கூடாரவல்லி திருநாள்
மார்கழி மாதம் - மாதவன் நாமம் ஒலிக்காத இடங்கள் உண்டோ?! பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ரங்கநாதனை நினைத்து ஆண்டாள் " திருப்பாவை " பாடியதும் இம்மாதத்தில் தான். பன்னிரு ஆழ்வார்களில் ஓரே ஒரு பெண் ஆழ்வார் என்ற புகழையும் பெருமையையும் பெற்ற கோதை நாச்சியார் ஸ்ரீ வில்லிபுத்தூர் சன்னதியின் தோட்டத்தில் ஆடி மாத பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். சிறு வயது முதலே கண்ணனிடம் தீராப் பற்று கொண்ட கோதை, பெருமாள் அணிய வேண்டிய மலர் மாலையை தான் அணிந்து அவருக்களித்து "சூடிக்கொடுத்த சுடர் கொடி " ஆனாள்.
தன்னுடைய இள வயதிலேயே ஸ்ரீனிவாசனை நினைத்து பாசுரங்கள் பாடத் துவங்கினார் கோதை. மார்கழி மாதத்தில் தினமும் ஓர் பாசுரம் என்று அவர் பாடிய முப்பது பாசுரங்கள் "திருப்பாவை " எனப்படுகிறது. மார்கழி மாதம் 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா..." என்னும் பாசுரத்தைப் பாடினார். அன்று இரவு தனக்கும் ரங்கநாதருக்கு திருமணம் நடப்பது போன்ற கனவினைக் கண்டார். தனது கனவு நனவாகும் தருணத்தை எண்ணிக் காத்திருந்தார்.
காலங்கள் கடந்தன. பெரியாழ்வார் தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் ஆனால் ஆண்டாளோ மாலை மணிவண்ணனை அன்றி வேறு எவரையையும் தான் மணம் செய்து கொள்ள இயலாது என்று கூறிவிட மனம் வருந்திய பெரியாழ்வார் "மனிதப் பிறவியான நீ இறைவனை மணப்பது சாத்தியமல்ல " என்று எடுத்துரைத்தார். அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய ரங்கநாதன் " கோதையைக் கைப் பிடிப்பவன் நானே... அவளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வா " என்று உத்தரவிட்டார். அவ்வாறே கோதையும் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டாள். செல்லும் வழியில் கோதை பல்லக்கில் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டனர். பெரியாழ்வாரும் செய்வதறியாது திகைத்து கண்ணீர் விட்டுக் கதறி அழ, அவருக்கு காட்சி அளித்தார் எம்பெருமான் கோவிந்தன். அங்கு ரங்கநாதனின் காலடியில் அமர்ந்து சேவை செய்து கொண்டிருந்த கோதையைக் கண்டார். ஆனந்தம் அடைந்தார். கோதையாகப் பிறந்தவள் தெய்வத்தின் சேவடியில் ஆண்டாள் ஆனாள்.
ஆண்டாளின் பிறந்த ஸ்தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரிலும் அனைத்து ஆண்டாள் ஸ்தலங்களிளும் மார்கழி 27-ம் நாள் கூடாரவல்லித் திருநாள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மணமாகாத பெண்கள் இம்மாதத்தில் திருப்பாவையைப் பாடி ஸ்ரீ ரங்கனை தொழுவார்களேயானால் அவர்களுக்கேற்ற மணவாளன் அமைவான் என்பது ஐதீகம். அனைவரும் முக்தி வேண்டி முர ஹரியை பிரார்த்திப்போம்.
சொன்னவர் : துளசி

Comments
Post a Comment