சுக்கிரன்/ வெள்ளி
சுக்கிரன் என்றதும் நம் நினைவிற்கு வருவது சுக்கிர திசை தான். அதிர்ஷ்டம் நம் பக்கம் என்று எண்ண வைக்கும் இக்கிரகத்திற்கு அதிபதியானவர் சுக்ராச்சாரியார். நவகிரகங்களில் சந்திரனுக்கும் புதனுக்கும் நடுவே அமர்ந்திருக்கும் இவரை வெள்ளி என்றும் அழைக்கின்றோம். இத்திசையில் பிறந்தோர் ஞானம் மிக்கவர்களாக இருப்பர் என்றும் இக்கிரகத்தின் பார்வை நம்மேல் படுமாயின் வாழ்வில் வளம் கூடும் என்றும் நம்பப்படுகிறது . இனி சுக்கிரனின் கதையைப் பார்ப்போமா?!
சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகுவிற்கும் பிருதைக்கும் மகனாகப் பிறந்தவர் சுக்ராச்சாரியார். ஓர் நாள் தன் தந்தையுடன் வேதம் கற்கச் சென்றிருந்தார். குடிலில் தனித்திருந்த பிருதையிடம் அடைக்கலம் அடைந்தனர் தேவர்களிடமிருந்து தப்பி ஓடிவந்த அசுரர்கள். அவர்களை தன்னிடம் ஒப்படைக்க கூறி பிருதையிடம் முறையிட்டான் இந்திரன். "தாயான நான் என்னிடம் தஞ்சம் அடைந்தவர்களைக் கைவிட முடியாது" என்று பிருதை மறுத்து விட இந்திரன் காக்கும் கடவுள் ஹரியை அழைத்து வந்தான். அரக்கர்களை காத்த பிருதை சுதர்சன சக்கரத்திற்கு பலியானாள். இதைக் கண்ட பிருகு முனி விண்ணளந்தோன் மனிதனாக பூலோகத்தில் அவதரிப்பார் என்று சபித்தார்.
தனது தாயின் நிலையைக் கண்ட சுக்ராச்சாரியார் இனி தாம் தேவர்களை ஆதரிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்து அசுரர்களின் குல குருவாக மாறினார். சிவனிடமிருந்து தான் பெற்ற சஞ்சீவி மந்திரத்தால் பல அரக்கர்களை இறப்பிலிருந்து மீட்டார். இவருடைய உதவியினால் அசுர குலம் தேவலோகத்தையும் இந்திரனையும் பலமுறை வென்று மூவுலகையும் ஆண்டது. விஷ்ணுவின் வாமன அவதாரத்தில் மகாபலியை அழிவிலிருந்து காக்கும் பொருட்டு வண்டாக மாறி தனது ஒரு விழியை இழந்தவரும் நவகிரகங்களில் வெள்ளியாக அமர்ந்திருப்பவரும் சுக்கிராச்சாரியாரே. அவருக்கு பார்கவர் என்று மற்றொருமொரு பெயருமுண்டு.
சொன்னவர் - துளசி
தொடரும் ...
Comments
Post a Comment