சூரியன்

கஷ்யப மஹரிஷிக்கும் அதிதிக்கும் பிறந்த சூரியன் ஒன்பது கிரகங்களில் முதன்மையானவன். மையத்தில் அமர்ந்திருக்கும் அவனையே  அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன. இதையே அறிவியலும் வலியுறுத்துகிறது. சூரிய திசையில் ஜனித்தவர்களும் அவன் பார்வை தம் கிரகத்தின் மேல் படும் வாய்ப்பு பெற்றவர்களும் குன்றா  ஒளி வெள்ளத்தால் சூழப்பட்டு பொலிவுடன் காணப்படுவர் . பஞ்ச பூதத்தின் அம்சமான சூரியனை நாம் வாழும் பூமியிலிருந்தே உணரவும் பார்க்கவும் முடியும் என்பதும், இந்திய கலாசாரத்தில் மட்டுமல்லாது சீன, கிரேக்க நாடுகளிலும் சூரியனை கடவுளாக சித்தரிக்கின்றனர் என்பதும்   கூடுதல் சிறப்பு.

ஏழு குதிரைகளும் ஒற்றைச் சக்கரமும் கொண்ட அவன் தேரை அருணன் செலுத்த சற்றும் ஓய்வின்றி இப்பிரபஞ்ச பெருவெளியை சுற்றி வருகின்றான் சூரியன். அவ்வேழு குதிரைகளே நாம் காணும் வானவில். சூரியனுக்கு சந்தியாவில் பிறந்த குழந்தைகள் மூவர். மனு, யமன், யமி. மனு மனிதரில் படைக்கும் திறனை அளிக்க, யமன் கடைசி கட்டத்தில் அழைத்துக் கொண்டு செல்ல வருகிறான். யமுனை நதியாக பொங்கி ஓடுபவள் யமி.

சூரியனுடனான தம் வாழ்கை சந்தியாவிற்கு சலிப்பைத் தரவே மாற்றம் வேண்டி கானகம் செல்ல விழைந்தாள். தன்னுடைய இடத்தில் தனது நிழலுருவான சாயா தேவியை அமர்த்தி விட்டு குதிரை வடிவம் கொண்டு வனத்தில் சுற்றித்திரிந்தாள். காலங்கள் கடக்க சூரியனுக்கு சாயாவில் பல புத்திரர்கள் பிறந்தனர். அவர்களில் முக்கியமானவர் சனி. தன்னோடு வாழ்பவள் சந்தியா அல்ல என்பதை உணர்ந்த சூரியன் குதிரை வடிவம் கொண்டு  அவளைத் தேடிக்  கண்டடைந்தான். அவ்விருவருக்கும் பிறந்த புத்திரர்களே அஸ்வினித்தேவர்களான அஸ்வினி, பரணி.

இவர்களைத் தவிர மகாபாரதத்தின் மாவீரர் கர்ணன், இராமாயணத்தில் வாமணர்களின் அரசனான சுக்கீரிவன் ஆகியோரும் சூரிய புத்திரர்களே.

சொன்னவர் : துளசி

தொடரும்...


Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..