யோக நரசிம்மர் - நரசிம்மர் ஜெயந்தி - மே 17, 2019

சப்தரிஷிகளில் ஒருவரான புலஸ்தியர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை நரசிம்ம அவதாரத்தில் காண விருப்பம் கொண்டார். அதன் பொருட்டு அடர்ந்த காட்டிலுள்ள குன்றின் மேல் அமர்ந்து தவமியற்றத் துவங்கினார். அவ்வனத்தில் வசித்த மலை வேடன் ஒருவன் அவருக்காக கனிகளை பறித்து வந்து அவர் முன் வைத்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தவத்தில் மூழ்கியிருந்த புலஸ்தியரோ அவன் யார் என்பதை அறிந்திருக்கவில்லை.

ஓர் நாள் தவத்திலிருந்து விழித்துக் கொண்ட புலஸ்தியரை  கண்ட வேடன் அவர் முன் வணங்கி "உங்கள பார்த்தா பெரிய சாமி மாதிரி தெரியுறீங்க...ரொம்ப நாளா இங்க எதுக்குயா உக்காந்து சாமி கும்புறீங்க?!" என்று தனது அறியாமையையும் சந்தேகத்தையும் வெளிப்படுத்தினான். கனிவே வடிவாகிய புலஸ்தியரோ ஆழிவண்ணனின் நரசிம்ம வடிவத்தைக் காணும் பொருட்டே அங்கு தவத்தில் ஈடுபட்டுள்ளதாக விளக்கிக் கூறினார். குரு உபதேசம் போல் அவர் உரைத்ததைக்  கேட்டறிந்த வேடன் "அப்பிடியா ?!...நாம கூப்புட்டா சாமி வருமா?!" என்று அதிசயித்தான். சிங்க முகமும் மனித உடலும் கொண்டவர் கடவுளா?! என்று ஆச்சர்யம் கொண்டான். "சாமி நான் இந்த காட்டுல எத்தனையோ மிருகங்கள பாத்துருக்கேன் ஆனா நீ சொல்ற மாதிரி எதையுமே பார்த்ததில்ல ஆனா உனக்காக நான் தேடி பிடிச்சு கூட்டியாரேன்" என்று கூறி வனத்தில் புகுந்து மறைந்தான்.

ஊன், உறக்கம், உறைவிடம் என்று அனைத்தையும் மறந்த வேடன் நம்பிக்கை மற்றும் சிரத்தையோடு வனத்தில் சுற்றி அலைந்தான். சில நாட்களிலேயே மனித உடலும் சிங்க முகமும் கொண்ட ஜீவனை கண்டு பிடித்த வேடன் சற்றும் பயமின்றி "நீ இங்கயா இருக்க அங்க சாமி உன்ன பாக்கனும்னு சாப்புடாம கொள்ளாம உக்காந்துட்டிருக்காரு  " என்று கூறியபடியே அங்கிருக்கும் காட்டுக் கொடிகளால் அதன் கைகளைக் கட்டி புலஸ்தியர் அமர்ந்திருந்த குன்றுக்கு அழைத்துக் கொண்டு சென்றான்.

புலஸ்தியரின் முன் சென்ற வேடன் "சாமி நீ  சொன்ன விலங்கு இதோ " என்று மகிழ்வோடு கூறினான் ஆனால் ரிஷியின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. " இங்க தான் சாமி நிக்குது " என்று மீண்டும் மீண்டும் கூறிய வேடன் "எனக்கு தெரிவது அவருக்கு தெரியவில்லையே?! என்னை எவ்வாறு அவர் நம்புவார்...கடவுளே நான் என்ன செய்வேன் " என்று மனமுடைந்து அழலானான். அவனின் இந்நிலையைக் கண்ட விண்ணளந்தோன்
புலஸ்தியருக்கு நரசிம்ம அவதாரத்தில் சாந்த சொரூபமாக  காட்சி அளித்தார். அவ்விடத்திலேயே  ஆலயம் கொண்டு இன்றும் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார் யோக நரசிம்மர்.

பின் குறிப்பு : ஞானமற்ற எளிய வேடனின் நம்பிக்கைக்கு பலனாக  காட்சி அளித்த நரசிம்மர் ஆலயம்  மதுரைக்கு அருகில் இருக்கும் ஒத்தக்கடை என்னும் கிராமத்தில் ஆனைமலையில் அடிவாரத்தில் நரசிங்கம்பட்டி என்னும் இடத்தில்  அமர்ந்துள்ளது. மலையைக் குடைந்து வடிக்கபட்ட யோக நரசிம்மரை இங்கு காணலாம்.

சொன்னவர் : துளசி

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..