செவ்வாய் மற்றும் வியாழன்

இன்றைய காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்தின் மீதே அதிகப்படியான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செயற்கைக் கோள்கள் மற்றும் விண்கலங்களின் உதவியால் அங்கு மனிதன் உயிர் வாழ்வதற்கான  வாய்ப்புகள் உள்ளனவா என்றும் ஆராயப்பட்டு வருகிறது. சிவப்பு கிரகம் என்ற புனைப் பெயர் கொண்ட இச்செவ்வாய் கிரகம் நவகிரகங்களில் சூரியனின் இடப்புறம் அமர்ந்துள்ளான். அவனின் பின்புலம் என்ன?! அறிவோமா?!

பனி மூடிய கைலாயத்தின் குளுமையில் குடி கொண்டிருந்தாலும் ருத்ரனின் கோபம்  நாம்  அனைவரும் அறிந்த ஒன்றே. எல்லைமீறிய சினத்தால் கைலாயன் நெற்றிக்கண்ணை திறந்தானென்றால்  அதிலிருந்து வெளிவரும் வெப்பத்தைத் தாள ஒருவராலும் இயலாது...பார்வதி தேவி உட்பட. அப்பேற்பட்ட  முக்கண்ணன் சிவபெருமான் கோபத்தில் கொந்தளித்த போது அவர் கண்களில் வழிந்த   கண்ணீரிலிருந்து (வேர்வை , ரத்தம் என்றும் கூறுவர்) தோன்றியவர் செவ்வாய் ஆதலால் சிவப்பு நிறம் கொண்டவர் ஆனார். அனல் வடிவான இவருக்கு "அங்காரகன்" என்ற மற்றொரு பெயருமுண்டு. இச்செவ்வாய் திசையில் பிறந்தவர் கடும் கோபக்காரராக இருப்பர். நற்காரியங்கள் தடைபடுவதும் இதனாலே  எனினும் செவ்வாயை அதிபதியாகக் கொண்டவர்கள் சடைமுடியானின் அருள் பார்வையும் அனுக்கிரகமும்  கிடைக்கப்பெறுவர்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமண வாய்ப்பு தள்ளிப்போகும் என்பதும் அதற்கான பரிகாரங்கள் மூலம் செவ்வாயை குளிர்வித்தோமானால் தடைகள் நீங்கி சுப காரியங்கள் நிகழும் என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கும் சனிக்கும் எப்போதும் எட்டாம் பொருத்தம். அது ஏன்?! தெரிந்து கொள்ள சனி பகவானைப் பற்றிய பகுதியினைப்  படிக்கவும்.

வியாழன்/ குரு

சப்த ரிஷிகளில் ஒருவரான அங்கிரஸின் புத்திரர் தான் இந்த வியாழன். நவகிரகங்களில் சூரியனுக்கு வலப்புறமாக அமர்ந்திருக்கும் இவர் அறிவாற்றல் மிக்கவர். இவருடைய அதீத ஞானத்தால் தேவர்களுக்கே குருவாக உயர்ந்தவர். அனைவராலும் பிரஹஸ்பதி என்றும் அழைக்கப்படுபவர்.  வியாழனின் கட்டளைகளே  அனைத்து தேவர்களுக்கும் வேதவாக்கு எனினும் சிலசமயம் தேவேந்திரன் இந்திரன் இவருடைய அறிவுரையைக்  கேளாமல் எதிரிகளில் மேல் போர் தொடுத்து தோற்றுப்போவதும்  உண்டு. அவ்வாறான சமயங்களில் தலைமறைவாகும் இந்திரனுக்கு பதிலாக தேவ லோகத்தை ஆட்சி செய்வதும் வியாழனின் வேலையே!!!

இத்திசையில் பிறந்தவர்கள் அறிவாற்றலும் அசாத்திய புத்திக்கூர்மையும் நிதானமும் மற்றவரை தன் வழிக்கு கொண்டுவரும் திறமையும் மிக்கவர்களாகத் திகழ்வர்.

சொன்னவர் : துளசி

முற்றும்.






Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..