ஹோலிப் பண்டிகை
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக " ஹோலிப் பண்டிகை"
உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மாசி மாத பௌர்ணமியில் மக்கள் பல வண்ணப் பொடிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவியும், இரவில் வீதிகளில் தீ வளர்த்து அதைச் சுற்றி ஆடிப் பாடியும் இப்பண்டிகை நாளில் மகிழ்கின்றனர். புராணங்களில் ஹோலிப் பண்டிகை கொண்டாடுவதற்காகக் கூறப்படும் காரணங்கள் என்ன?! பின்புலக் கதைகள் யாவை?! பார்ப்போமா?!
திரேதா யுகத்தில் வாழ்ந்த அரக்ககுல அரசன் இரணிய கசிபு தானே கடவுள் என்றும் மறுப்பவர்களை அடக்கியும் அழித்தும் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு மகனாகப் பிறந்த பிரகலாதனோ "எங்கும் எதிலும் இருப்பவன் ஹரியே " என்று ஹரி நாமம் பாட , அவன் மேல் கடும் கோபம் கொண்ட இரணியகசிபு அவனைக் கொல்ல பல முறை முயன்று தோற்ற பின் கடைசியாக தன்னுடைய தங்கையான " ஹோலிகா"- வை வரவழைத்தான். ஹோலிகா அக்னி தேவனின் அருள் பெற்றவள். அனலால் அவளுக்கு அழிவில்லை என்பதால் நகர் மன்றின் நடுவே பெரும் சிதை மூட்டப்பட்டது அதில் ஹோலிகா தன் மடியில் பிரகலாதனை ஏந்திய வண்ணம் அமர்ந்துகொண்டாள். அதில் எரிந்து அழியப்போவது தன் மகன் மட்டுமல்ல அவன் கூறும் ஹரி நாமமும் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தான் இரண்யகசிபு. ஆனால் சிறிது நேரத்தில் அலறியவண்ணம் எரிந்து இறந்து கிடந்த ஹோலிகாவையும், ஒரு சிறிய காயமின்றி வெளிவரும் பிரகலாதனையும் கண்டு அதிர்ச்சி அடைந்தான். "தான் கூறிய ஹரி நாமமே தன்னைக் காத்தது - அனைத்திற்கும் மேலானது அதுவே" என்று கூறிய தனது மகனைக் கண்டு செய்வதறியாது திகைத்தான். அந்நாளே பிற்காலத்தில் "ஹோலிப்பண்டிகை"- யாகக் கொண்டாடப்படுகிறது.
கலி யுகத்தில் சூரபத்மனின் கொடுமைகளைத் தாள முடியாத தேவர்கள் கடும் அல்லலுற்றனர். அவனை அழிக்க சிவ புதல்வனாலே முடியுமாதலால் கைலாயத்தை நோக்கி விரைந்தனர். சதியின் மறைவிற்குப் பின் இவ்வுலகப் பற்றைத் துறந்து கடும் தவத்தில் மூழ்கி இருந்த சிவபெருமானைக் கண்டு செய்வதறியாது நின்ற இந்திரனின் மனதில் ஓர் யோசனை உதித்தது. அதன்படி மன்மதனை அழைத்து " சதியாக மறைந்த சக்தி, காமாட்சியாகப் பிறந்து சிவ பெருமானுக்காக பூலோகத்தில் காத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் கைலாயநாதனோ பல ஆண்டுகளாக ஊழ்கத்தில் ஆழ்ந்து இருக்கிறார். அவர்களுக்கு பிறக்கவிருக்கும் புதல்வனின் மூலமே சூரபத்மனின் அழிவு நிகழும் என்பது விதி. ஆகையால் உன் உதவி தேவைப்படுகிறது" என்று கூறினார்.
"ஐய்யோ...அவரின் தவத்தைக் கலைத்தால் அவரின் சினத்திற்கு பலியாவேனே" என்று அலறிய மன்மதனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் தேவர்கள். கைலாயத்தை அடைந்த மன்மதன் தன் மலர் வில்லில் மலர் அம்பைத் தொடுத்து சிவ பெருமானின் மேல் எய்தினார். தவம் கலைந்த சிவபெருமான் கோபத்தில் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து எதிரிலிருந்த மன்மதனை எரித்து சாம்பலாக்கிவிட்டு மீண்டும் தவத்தில் மூழ்கினார். நடந்ததை அறிந்த தேவர்கள் சிவபெருமானிடம் மன்மதனின் இச்செய்கைக்கு விளக்கம் அளித்தனர். மன்மதனின் மனைவியான ரதியும் தன் கணவனை மீட்டருளுமாறு இறைஞ்சினாள். அப்புலம்பலைக் கேட்டு கண்விழித்த சிவபெருமான் மன்மதனின் மலர்கணையால் பனிமூடிய கைலாயமே பூத்துக் குலுங்கும் சோலையாக காட்சியளிப்பதைக் கண்டு முகம் மலர்ந்தார். மன்மதன் உயிர்மீள்வான் என்றும் வாக்களித்தார். மூன்று நாட்களுக்குப் பின் உயிர் மீண்ட மன்மதன் (ரதியின் கண்களுக்கு மட்டும் தெரிபவனாக) உருவமற்றவனாக மாறினான். மன்மதன் எரியுண்ட அத்தினம் "காமதகனம்" என்றும் "ஹோலிப்பண்டிகை" என்றும் பின்னாளில் கொண்டாடப்படுகிறது.
ஹோலித் திருநாளில் நம் மனதில் குடிகொண்டிருக்கும் தீய எண்ணங்களை (தீயில் எரிப்பது போல) விலக்கி நம்மை தூய்மை செய்து கொள்வதோடு...வண்ணமிகு நல் எண்ணங்களால் நம் மனதை நிறைத்துக் கொள்வோம்.
சொன்னவர் : துளசி
சொன்னவர் : துளசி
Comments
Post a Comment