சனி

நவகிரகங்களைப் பற்றி அதிகம் தெரியாதவர்களும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அற்றவர்களும் கூட  இவனை அறிந்திருப்பர் காரணம் தயவு தாட்சண்யம் இன்றி அவரவர் கர்ம வினைக்கேற்ப இவன் அளிக்கும் பலன். சினம் மிக்கவனாக இவன் பிடியிலிருந்து யாரும் தப்பவே முடியாது. கண்டுபிடித்து விட்டீர்கள் தானே?! ஆம் உங்கள் கணிப்பு சரியே?! நவகிரகங்களில் ராகுவிற்கும் கேதுவிற்கு நடுவே அமர்ந்திருக்கும் சனி பகவானே அவன்!!! அஷ்டம சனி, ஏழரை நாட்டு சனி என்று இவன் ஏன் நம்மை பாடாய் படுத்துகிறான்?! மேலே படியுங்கள்.

சூரியனுக்கும் அவன் மனைவி சந்தியாவின் நிழல் உருவான சாயா தேவிக்கும் பிறந்தவன் சனி. தாய்ப்பாசம் மிக்கவன். நிழலுக்கு பிறந்தவனாதலால் கருமை நிறம் கொண்டான் ஆனால் சூரியனின் ஞானம் கிடைக்கப்பெற்றவன் ஆனான். கானகம் சென்ற சந்தியா தன் இருப்பிடம் திரும்ப, நிழல் வடிவான சாயா மறைந்தாள். சந்தியாவையே தன் தாய் என நினைத்த சனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சந்தியாவின் புதல்வனான யமன் தன் தாயை சனியுடன் பங்கிட்டுக் கொள்ள விரும்பவில்லை. சந்தியாவும் அவனைத் தன்  புதல்வனாக ஏற்கவில்லை. தாய்ப்பாசத்திற்கு ஏங்கித் தவித்த சனி தன் சுற்றத்தார் அனைவரையும் வெறுத்தான். சந்தியாவை வனத்திலிருந்து அழைத்து வந்ததால் தானே தனது தாயான சாயா மறைந்தாள் என்பதால் தந்தையான  சூரியனிடம் கடும் கோபம் கொண்டான். சினத்தால்  வீட்டை விட்டு வெளியேறிய  சனிக்கு உதவிய காகம் அவனுடைய நண்பனாகவும் வாகனமாகவும் மாறினான்.

சனியின் பார்வை யார் மேல் பட்டாலும் அவர்களைச்  சங்கடங்கள் சூழ்ந்தன ஆதலால் தன் மனைவியையும் நேருக்கு நேர் காண்பதைத்  தவிர்த்தான். தன் மேல் அன்பில்லை என்று அவன் மனைவி நினைத்ததாலும், செவ்வாய் தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்ததாலும் அவள் சனியிடம் நாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள். சனியின் மண வாழ்க்கையும் நிம்மதி இன்றி அமைந்தது.  இதைத் தாள முடியாத சனி  செவ்வாயுடன் போர் செய்ததில் கால் ஊனமுற்றான். (சடைமுடியானை சனி  பீடிக்க முற்பட்டதால் கோபம் கொண்ட அன்னை பார்வதி தாக்கியதால் காலை ஊன்றி நடக்கிறான் சனி என்றும் கூறப்படுவதுண்டு.)

தன் வாழ்வில் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்த சனியின் திசையில் பிறந்தவர்களும் அக்கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் வருபவர்களும்  சங்கடங்களையே  அனுபவிப்பர் என்றாலும் இறுதியில் அதிஷ்டங்களை அள்ளி வழங்குபவனும் அவனே!!! இத்திசையில் பிறந்தவர்கள் கருமை நிறம் கொண்டவர்களாகவும், எளிதில் கோபம் கொள்பவர்களாகவும்,  அங்கஹீனம் உள்ளவர்களாகவும், எவரிடத்தும் பாரபட்சம் காட்டாதவர்களாகவும்   இருப்பர் என்றும்  கணிக்கப்படுகிறது.

எது எப்படியோ தம் கடமையைச்  சரியாகச்  செய்பவர்கள் எக்கிரகத்தின் பிடியிலிருந்தும்  எளிதில் வெளிவரலாம் என்பது என் கருத்து!!!

சொன்னவர் - துளசி 

தொடரும் ...

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..