வைகுண்ட ஏகாதேசி

மார்கழி மாத அமாசையை  அடுத்த பதினோறாம் நாள்  அமரபட்ச திதியை வைகுண்ட ஏகாதேசியாக அனுசரிக்கிறாம். இந்நாளில் உபவாசம் இருந்து பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பரந்தாமனை பிரம்ம முகூர்த்தத்தில் வேண்டிக்கொள்வோமாயானால் இவ்வுலக பற்றை துறக்க நினைப்பவர்களுக்கு முக்தியும் மற்றவர்களுக்கு கர்ம வினை எதுவாக இருப்பினும் சொர்கத்தை அடையும் வரம் கிட்டுவது  நிச்சயம் என்றும் நம்பப்படுகிறது. அதற்கான பின்புலக் கதைகள் சில உண்டு...அவற்றில் முதலாவது :

ராகவ ராமனின் முன்னோடிகளில் ஒருவரான அம்பரீசன் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. விஷ்ணுவின் தீவிர பக்தனான அம்பரீசன் ஒவ்வொரு மாதமும் ஏகாதேசி திதி அன்று விரதம் இருந்து விஷ்ணு வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரின் பக்தியில் மகிழ்ந்த ஸ்ரீ ஹரி அவருக்கு காட்சி அளித்து  வேண்டிய  வரங்களை கேட்குமாறு கூற...அம்பரீசனோ ," இறைவா தாங்களை காணக் கிடைத்த இந்நிமிடத்தையே எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் ...இதை விட வேறு வரம் எனக்கு எதற்கு?! " என்று கூறிவிட்டான். அவனுடைய பதிலில் மனமகிழ்ந்த ஆழிவண்ணன் தன்னுடைய ஸ்ரீ சக்கரத்தை அம்பரீசனிடம் சிறிது காலம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு மறைந்தார். அம்பரீசனும் தன்னுடைய பூசை அறையில் வைத்து பூசை செய்து வந்தான்.

ஓர் நாள் அயோத்தியை அடைந்த துருவாச முனி அரசரிடம் - தான் தன் சிஷ்யர்களோடு நீண்ட பயணத்தில்  இருந்து வந்திருப்பதாகவும் அயோத்தியில் சிறிது காலம் தங்க இருப்பதாகவும் கூறினார். அம்பரீசனோ " மாமுனியே இது எனக்கு கிடைத்த பாக்கியம் ...தங்களை அரசு விருந்தினராக ஏற்று மரியாதை செய்வது என் கடமை" என்று கூறினார்.  " நான் நீராடி விட்டு வருகிறேன் பின் உணவருந்தலாம்" என்று கூறிவிட்டு சென்றார் துருவாசர். பல மணி நேரங்கள் சென்றும் அவர் திரும்ப வில்லை ...ஏகாதேசி விரதத்தில் இருந்த அரசரோ செய்வதறியாது திகைத்தார். தூவாதேசி பிரம்ம முகூர்த்தத்திற்குள் உணவருந்தி தனது உபவாசத்தை முடிக்கவில்லை எனில் விரதம் முழுமை பெறாது போகுமே என்று தனது அமைச்சரான வஷிஷ்ட முனியிடம் மனம் கலங்கினார். அவரோ " அரசரே தாங்கள் துளசி தீர்த்தத்தை அருந்தி தங்கள் விரதத்தை முடித்துக்கொள்ளலாம் " என்று ஆலோசனை வழங்க அவ்வாறே அரசனும் நடந்துகொண்டான்.

நீராடி விட்டு அரண்மனையை அடைந்த துருவாச முனியோ தன்னை விட்டு விட்டு அரசர் உணவருந்தி விட்டதாக  கடும் கோபம் கொண்டார். அரசரின் சமாதானங்களை கேட்க மறுத்து அவருக்கு தீச்சொல்லிட முனைந்த துருவாச முனியை எதிர் பாரா விதமாக சுதர்சன சக்கரம் தாக்க விரைந்தது. அதிலிருந்து தப்பிக்க பிரம்மாவை அடைக்கலமடைந்தார் துருவாச முனி ஆனால் பிரம்மா தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று கூறவே சிவனை அணுகி பின் கடைசியாக வைகுண்டத்தை அடைந்தார்.

