நினைத் து மெய் சிலிர்த்தார் .

கேரள மாநிலம் திருச்சூரில் அமைந்திருக்கும் குருவாயூரப்பன் ஆலயம் தென்னகத்தின் துவாரகை என்றழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கிறது. இன்றளவும் பலர் தங்கள் குழந்தையின் முதல் அன்னத்தை இக்கோவிலில் அளித்து (ஊட்டி) துவங்குகிறார்கள். வருடம் தோறும் கிருஷ்ணர் ஜெயந்தி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சொன்னவர் - துளசி.


          

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..