புதன்

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது " என்பது பழமொழி. அப்பெருமைக்குரிய புதன் திசையில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும் சூழ்நிலையை அனுசரித்து வாழத்தெரிந்தவர்களாகவும் இருப்பர். இக்கிரகத்திற்குண்டான கதை என்ன?! தெரிந்து கொள்வோம்.

சந்திரனுக்கு, பிரகஸ்பதியின்(வியாழன்) மனைவியான தாராவில் பிறந்தவன் புதன். தன் விருப்பத்திற்கு மாறாக பிறந்ததால் தாரா புதனை கைவிட சந்திரனாலும் புறக்கணிக்கப்பட்டான். தாய் தந்தையரன்றி வளர்ந்தவன் தன் தனிமைக்குக் காரணமான சந்திரனை வெறுத்தான். இலா  என்ற அரசகுமாரியை மணந்தவனின் மண வாழ்க்கையின் மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை.

இலாவின் பெற்றோர்கள் அவள் பிறப்பிற்கு முன் பல ஆண்டுகள்  புத்திரபாக்கியம் இன்றித்  தவித்தனர். இறுதியில் அரசாள வாரிசு வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். யாகத்தில் மகிழ்ந்து அக்னியில்  தோன்றிய சிவன் அவர்களுக்கு என்ன வாரிசு வேண்டும் என்று கேட்க அரசி பெண் குழந்தை என்று தன்னை அறியாமல் கூறிவிட ...அவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் மகிழ்வுடன் மகவை ஏற்றுக்கொண்டனர் ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல நாடாள  மைந்தன்  இல்லையே என்ற சோகம் வாட்டி வதைக்க மகேஸ்வரனை நினைத்து கடும் தவம் செய்தனர் அரசனும் அரசியும். அவர்களின் குறையை போக்கும் பொருட்டு சிவபெருமான் இலாவை ஆணாக மாற்றினார்.

இளைஞனான இலா அரசனாக முடி சூட்டப்பட்டான். வீரமிக்க இலா  வேட்டை ஆடுவதற்கு கானகத்திற்குச் செல்ல, அங்கு ஓர்  அழகிய  சோலையைக் கண்டான். இதை யார் அமைத்திருப்பார்கள்?! நடுக்காட்டில் மானுடர்கள் வசிப்பது சாத்தியமில்லையே என  திகைத்து நின்றவன் சிறிது சிறிதாக தன் ஆண் உருவம் மங்கையாக மாறுவதை உணர்ந்தான். செய்வதறியாது மலைத்து நின்ற இலா கண்ணீர் வடித்துக் கதறினாள். அவள் முன் தோன்றிய சக்தி "கலங்காதே!!! இது பெண்கள் மட்டுமே நுழையும் வண்ணம் என்னால் வடிவமைக்கப்பட்ட வனம். மகேஸ்வரனைத் தவிர எந்த ஆண்மகனும் இங்கு  நுழைய முடியாது. நீ பிறப்பால் பெண்ணானதாலேயே உன்னால் இங்கு வரமுடிந்தது. உன் தன்ருவைத் திரும்பப் பெற்றாய் " என்று கூறினாள்.

தன் நாடும் குடியும்  ஆள அரசன் அன்றி இருப்பதையும் அதனால்  வரப்போகும் இன்னல்களையும் கூறி இலா அன்னை பார்வதியிடம் மன்றாட
"வருடத்தில் ஆறு மாதங்கள் ஆணாக மாறி நாட்டை ஆள்வாய்...ஆறு மாதங்கள் பெண்ணாக மாறி இவ்வனத்தில் வசிப்பாயாக" என்று கூறி மறைந்தாள். அவ்வாறு பெண்ணான இலாவையே புதன் மணந்தான். திருமணத்திற்குப் பின் உண்மை தெரிய ஏமாற்றம் அடைந்தான் எனினும் மனைவியின் மேல் காதல் கொண்டவனாகவே இருந்தான்.

புதனுக்கும்  இலாவிற்கும் பிறந்தவன் புரூரவஸ். ரகு குலத்து  முதல் மூதாதையான  இவர் வரிசையில் தோன்றியவர்களே கௌரவர்களும் பாண்டவர்களும்.

புதன் திசையில் பிறந்தவர்களும், இத்திசையின் ஆதிக்கத்தின் கீழ்   வருபவர்களும் புதனைப் போலவே தாய், தந்தை, மனைவி, கணவன், உடன் பிறந்தோர், உற்றார் உறவினர் என  அனைவரும்  இருந்தாலும் ஏதோ காரணத்திற்காக தனியாகவே வாழும் சூழ்நிலைக்கு ஆளாவர். அவர்களின் மேல் ஏதோ வகையில் ஏமாற்றம் கொள்வர் என்று புதன் திசையின் பலன்களைக் கூறுவோர் சொல்வதுண்டு. புதனுக்கு முதல் சத்ரு சந்திரன்.

சொன்னவர் - துளசி

தொடரும் ...

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..