பரந்தாமனோ " சக்கரம் இப்போது என் வசம் இல்லை ...அதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் தாங்கள் அம்பரீசனையே நாட வேண்டும்"என்று விடை அளித்தார். சக்கரம் விடாது துரத்த முடிவில் அம்பரீசனிடமே அடைக்கலம் அடைந்தார் துருவாச முனி. ஸ்ரீ சக்கரமும் துரத்துவதை நிறுத்தியது. பதறிப்போன அரசர் " மாமுனியான தாங்களா என்னிடம் மன்றாடுவது...என்ன இது விளையாட்டு என்று சக்கரதாரியான விஷ்ணுவை பிரார்த்திக்க  ...மும்மூர்த்திகளும் அங்கு காட்சி அளித்தனர். " நீ தவறாது கடைபிடித்த ஏகாதேசி விரதமே முனிவரின் சாபத்தில் இருந்து உன்னைக் காத்தது...அதற்காகவே சுதர்சன சக்கரத்தை உன்னிடம் அளித்து விட்டு சென்றோம்" என்று அச்சுதன் கூற... அம்பரீசன் சுதர்சன சக்கரத்தை  விஷ்ணுவிடமே திரும்ப  சேர்த்து விட்டார். அதை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ஹரி   ஸ்ரீ சக்கரத்தோடு  அவ்விடத்தை விட்டு மறைந்தார். இத்தகைய சிறப்பைப் பெற்ற மார்கழி மாத ஏகாதேசியே வைகுண்ட ஏகாதேசியாக அனுசரிக்கப்படுகிறது.

மூலம் : ஸ்ரீமத் பாகவதம் 

ஏகாதேசி விரதத்தின் மகிமை :

கந்தர்வர்களின் அரசன் சித்ராங்கதன் தீவிர விஷ்ணு பக்தன். மாதம் தவறாது ஏகாதேசி விரதம் அனுசரித்து நல்லாட்சி புரிந்து வந்தான். இதைக் கண்ட இந்திரன் எங்கே தன் பதவிக்கு ஆபத்து நேருமோ?! என்று பயந்து சித்ராங்கதனுக்கு எதிராக சூழ்ச்சி செய்தான். பக்திமானாகிய சித்ராங்கதனை மயக்க அப்சரஸ்களை அனுப்பி வைத்தான். அவர்களின் மாய வலையில் வீழ்ந்த சித்ராங்கதனை பாதாள லோகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சித்ராங்கதன் தன் நிலை மறந்தவனாக மது, மாது போன்ற சிற்றின்ப சூழலில் சிக்கினான். தன் குடிகளை மறந்த அரசன் நாடு திருப்புவதைப்பற்றிய எண்ணமின்றி இருந்தான்.

அரசனின் இந்நிலை கண்டு பெரும் துயருற்ற அரசி வேறுவழியின்றி ராஜ்யத்தை கவனித்துக்கொண்டிருந்தாள். அம்மாத ஏகாதேசி விரதமும் வந்தது. அரசர் இல்லாத நிலையிலும் குடிகள் தங்கள் வழக்கத்தை கைவிடக் கூடாது என்று நினைத்த அரசி அனைவருக்கும் விரத நாளை முரசறிவிக்கச் செய்தாள். " தசமி திதி  இன்று ஆரம்பமாவதால் மதியத்திற்கு மேல் யாரும் உணவருந்த வேண்டாம் என்றும் ஏகதேசி முடிந்து  தூவாதேசி திதியன்று முரசறிவுப்பு வந்ததும் உபவாசத்தை முடித்துக்கொள்ளலாம் என்றும் " வீதி வீதியாக முரசு கொட்டி அறிவிக்கப்பட்டது.

பாதாள உலகத்தில் மது மயக்கத்தில் இருந்த சித்ராங்கதனின் காதுகளில் இம்முரசறிவிப்பு விடாது ஒலித்துக்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் தன்னிலை உணர்ந்த அரசன் அப்சரஸ்களின் பிடியிலிருந்து தப்பி ஊர் திரும்பினான். அரசன் நகர் திரும்பியதை அறிந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். விரதத்தின் மகிமையை எண்ணி வியந்தனர்.

இவ்வாறாக ஏகாதேசி விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு மரணித்த பின் வைகுண்ட பதவி கிட்டுவது மட்டுமல்லாமல் வாழ்நாளிலும் சிற்றின்பத்தின்  பிடியிலிருந்து காக்கிறது விஷ்ணு பக்தி.

சொன்னவர் : துளசி 

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..