மஹா சிவராத்திரி

அரசன் ஹிமவானுக்கும் அரசி மைனாவதிக்கும் மகளாக பூமியில்  அவதரித்தாள்  சக்தி. பார்வதி என்று பெயரிடப்பட்டு அரண்மனையில் வளர்ந்த அவள்  கன்னிப்பருவதை அடைந்ததும் தான் மணக்கப்போகும் மணாளனாக கைலாயம் ஆளும் சிவபெருமானை மனதில் வரித்துக்கொண்டாள். அதன் பொருட்டு மகேஸ்வரனை நோக்கி தவம் செய்ய முடிவுசெய்தாள். தன் மகளிற்காக ஓர் தவக்குடிலை ஹிமவான் அமைக்க அங்கு பார்வதி முக்கண்ணனை நோக்கி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யத்துவங்கினாள். தவம் கனிந்தது. தவத்துக்குரியோன் அவள் முன் தோன்றுவதற்குப்  பதிலாக ஓர் சிவயோகி தவக்குடிலை நோக்கி வருவதைக் கண்ட பார்வதி அவரை வணங்கி அவருக்கு வேண்டிய  பணிவிடைகளைச் செய்தாள்.

பார்வதியின் உபசரிப்புக்களை கனிவுடன் ஏற்றுக்கொண்ட யோகி அவளை நோக்கி சில வினாக்களை எழுப்பினார். " அம்மா நீ விரும்பும் மகேஸ்வரனை நான் அறிவேன். உன் விருப்பம் சரியென்று நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவனிடத்தில் என்ன குறை என்கிறாயா?! நீ கைப்பிடிக்க எண்ணும் அவன் பயங்கரமான பாம்பையே கங்கணமாக கையில் அணிந்திருப்பவன்". "அம்மா நன்றாக சிந்தித்துப் பார். நீ உடுக்கப்போவதோ அன்னப்புள்ளியின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டாடை ஆனால் அவன் இடை அணிந்திருப்பதோ அருவருக்கத்தக்க குருதி சொட்டிக்கொண்டிருக்கும் யானைத்தோல்.

"நீ இருப்பதோ எல்லா போகப்பொருட்களும் நிறைந்த அரண்மனை. உன் பாதம் நோக்கக்கூடாதென்று உன் தந்தையோ நீ உலாவும் இடங்களில்  மலர்களை தூவி வைத்துள்ளான் ஆனால் நீ வரித்துள்ள கணவன் வாழும் இடமோ அப்பப்பா...மயிர்கள் சிதறிக்கிடக்கும் மயான பூமி. உன் விரோதி கூட உனக்கு இத்தகைய நிலையை உருவாக்க மாட்டான். உன் நலத்தில் நாட்டம் கொண்ட என்னால் எப்படி இக்கோரிக்கையை ஒப்புக்கொள்ள முடியும்?!" என்று வினவுகிறார்.

"சந்தனம் பூசிய உன் திருமேனியில் அவனுடைய மார்பிலிருக்கும் சாம்பல் படிவது பாவம். நீ அவனை மணமுடித்தாயானால் அவனுடன் தம்பதி சமேதராக உலாவர உன் தந்தையார் ஓர் கம்பீரமான யானையை உனக்கு  அளிப்பார் ஆனால் அவனிடம் அக்கிழ மாட்டைத் தவிர வேறொன்றும் இல்லை. உங்கள் இருவரையும் இக்கோலத்தில் காணும் மக்கள் கை கொட்டிச் சிரிப்பர். அழகிய சந்திரனே அவன் திரி சடையில் சிக்கி பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறான். நீயும் அவன் கைப்பிடியில் சிக்கி அந்நிலைக்கு ஆளாக வேண்டுமா?! கணவன் அழகனாக இருக்க வேண்டுமென பெண் விரும்புவாள். பணம் படைத்தவனாக இருக்க வேண்டும் என்று பெண்ணின் தாயும், படித்தவனாக இருக்கவேண்டுமென்று தந்தையும் , நற்குலத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும் என்று உற்றாரும் உறவினரும் சிந்திப்பர். இது உலகியல் வழக்கு. ஆனால் நீ விரும்பும் முக்கண்ணனோ இடைக்கச்சை அன்றி ஏதுமில்லாதன். விரும்பத்தக்க ஏதும் அவனிடத்தில் இல்லை " என்று சாதூரியமாக பேசி முடிக்கிறார் பிரமச்சாரி வேடத்தில் இருக்கும் சிவபெருமான்.

