சைதன்ய மஹா பிரபு
"ஹரே கிருஷ்ண ...ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ...ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே " - என்ற நாம ஜெபத்தை இவ்வுலகிற்கு அளித்தவரும் பதினாறாம் நூற்றாண்டில் பகவான் கிருஷ்ணரின் அவதாரம் என்று பலரால் நம்பப்பட்டவரான "ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு " மேற்கு வங்காளத்தில் "நவப்வீபத் " என்னும் இடத்தில் பிறந்தவர் ஆவார். அவருடைய இயற்பெயர் "விஸ்வம்பர்".
மிக இளம் வயதிலேயே ஆன்மிக ஆர்வத்தை வெளிப்படுத்திய விஸ்வம்பர் சமஸ்கிருத புலமை மிக்கவராக இருந்தார் .மகா யோகிகளிடம் காணப்படும் ஒன்பது அடையாளங்களை அவரிடம் காண முடிந்தது . அவையாவன
1.இலாப நஷ்டத்தைப் பற்றிய கவலை அற்று இருத்தல்
2.கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருத்தல்
3.உலக பற்று அற்று இருத்தல்
4.புகழ்சியை விரும்பாதிருத்தல்
5.கிருஷ்ணரிடம் உறுதியான நம்பிக்கை கொண்டிருத்தல்
6.பகவானின் நினைவுடன் இருத்தல்
7.ஹரிநாமம் சொல்வதின் ருசியை அறிந்திருத்தல்
8.திவ்ய தேசங்களில் வாழ விருப்பம் கொண்டிருத்தல்
9.தெய்வீக குணங்களை மற்றவர்களிடம் எடுத்துரைப்பதில் பேராவல்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பர பிரம்மம் . கிருஷ்ண ரூபம் எல்லையற்றது, தூய அன்பினால் அனைத்து ஆத்மாவையும் கவரக் கூடியது என்பதை உணர்த்த "பக்தி யோகா " என்ற வழிபாட்டு முறையை வடிவமைத்தவர் சைதன்ய மகாபிரபு .
ஓர் நாள் கிருஷ்ண நாமத்தை ஜெபித்தபடியும்... தன்னை மறந்த நிலையில் பகவானின் பெருமைகளைப் பற்றி பாடி ஆடியபடியும் சென்று கொண்டிருந்தார் சைதன்ய பிரபு . பலரும் மாலை வேளையில் தங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தனர் அவர்களிடம் கிருஷ்ண நாமத்தை சொல்வதிலிருக்கும் பேரின்பத்தை எடுத்துக்கூறி அவர்களையும் நாம ஜெபத்தைக் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார். இது தினம் தினம் நடக்கும் நிகழ்வாக மாறியது .
சில தினங்களுக்குப் பிறகு மக்கள் அரசரிடம் விஸ்வம்பர் தங்களை நாம ஜெபத்தைக் கூறுமாறு தங்களின் விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்துவதாக புகார் செய்தனர் . மன்னரோ மக்களின் வேண்டுகோளிற்கிணங்க சைதன்ய மகா பிரபுவை நாடு கடத்த உத்தரவிட்டார் . சேவகர்கள் அவரை அடர்ந்த காட்டிற்குள் விட்டு விட்டு வந்தனர் ஆனால் அரசரோ அடுத்து வந்த நாட்களில் மன அமைதி அற்று காணப்பட்டார். கடவுள் நாமத்தை ஜெபிக்கச் சொன்னவரை காட்டிற்கு அனுப்பிவிட்டோமே என்ற மன உறுத்தல் அவரை வாட்டி வதைத்தது. சில தினங்களில் வீரர்களோடு சைதன்ய பிரபுவைக் காண காட்டிற்கு விரைந்தார் அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிசயத்தில் ஆழ்த்தியது . சைதன்ய மஹா பிரபு கிருஷ்ண நாம செபத்தை பாடியவாறு ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருக்க அவரைச் சூழ்ந்து புலி , சிங்கம் ,சிறுத்தை போன்ற வன மிருகங்களும் ஒருசேர (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என) ஒலியெழுப்பி தங்களை மறந்த நிலையில் அவருடன் ஒன்றெனக் கலந்து காணப்பட்டன . கடவுள் அருள் இல்லாத சராசரி மனிதனால் சாத்தியம் இல்லாத ஒன்றை நிகழ்த்திக் காட்டிய விஸ்வம்பரை தகுந்த மரியாதையோடு நாட்டிற்குள் அழைத்து வந்தார் அரசர்.
