அனுமார் ஜெயந்தி

பொன்னிற்கரசன் குபேரனின் அவையில் இருக்கும் அப்சரஸ்களில் ஒருவளான  புஞ்சஸ்தலா தேவலோகத்திற்கு வருகை தந்திருக்கும் துருவாச முனிக்கு பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டாள். கோபத்திற்கு பெயர்போன துருவாசரிடம் மிகவும் கவனமாக தனக்கிடப்பட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தாள்  புஞ்சஸ்தலா. எதிர்பாரா விதமாக யாகத்திற்காக அவள்  கைகளில் வைத்திருந்த  அரணிக்கட்டைகளில் ஒன்று கீழே விழ அவ்வொலியை பொறுக்க முடியாத துருவாச முனி " மந்தியைப் போல் சுய கட்டுப்பாடற்று வேலை  செய்கிறாயே?! நீ பூலோகத்தில்
வானர  குடும்பத்தில் பிறக்கக் கடவாய் " என்று சபித்து விட்டார்.

அறியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?! என்று கதறி அழுதாள் புஞ்சஸ்தலா. குபேரனும் தன் அவையில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். தனக்கு சாபவிமோசனமே கிடையாதா?! என்று கலங்கி நின்ற புஞ்சஸ்தலாவிடம்  " கவலை கொள்ளாதே... வானர ரூபத்தில் நீ ஓர் ஆண் மகனை ஈன்றெடுப்பாய்...அவன் பூலோகத்தில் அவதரிக்க இருக்கும் பாற்கடல் வாசனுக்கு அன்புக்குரியவனாவான்... நீயும் சாப விமோசனம் பெறுவாய் " என்று உறுதி அளித்தார்.

பூமியில் அஞ்சனையாக பிறந்த புஞ்சஸ்தலா வானர  அரசர்களில் ஒருவனான கேசரி நந்தனை மணந்தாள். இருவரும் பல வருடங்கள் பிள்ளைப் பேறின்றி  வருந்தினர் பின் சிவ பெருமானின் அருளால் அஞ்சனை கற்பமுற்றாள். கர்பவதியான அஞ்சனை தன் தோழியும் வாலி மகாராஜனின் மனைவியுமான தாராவின் அரண்மனையில் சிறிது காலம் ஓய்வெடுக்கக் சென்றாள்.

தன் அழிவிற்கு காரணமாக இருக்கப் போகிறவனின் ஜனனம் நிகழப்போவதை நாரத முனியின் மூலம் அறிந்த ராவணன் தன் நண்பனான வாலியின் அரண்மனைக்கு விரைந்தான். சந்திர உபாசனையில் மூலம்  தான் பெற்ற அம்பை வாலியிடம் கொடுத்தான். வயிற்றிலே கருவை அழிக்க தனக்கு உதவ வேண்டும் என்றும்  வேண்டிக்கொண்டான். அவ்வாறே மாய அம்பு அஞ்சனை அறியாமலேயே அவள் வயிற்றிற்குள் செலுத்தப்பட்டது ஆனால் அவ்வம்பையே குண்டலமாக மாற்றி தன் காதுகளில் அணிந்த வண்ணம் மூல நட்சத்திரத்தில் பிறந்தார் பஞ்சரங்கபலி  அனுமார். வாயு தேவனின் அருளும் பெற்றிருந்தமையால் வாயு புத்திரன் என்றும் அறியப்பட்டான். அஞ்சனையும் சாப விமோசனம் பெற்று மானுட உருவம் பெற்றாள்.

துடிப்பும் துணிவும் மிக்கவனாக வளர்ந்து வந்த அனுமான் ஒரு நாள் தனக்கு மிகவும் பசி எடுப்பதாக தன் அன்னையிடம் கூறினான். அவனிற்காக தான் கனிகளை  கொண்டு வருவதாகக் கூறிச் சென்றாள் அஞ்சனை. அங்கு சிவந்து பிரகாசித்துக் கொண்டிருந்த சூரியனைக் கண்ட அனுமானோ " இதோ இருக்கிறது இனிக்கும் கனி" என்று பறந்து சென்று சூரியனை விழுங்கிவிட்டான். அதே சமயம் சூரியனை மறைத்து கிரகணத்தை உண்டாக்க அங்கு வந்த  ராகுவோ  குழம்பிப்போய் இந்திரனிடம் விரைந்தான்.

என் பணியை நிறைவேற்ற வேறு எவரையோ நியமித்து விட்டீர்களே?! என்று இந்திரனிடம் முறையிட்டான் ராகு. எதுவும் புரியாத இந்திரன் சினம் கொண்டு   சூரியனை விழுங்கிய சிறுவனை தன் வஜ்ராயுதத்தால் தாக்கினான். தன் முகவாயிலும் தாடையிலும்  வெட்டுண்ட அனுமான் மயங்கி கீழே விழுந்தான் இதனால் கோபமடைந்த வாயு பகவான் அனுமனோடு ஓர் குகையில் சென்று அடைந்து கொள்ள அண்ட சராசரமே காற்றின்றி ஸ்தம்பித்தது. தேவர்கள் அனைவரும் மும்மூர்திகளிடம் சென்று முறையிட்டனர்.

மும்மூர்த்திகள் தேவர்கள் புடை சூழ வாயுவை சந்தித்தனர். " ஒன்றுமறியாத பாலகனை வஜ்ராயுதத்தால் தாக்கி விட்டீர்களே?! இவன் இனி  உயிர்த்தெழ முடியுமா?! என்று முறையிட்டான் வாயுதேவன். மும்மூர்த்திகளும் அனுமனை உயிர்பெறச் செய்தனர். இனி வஜ்ராயுதத்தால் அனுமனிற்கு அழிவு கிடையாது என்று இந்திரனும் பிரம்மாஸ்திரம் அனுமனைத் தாக்காது என்று பிரம்மனும் வாக்களித்தனர். பிற தேவர்களும் தங்கள் அருளை அனுமனுக்கு அளிக்க  சிரஞ்சீவியாக ஆனான் அனுமான். என்னுள் இருக்கும் அனைத்து சக்தியும் உனக்கும் கிடைப்பதாக என்று சிவபெருமானும்  வரமளித்ததால் நாம் அனுமனை ருத்ர அவதாரமாகவும்  வழிபடுகிறோம்.

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத அமாவாசை தினத்தன்று மூல நட்சத்திரத்தில் அனுமார் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. நம் மன வலிமையையும் உடல் வலிமையையும் மேம்பட அனுமானை பிரார்த்திப்போமாக. ஜெய் பஜ்ரங்கபலி !!!

சொன்னவர் - துளசி 

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..