ராகு கேது

ராகு காலம், ராகு கேது பெயர்ச்சி , அதன் பலன்கள் பரிகாரங்கள் என்று நவகிரகங்களில் சனிக்கு வலம் இடமாக அமர்ந்திருக்கும் ராகு கேதுவை அறிந்திருக்கிறோம். ஆனால் ராகுவின் பின்புலம்  நம்மில் எத்தனை
பேருக்குத் தெரியும் ?! அறிந்துகொள்வோமா!!!

மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் நாகத்தை கயிறாவும் கொண்டு பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கவும் அதை உண்டு இறவாநிலையை  அடையவும் தேவர்களும் அசுரர்களும் விண்ணளந்தோனின் தலைமையில் முடிவெடுத்தனர். விஷ்ணு தன்னை கூர்மமாக மாற்றிக்கொண்டு தன் மேல் மந்திர மலையைத் தாங்கிக்கொள்ள கடைதல் தொடங்கியது. பல்வேறு அரிய பொருட்கள் பார்கடலில் இருந்து வெளிவந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட லக்ஷ்மியை மகாவிஷ்ணு தன் நெஞ்சில் ஏந்தி தாரமாக ஏற்றுக்கொண்டார். அந்நாள் பங்குனி உத்திரமாக கொண்டாடப்பட்டது. கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் என்று வெளிவந்த அனைத்தையும் தேவர்களே சொந்தமாக்கிக்கொள்ள அசுரர்கள் ஏமாற்றமடைந்தனர் ஆனால் அமிர்தத்திற்காக பொறுத்துக்கொண்டனர். நஞ்சை சடைமுடியான் விழுங்கி அகிலத்தைக் காக்க கடைசியில் அமிர்தம் வெளிப்பட்டது.

எங்கே தேவர்கள் இதையும் அபகரித்து விடுவார்களோ என்று அஞ்சிய அசுரர்களில் ஒருவனான ராகு அமிர்தத்தை எடுத்துக்கொண்டு அசுரவுலகில் புகுந்து மறைந்தான். வேறு எவரும் நுழையாத வண்ணம் மாய தடுப்பொன்றையும் அமைத்துக்கொண்டனர். இதை எதிர்பாராத தேவர்கள் அதிர்ச்சியுற்று செய்வதறியாது தவித்து நிற்க மஹா விஷ்ணு மோகினி அவதாரம் கொண்டு அசுர உலகில் நுழைந்தார். அவள் அழகில் அசுரர்கள் தன்னிலை மறைந்து நிலையழிந்து நின்றிருக்கையில் தேவர்களும்  உள்ளே நுழைந்தனர். மோகினி தானே அனைவருக்கும் அமிர்தத்தை சரிசமமாக பங்கிடுவதாக கூறி அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கே அளித்துக்கொண்டிருந்ததை கண்ட ராகு சூரியன் மற்றும் சந்திரனின் பின்னால் மறைந்து நின்று அமிர்தத்தை உண்டுவிட்டான். அதை அறிந்த சூரிய சந்திரர்கள் விஷ்ணுவிடம் அதைக்கூற ஆழிவண்ணன் தன் சுதர்சன சக்கரத்தை ராகுவின் மேல் ஏவினார். ஆனால் அமிர்தத்தின் சக்தியால் அவன் இறப்பை வென்றித்திருந்தாமையால் தலை தனியாகவும் உடல் தனியாகவும் துண்டிக்கப்பட்டு கிடந்தான். அமிர்தத்தை உண்டு இறவாமை நிலை அடைந்தமையால் இனி இவன் தேவர்களில் ஒருவனாக அறியப்படுவான் என்று அறிவித்தார் விஷ்ணு. நவகிரகங்களில் ஒருவராகவும்
வணங்கப்படலானான்.

அவன் தலை ராகு என்றும் நாக வடிவம் கொண்ட உடல் கேது என்றும் அறியப்பட்டது. தன்னைக் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை அவ்வப்போது கேதுவும் ராகுவும் விழுங்க கிரகணங்கள் உண்டானது. ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்ளுடன் அமர்ந்து கொள்வதற்கேற்ப அவற்றின்  குணாதிசயங்கள் மாறுபடுவதும் அவை தனி மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் ஜோதிட அறிவியலில் விளக்கமாகக் காணலாம்.

தொடரும்...

சொன்னவர் - துளசி .


Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..