பகவான் கிருஷ்ணரை பக்தனாக மட்டுமில்லாமல் மேலும் சில முறையிலும் வழிபடலாம் என நமக்கு வழி காட்டுகிறார் சைதன்யர் . பகவானின் (1)சேவகனாக நம்மை மாற்றிக்கொண்டும் , அவரின்(2) நண்பராக நம்மை உருவகித்தும் ஹரி நாமம் பாடி வழிபடலாம் மேலும் கடவுளை(3) தாயாக பாவித்தும் அன்பு காட்டலாம் . இவற்றைத்தவிர(4) மதுரபாவனை (காமமில்லா நாயக -நாயகி உருவகம் ), (5) வாட்சல்யம் (யசோதை -கிருஷ்ணன் பாவனை ) ஆகியற்றின் மூலமும் கடவுளை பிரார்த்திக்கலாம் என்று கூறுகிறார்.
வைஷ்ணவரான சைதன்யர் ஸ்ரீரங்கத்திற்கு ஓர் முறை வருகை தந்ததாக கூறப்படுகிறது . அவரை பூர்ண கும்ப மரியாதையோடு எதிர்கொண்டு வரவேற்ற ஆச்சார்யர்களிடம் " இங்கு பகவத் கீதை பாராயணம் செய்யப்படுவதை என்னால் கேட்க முடிகிறது...அங்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் " என்று கூற அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம். ஏனென்றால் அவர்கள் காதுகளில் அவை கேட்கவில்லை. விசாரித்ததில் சம்ஸ்கிருத சுலோகங்களை தவறாக உச்சரிப்பதால் கோவிலை விட்டு வெளியேற்றப் பட்ட ஒருவர் வெளிப்பிரகாரத்தில் பாராயணம் செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது . அவரைச் சென்று சந்தித்த சைதன்ய பிரபு " அவன் உச்சரிப்பில் பிழை இருப்பினும் அவன் பக்தியில் களங்கம் இல்லை ... உண்மையான பக்தனே கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர்" என்றும் அவரை "சந்திப்பதே தனக்கு பெரும் பேறு" என்றார் . உண்மை பக்தனைச் சந்திக்கும் போது ஏற்படும் ஆனந்தை இருவரும் பரிமாறிக்கொண்டனர்.
ஆன்மீக வழியில் கடவுளை அடைய, ஆன்மீக சாதனையின் ஏழு படிகள் என பின்வறுவனவற்றை விவரிக்கிறார் சைதன்ய மகாபிரபு...
1.சிரத்தை (கடவுள் மற்றும் சாஸ்திரங்களில் நம்பிக்கை )
2.பரம பாகவத பக்தர்களிடம் பழகுதலில் விருப்பம்
3.ஆன்மீக சிந்தையில் ஈடுபட்டு மனதின் அழுக்கைப் போக்குதல்
4. தீய பாவங்களை களைதல்
5.ஆன்மீக சாதனைகளை விடாமுயற்சியுடன் செய்தல்
6.ஆன்மீக சாதனைகளில் பேராவல் கொண்டிருத்தல்
7.ஆன்மீக சாதனைகளில் தீவிரமாக ஈடுபடுதல்
திவ்ய தேசங்களாக மதுரா, துவாரகை , கோகுலம் போன்றவற்றை தியான நிலையில் கண்டு உலகிற்கு முதன் முதலில் எடுத்துரைத்தவரும் இவரே என்று நம்பப்படுகிறது. இந்தியா முழுதும் நடை பயணம் மேற்கொண்டு கிருஷ்ண நாம மந்திரத்தை உபதேசித்தவர் பூரி ஜெகன்னாநாதர் ஆலயத்தில் மகா சமாதி அடைந்தார்.
கண்ணனும் ராதையும் ஒருங்கே அவதரித்த வடிவமே கிருஷ்ண சைதன்ய வடிவம் . கோபியர்களின் அன்பையும் ராதையின் உயர்ந்த நிலையையும் உபதேசத்தாலும் அனுபவத்தாலும் உலகிற்கு எடுத்துக் காட்டி அதன் உண்மையை நிலை நாட்டும் நோக்கத்துடன் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று சைதன்ய மஹா பிரபு அவதரித்தார். இவ்வருடம் மார்ச் மாதம் 21ம் நாள் சைதன்ய மகா பிரபு ஜெயந்தி உலகம் முழுதும் கொண்டாடப்பட்டது.
மூலம் : ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்
சொன்னவர் : துளசி
Comments
Post a Comment