சிவபெருமானிடத்தில் முதிர்ந்த பக்தியும் அயராத அன்பும் கொண்டிருந்த பார்வதிக்கு கோபம் தலைக்கு ஏறியது. "பெருமானைப் பற்றிய  அருமைகளை தெரிந்து கொள்ளாமல் பிதற்றுகிறீர்...சிவ நிந்தனை செய்கிறீர்" என்று சிவயோகியின் விளக்கங்களை ஆணித்தரமாக மறுக்கிறாள் பார்வதி. உலக நிலையில் நின்று அவரை கருதுவது பொருந்தாது. இவ்வெல்லைகள் அனைத்தையும் கடந்தவர் அவர். அவரிடம் மங்களம் இல்லை என்கிறீரே?! இவ்வுலைகையே கட்டிக்காக்கும் பற்றற்ற  பரம்பொருளான அவருக்கு மங்களப் பொருட்கள் எதற்கு?! அவரின் செயல்களுக்கு காரணம் கற்பிப்பது எளிதன்று. நம் சித்தத்திற்கு அப்பாற்பட்டது. இதை அறியாத பேதைகளே அவரை நிந்தித்து பிதற்றுவார்கள்.

மயானத்தை உறைவிடமாகக் கொண்டவர் என்கிறீரே?! முவ்வுலகங்களையும் கட்டி ஆள்பவர் அவர் என்பதை அறிய மாட்டீர் போலும்" என்று பதில்  கூறிய பார்வதி " அவர் நடராஜராக ஆனந்த தாண்டவம் புரிகையில் அவர் உடலிலிருந்து சிதறிய சாம்பலை தேவாதி தேவர்களும் திருநீறெண்று  தங்கள் சிரத்தில் அணிவர். ஐராவதத்தில் பவனிவரும் இந்திரனே மண்டையோட்டு மாலையுடன் கிழ எருதில் அமர்ந்திருக்கும் ஏழை  சங்கரரின் பாதம் தொட்டு சென்னி சூடுபவனே  என்பதை அறியாதவரா தாங்கள்?! என்று தொடர்ந்தாள்.

"குலமற்றவர் என்றா அவரைக் கூறினீர்?! எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் பரமனுக்கு பிறப்பு எங்கனம் இருக்க முடியும்?! முடிவிலியான அவனுக்கு குலம் எவ்வாறு இருக்க முடியும்?!" என்று வாதிட்ட பார்வதி தவக்குடிலை விட்டு வெளியேற எத்தனிக்கையில் பிரம்மச்சாரி சிவபெருமானாக மாறினார். அவளை மணம் கொள்ள வருவதாக சொல்லி மறைந்தார்.

தன் தவம் முழுமை அடைந்ததையும் கைலாயநாதனே தம் கரம் கொள்ள வரவிருப்பத்தையும் தம் பெற்றோர்களிடம் கூறினாள் பார்வதி. மகிழ்ந்த அரசனும் அரசியும் தங்கள் மணமகனை வரவேற்கத்  தயாராயினர். மண நாளும் வந்தது. உடலில் சாம்பல் பூசி எருதின் மேல் அமர்ந்து வீதி உலா வரும் இவனா நம் மகளை மணம் கொள்ளப்போகிறான்?! என்று கலக்கமடைந்தனர். ஆனால் பார்வதியின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்ய இயலாது மகேஸ்வரனை வரவேற்க சென்ற அவர்கள் தேவாதி தேவர்கள் சூள  மாப்பிள்ளை கோலத்தில் இருந்த சிவ பெருமானைக் கண்டு அதிசயித்தனர்.

