ஓணம்

அரக்ககுலக்  குடி வழிவந்த மகாபலி சக்ரவர்த்தி மூவுலகங்களையும் வென்று தருக்கி அமர்ந்திருந்த சமயம் அது. அவனின் குல குருவான சுக்ராச்சாரியார் அவனுடைய வெற்றியை நிலை நாட்டும் பொருட்டு மாபெரும் யாகம் ஒன்றை நடத்துமாறு பணித்தார். அவருடைய ஆணைப்படி  நடந்த யாகம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. யாகத்தின் முடிவில் அதில்  கலந்துகொண்ட அந்தணர்களுக்கும் பிராமணர்களுக்கும் அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை தானமாக வழங்குவது முறைமையாக இருந்தது அவ்வாறு மகாபலி தானம் செய்து கொண்டிருந்த சமயம் வாமன உருவம் கொண்டிருந்த  ஓர் பிராமணச் சிறுவன் அவரை நோக்கி வந்தான்.

அரசர் வழங்கிய பரிசில்களை வாங்க மறுத்த சிறுவனிடம் "உனக்கு வேண்டியவற்றைக் கேளும்...மூவுலகங்களுக்கும் அரசன் நான்...என்னால் எதையும் அளிக்க இயலும்" என்று ஆணவமிக்க குரலில் கூறினான் மகாபலி.
"அரசே எனக்கு மூன்று அடி நிலமே போதுமானது...அதை அளியுங்கள் மகிழ்வேன்" என்று கூறினான் சிறுவன். "அவ்வளவுதானா!!! இதோ" என்று தானமளிக்க குடுவையிலுருந்த கங்கை நீரைக் கையிலெடுத்தான். "சற்று பொறுங்கள் அரசே" என்ற சுக்ராசாரியாரின் குரல் அவனைத் தடுத்தது. "இச் சிறுவனைக் கண்டால் சாதாரமானவனாகத் தோன்றவில்லை...இவன் வேண்டியதை தானமளிக்க சற்று சிந்திக்கலாம்" என்று கூறினார். ஆனால் மஹாபலியோ "இதுவரை யாசிப்பவர்களுக்கு நான் இல்லை என்று மறுத்ததில்லை மேலும் யாகத்தின் முடிவில் பிராமணர்களுக்கு தானம் அளிக்கத் தவறியவன் என்ற தீச் சொல் என் குடிமேல் விழ ஒப்பமாட்டேன்" என்று கூறி  நீரை கையிலெடுக்க முற்படும் போது கமண்டலத்திலிருந்து  நீர் வெளிவரும் நீண்ட தண்டு அடைபட்டிருக்கக் கண்டான்.

நீண்ட முயற்சிக்குப் பின்னும் நீர் வெளிவராததைக் கண்ட சிறுவன் அருகில் கிடந்த தர்பை புல்லைக் கையிலெடுத்து குடுவையின் மூக்கைக் குத்தினான் அதில் அடைத்துக் கொண்டிருந்த கரிய வண்டொன்று வலியில் ரீங்கரித்து பறந்து மறைந்தது. மாகாபாலியும் "தந்தேன்...தந்தேன் ...தந்தேன் " என்று மூன்றுமுறை கூறி மூன்றடி நிலத்தை தானமாக அளித்தான். அடுத்த நொடி மாஉருவம் கொண்ட சிறுவன் ஓரடியில் விண்ணுலகையும் ஓரடியில் மண்ணுலகையும் அளந்து மூன்றாமடிக்கு இடமில்லாமல் மன்னனை நோக்கி நின்றான். தானளித்த தானம் பொய்கக்கூடாதென்ற உறுதி கொண்ட மகாபலி அவனுடைய மூன்றாம் அடியை தனது சிரசின் மேல் வைக்குமாறு தாழ்பணிந்து நின்றான். அவன் சிரசின் மேல் தனது காலை வைத்து பாதாளத்தில் அவனை அழுத்தினான். வாமனச்  சிறுவன் விண்ணாளும் மகா விஷ்ணுவின் அவதாரமே என்றறிந்த மக்கள் பக்தியில் கைகூப்பித் தொழுதனர். வருடத்திற்கு ஒருமுறை பூலோகம் வந்து தன் மண்ணையும் மக்களையும் காண அனுமதி கோறினான் மகாபலி. அவ்வாறு அவன் பாதாளத்திலிருந்து மண்ணுலகம் வரும் நாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.மக்களும் அவனை அறுசுவை உணவும் மலர் கோலமும் கொண்டு வரவேற்கின்றனர்.

சொன்னவர் - துளசி 

பின் குறிப்பு : வண்டாகச் சென்று கமண்டலத்தை அடைத்து தானத்தை தடுக்க விளைந்தவர் வேறு யாருமல்ல சுகராச்சாரியாரே !!!

சப்த ரிஷிகளில் ஒருவரான காஷ்யப முனிக்கும் அதிதிக்கும் மகனாக வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலியை வதம் செய்யவில்லை மாறாக பாதாள லோகத்திற்கு அனுப்பினார் ஏன்?

பிரகலாதனின் மகன் வழிப் பேரனே இந்த மகாபலி. இரண்யகசிபுவை நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்த பிறகு பிரகலாதனிடம்  "இனி உன் குல வழியில் எவரையும் வதம் செய்ய மாட்டேன்" என்று நரசிம்மர் வாக்களிக்கிறார் அதனாலேயே மகாபலியை கீழ் லோகத்திற்கு அனுப்புகிறார்.


  

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..