சிறை மீட்ட செல்வன்

அசோகவனத்தில் அடைபட்டிருந்த சீதையின் முன் ராம தூதனாக நின்ற அனுமனை விலங்கிட்டு ராவணனின் முன் நிறுத்தினர் காவல் வீரர்கள் . பழத்தோட்டத்தை துவம்சம் செய்த வாணரத்திற்கு என்ன தண்டனை வழங்கலாம்?!  என பலவாறு விவாதிக்கப்பட்டது . அதன் வாலில் எண்ணைத் துணியைக் கட்டி தீ வைத்து  விடுவதுதான் பொருத்தமான தண்டனையாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது . வாலில் கொழுந்துவிட்டு எரியும் தழலுடன் அரண்மனையிலிருந்து குதித்த அனுமான்  மரத்திற்கு மரம், சுவருக்கு சுவர் என தாவினார் நீரைத்தேடி. வாணரம் ஆயிற்றே !!! இலங்கை கொழுந்து விட்டு எரிந்தது . அரக்கிகளின் மூலம் விஷயமறிந்த சீதையோ அனுமனை நெருப்பிலிருந்து காக்க   அக்னி தேவனை  பிரார்தனை செய்து கொண்டாள்.  

" வாயு புத்திரரே எங்களைக் காப்பாற்றுங்கள்...எங்களை விடுவியுங்கள் " என்ற அபயக் குரல் துள்ளி ஓடிய  அனுமனின் காதுகளைத் துளைத்தது . இடைவிடாது ஒலித்த அவ்வொலியை தொடர்ந்த அனுமனால் அது எங்கிருந்து வருகிறது என்று யூகிக்க முடியவில்லை. அடுத்த சில நொடிகளில் " அனுமரே நாங்கள் இவ்வரண்மனையின் பாதாள சிறையில் அடைபட்டிருக்கிறோம் . இலங்கை வேந்தன் இராவணன் தான் எங்களை சிறைபிடித்திருக்கிறான். எங்கள் ஒன்பது பேரையும் தாங்கள் தான் விடுவித்து காத்தருள வேண்டும் " என்ற குரல் அசரீரி போல் ஒலித்தது. அரண்மனையின் பக்கவாட்டு சுரங்கப் பாதைவழியாக சிறையை அடையலாம் என்றும் சிறையின் சாளரங்கள் வழியாக கொழுந்து விட்டு எரியும் இலங்கையை கண்டு மகிழ்ந்திருக்கிறோம் என்றது  அபயக்குரல்.

குரல் காட்டிய சுரங்கப்பாதை வழியாக சிறையை அடைந்த அனுமன் ஒன்பது பேரையும் சிறை மீட்டார். தாங்கள் தேவர்கள் என்றும் தங்கள் சொல்லைக் கேளாது  இராவணன் தங்களை சிறை வைத்து பெரும் பாவம் செய்து விட்டான் அதற்கு தண்டனையாகவே இலங்கை எரிகிறது என்றும் கூறினர்.தேவர்களில்  ஒருவர் தான் இலங்கையிலேயே தங்கப் போவதாக கூறி   தேவலோகம் செல்ல  மறுத்து விட்டார். 


அங்கிருந்து சமுத்திரத்தை அடைந்த அனுமான் தன் வாலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை  அனைத்துவிட்டு சீதையைக் கண்ட மகிழ்ச்சியை ராகவராமனிடம் தெரிவிக்க விரைந்தோடினார்.

பின்குறிப்பு : அனுமன் விடுவித்த அந்த ஒன்பது  தேவர்களும்  நவ கிரகங்கள் தான். இலங்கையிலேயே தங்கி இராவணனின் அழிவிற்கு வித்திட்டவர் வேறு யாருமல்ல சனி பகவானே!!!


மூலம் : தர்ம சக்கரம் , ஜனவரி இதழ்

சொன்னவர் : துளசி

Comments

Popular posts from this blog

அவதாரங்களின் முடிவு - நரசிம்ம அவதாரம்

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

அயோத்திக்கும் திருவரங்கத்திற்கும் உள்ள தொடர்பு ..