"பார்வதி வேறு யாருமல்ல...தன்னில் பாதியான சக்தியே...தன்னுடன் கைலாயம் வரும் நேரம் வந்துவிட்டது " என்று கூறி  அவரைக் கைப்பிடித்தார் மகேஸ்வரன்.  மணக்கோலத்தில் அனைவருக்கும் காட்சியளித்த சிவனும் பார்வதியும் கைலாயம் சென்று மறைந்தனர். அந்நாளையே நாம் மகா  சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். தென்னகத்தில் சங்கரன் கோவிலில் கோமதியாகவும் கன்னியாகுமரியில் பகவதியாகவும் அவதரித்த சக்தி ஒற்றைக்காலில் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து அவர் கைப்பிடித்தார் என்று தலபுராணங்கள் கூறுகின்றன.


மஹா சிவராத்திரி தினத்தில் உபவாசம் இருந்து, இரவு கண் விழித்து  நான்கு சாம  பூஜைகளை செய்ய வேண்டும் என்பது மரபு . உபவாசம் என்பது  உணவு உட்கொள்ளாது இருப்பது மட்டுமே அல்ல.    "இறைவன் அருகில் இருப்பது " என்றும் பொருள்படும்   . ஐந்து புலன்களை அடக்கி ஆளாமல் எவராலும் இறைவனடி சேர இயலாது ஆதலால் உபவாசம் என்பதில் புலனடக்கமும் அடங்கும் . அப்போது தான் நம் சிவராத்திரி விரதமும்  முழுமை பெரும் . எளிமையின் மறு உருவமே சிவ பெருமான் என்பதால் நாம் மிக எளிமையாகவே அவரை பூஜிக்கலாம் . சிவலிங்கத்தை நாமே அரிசி மாவு கொண்டும் அல்லது  நவதானிய லிங்கமாகவும் வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம் . முதல் சாமத்தில் பாலினாலும் இரண்டாம் சாமத்தில் தயிரிலும் மூன்றாம் சாமத்தில் நெய் மற்றும் நான்காம் சாமத்தில் தேனிலும் அபிஷேகம் செய்யலாம் . வில்வம் , விபூதி மற்றும் புஷ்பங்களைக் கொண்டு ஓம் நமசிவாய என்ற எளிய மந்திரம் மூலம்  எவரும் அர்ச்சிக்கலாம் . 

நாம் உண்ணும் காய்கறிகளையே  சடைமுடியான்  , காது , கழுத்து ,கை மற்றும் இடையில் ஆபரணமாக அணிகின்றான்  என்பதால்  இத்திருநாளில் நாம் நவதானியங்களை நெய்வேத்தியமாக சமர்ப்பிக்கிறோம் . சிவலிங்கத்தின் உருளையான மேல்பாகத்தில்  சிவனும்  , இடைப்பாகத்தில்  விஷ்ணுவும்  அடிப்பாகத்தில்  பிரம்மாவும் குடி கொண்டிருப்பதாகவும் லிங்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் மூன்று கோடுகள் பிரம்ம சூத்திரம் என்றும்  நம்பப்படுகிறது . மும்மூர்த்திகளும் ஒன்றரக் கலந்திருக்கும் லிங்கத்தை இந்நன்னாளில் பூஜித்து அவர்களின் ஆசியையும் அருளையும் பெற முயற்சிப்போம் .

பின்குறிப்பு : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி தினத்தன்று  சொக்கநாதருக்கும் சுற்றுப் பிரகாரங்களில் இருக்கும் எண்ணற்ற லிங்கங்களுக்கும் நான்கு சாம அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும்.

நாம் அனைவரும் ஒரு காலத்தில் வெண்ணெய் சாற்றிக் கொண்டிருந்த தடாதகைக்கும் நவகிரகங்களுக்கும் அருகில் சொக்கநாதர்  வெளிப்பிரகாரத்தில் அமைந்திருக்கும் சிவலிங்கத்திற்கு நடக்கும் இரவுப்  பூஜையின் நான்காவது சாம அபிஷேகங்களை மதுரை சௌராஷ்ட்ரா சமூகத்தைச்  சார்ந்த சோமி சந்ததியினர்  கடந்த 326 வருடங்களாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து கோலாட்டமும், தீபஒளி ஆட்டமும் வெகு விமரிசையாக நடைபெற சௌராஷ்ட்ரா மொழி பஜனை பாடல்களும் பாடப்பட்டு மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அங்கு குழுமும் பக்தர்களுக்கு சோமி குடும்பத்தார் சார்பில் பிரசாதமும் வழங்கப்படுகிறது.

சொன்னவர் : துளசி

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..